சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி ஆகியவை இடையே நடைபெற்ற உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியினை இலங்கை A அணி, பெதும் நிஸங்க பெற்றுக்கொண்ட அபார சதத்தோடு சமநிலைப்படுத்தியுள்ளதோடு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரினையும் 1-0 என கைப்பற்றியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இலங்கை A மற்றும் அயர்லாந்து A அணிகள் இடையிலான நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இந்த போட்டியில், முதலில் துடுப்பாடிய அயர்லாந்து A அணி இமாலய மொத்த ஓட்டங்களான 508 ஓட்டங்களை குவித்து தமது ஆட்டத்தினை இடைநிறுத்தியிருந்தது.
இதன் பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை A அணியினர் 303 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்த காரணத்தினால், அவர்களுக்கு போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் பலோவ் ஒன் முறையில் மீண்டும் துடுப்பாடி இன்னிங்ஸ் தோல்வியொன்றினை தழுவும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது.
எனினும், அயர்லாந்து A அணியினை விட 205 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை மீண்டும் ஆரம்பித்த இலங்கை A அணியினர் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (15) நிறைவுக்கு வரும் போது 45 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களை குவித்திருந்தனர்.
இதன்படி 25 ஓட்டங்களால் மட்டுமே அயர்லாந்து A அணியினை விட போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் பின்தங்கி காணப்பட்டிருந்த இலங்கை A அணி இன்னிங்ஸ் தோல்வியடைவதில் இருந்து தப்பித்துக் கொண்டது. இலங்கை A அணிக்கு போட்டியின் மூன்றாம் நாள் நிறைவுக்கு வரும் போது பெதும் நிஸங்க 92 ஓட்டங்களுடன் நின்றும் கமிந்து மெண்டிஸ் 15 ஓட்டங்களுடன் நின்றும் ஆட்டமிழக்காமல் நம்பிக்கை தந்திருந்தனர்.
இதனை அடுத்து, போட்டியின் இன்றைய நான்காவதும் இறுதியுமான நாளில் தம்முடைய இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை இலங்கை A அணி தொடர்ந்தது.
இன்றைய நாளுக்கான போட்டி ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே சதம் கடந்த, பெதும் நிஸங்க தொடர்ந்தும் சிறந்த முறையில் துடுப்பாடி இரட்டைச்சதம் கடந்தார். இதேநேரம், கமிந்து மெண்டிஸும் அரைச்சதம் ஒன்றினை பெற்றுக் கொடுத்தார். இவர்களுக்கு மேலதிகமாக பின்வரிசையில் துடுப்பாடிய சாமிக்க கருணாரத்னவும் இலங்கை A அணிக்காக சதம் ஒன்றினை பெற்று வலுச்சேர்த்தார்.
இம் மூன்று வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு இலங்கை A அணி, தமது இரண்டாம் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்களை இழந்து 468 ஓட்டங்களை குவித்து மிகவும் உறுதியாக காணப்பட்டிருந்த போது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.
இலங்கை A அணியின் துடுப்பாட்டத்தில் இரட்டைச் சதம் தாண்டிய பெதும் நிஸங்க 28 பெளண்டரிகள் அடங்கலாக 274 பந்துகளில் 217 ஓட்டங்களையும், சதம் கடந்த சாமிக்க கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும், அரைச்சதம் பெற்ற கமிந்து மெண்டிஸ் 53 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.
இதேநேரம், அயர்லாந்து A அணியின் பந்துவீச்சில் ஜொனதன் கார்த் 3 விக்கெட்டுக்களையும், மார்க் அடைர் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பலோவ் ஒன் முறையில் துடுப்பாடிய போதிலும், இலங்கை A அணி இரண்டாம் இன்னிங்ஸில் சிறப்பாக செயற்பட்ட காரணத்தினால் அயர்லாந்து A அணிக்கு போட்டியின் வெற்றி இலக்காக 264 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த வெற்றி இலக்கினை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய அயர்லாந்து A அணி, போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 89 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. இதனால், போட்டியும் சமநிலை அடைந்தது.
அயர்லாந்து A அணியின் துடுப்பாட்டத்தில் ஜேம்ஸ் மெக்கொல்லம் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றிருந்ததோடு, இலங்கை A அணிக்காக லசித் அம்புல்தெனிய 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.
இப்போட்டி சமநிலையுடன் அயர்லாந்து A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரினை முதல் போட்டியில் கிடைத்த வெற்றியோடு கைப்பற்றியுள்ள இலங்கை A அணி, மீண்டும் அயர்லாந்து A அணியுடன் உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரில் ஆடுகின்றது.
இந்த உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (19) இதே மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெறுகின்றது.
ஸ்கோர் விபரம்
போட்டி முடிவு – ஆட்டம் சமநிலை அடைந்தது.




















