இலங்கை கிரிக்கெட் சபை, மாகாண அணிகளுக்கு இடையில் ஒழுங்கு செய்து நடாத்திவரும், SLC T20 லீக் தொடரின் ஒன்பதாவது ஆட்டத்தில் தசுன் சானக்கவின் சதத்தோடு கண்டி அணி காலி அணியினை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
திமுத் கருணாரத்ன தலைமையிலான காலி அணி, கண்டி அணியுடனான இப்போட்டியில் தோல்வியடைந்த காரணத்தினால் T20 லீக்கின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை முழுமையாக இழப்பதுடன், கண்டி அணி இப்போட்டியில் கிடைத்த ஆறுதல் வெற்றியுடன் தொடரை மொத்தமாக இரண்டு வெற்றிகளோடு முடித்துக் கொள்கின்றது.
குசல் பெரேராவின் வருகையால் கண்டி அணிக்கு முதல் வெற்றி
கண்டி பல்லேகலை சர்வதேச மைதானத்தில் இன்று (30) தொடங்கியிருந்த இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற காலி அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது அணிக்காக பெற்றுக் கொண்டார்.
இதன்படி, முதலில் துடுப்பாடத் தொடங்கிய காலி அணி இரண்டு வெற்றிகளுடன் காணப்பட்டதால் அவர்களுக்கு இறுதிப் போட்டிக்கு தகுதிபெற இது தீர்மானமிக்க ஆட்டமாக அமைந்து. இதனால், தொடக்க வீரரான குசல் மெண்டிஸ், மிகவும் அதிரடியான ஆரம்பத்தினை வழங்கினார். 17 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 5 பெளண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 43 ஓட்டங்களை குவித்த நிலையில் சரித் அசலங்கவின் சுழலுக்கு இரையாகினார். மெண்டிஸோடு அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்த காலி அணி ஒரு கட்டத்தில் 83 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும், இத்தருணத்தில் ஜோடி சேர்ந்த அசேல குணரத்ன மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோர் மிகச் சிறந்த இணைப்பாட்டம் (106) ஒன்றைக் கட்டியெழுப்பினர். பெரேரா – குணரத்ன ஆகியோரின் இணைப்பாட்ட உதவியோடு காலி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களைக் குவித்தது.
காலி அணியின் துடுப்பாட்டத்தில் அஞ்செலோ பெரேரா 36 பந்துகளுக்கு 4 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 47 ஓட்டங்களையும், அசேல குணரத்ன இறுதிவரை ஆட்டமிழக்காது நின்று 46 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இதேநேரம் கண்டி அணியின் பந்துவீச்சுக்காக வலதுகை சுழல் வீரரான சரித் அசலங்க வெறும் 14 ஓட்டங்களை விட்டுத்தந்து, 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.
பின்னர் சற்று சவாலான வெற்றி இலக்கான 197 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய கண்டி அணிக்கு ஆரம்ப வீரர்களாக வந்த குசல் ஜனித் பெரேரா மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் மோசமான தொடக்கத்தை தந்தனர்.
எனினும், கண்டி அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தசுன் சானக்க ஆகியோர் சதூர்யமான முறையில் மூன்றாம் விக்கெட்டுக்காக பெரியதொரு இணைப்பாட்டத்திற்கு வித்திட்டனர். இந்த இணைப்பாட்டத்திற்குள் தசுன் சானக்க தொடரில் மூன்றாவது தொடர்ச்சியான அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். பின்னர், 134 ஓட்டங்கள் வரையில் நீண்ட இந்த இணைப்பாட்டம் மெதிவ்ஸின் விக்கெட்டோடு முடிவுக்கு வந்த போதிலும், கண்டி அணிக்கு வெற்றி இலக்கை நெருங்க உதவியது. கசுன் ராஜிதவினால், போல்ட் செய்யப்பட்ட அஞ்செலோ மெதிவ்ஸ் 46 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.
மெண்டிஸ், ராஜிதவின் சிறப்பாட்டத்தால் காலி அணிக்கு வெற்றி
இதனையடுத்து தசுன் சானக்கவின் அதிரடி தொடர்ந்தது. பெளண்டரி எல்லைகளை தொடர்ச்சியாக பதம் பார்த்த தசுன் சானக்க தனது அதிரடி ஆட்டத்தினால் T20 போட்டிகளில் அவருடைய மூன்றாவது சதத்தினை கடந்ததோடு, இலங்கை அணி சார்பில் T20 போட்டிகளில் அதிக சதம் கடந்த மஹேல ஜயவர்தனவின் சாதனையையும் சமன் செய்தார்.
இவ்வாறாக தசுன் சானக்கவின் சதத்தின் உதவியோடு கண்டி அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை அடைந்தது.
கண்டி அணியின் துடுப்பாட்டத்தில், இறுதிவரை ஆட்டமிழக்காது நின்ற அவ்வணியின் வெற்றிக்கு உதவிய சானக்க 52 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 13 பெளண்டரிகள் அடங்கலாக 105 ஓட்டங்களை குவித்திருந்தார்.
காலி அணியின் பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்ட நாயகன் விருதும், அதிரடி துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய தசுன் சானக்கவுக்கு வழங்கப்பட்டது.
இப்போட்டியில் காலி அணி தோல்வியடைந்த காரணத்தினால், எந்தவித சிக்கல்களும் இன்றி தம்புள்ளை அணி மூன்று வெற்றிகளுடன் T20 லீக்கின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. தம்புள்ளை அணிக்கு முன்னர், கொழும்பு அணி T20 லீக்கின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய முதல் அணியாக மாறியிருந்தது.
ஸ்கோர் விபரம்
முடிவு – கண்டி அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க




















