மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி மற்றும் புனித அலோசியஸ் கல்லூரி 10 விக்கெட்டுகளினால் வெற்றி

254
U19 Cricket

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவடைந்த போட்டிகளில் முறையே புனித சேர்வேஷஸ் கல்லூரி மற்றும் புனித சில்வெஸ்டர் கல்லூரி அணிகளை தோற்கடித்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி மற்றும் புனித அலோசியஸ் கல்லூரி அணிகள் 10 விக்கெட்டுகளினால் இலகு வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டன.

இதேவேளை, ரோயல் கல்லூரியுடனான போட்டியில் லும்பினி கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொண்டதுடன், நாலந்த கல்லூரி மற்றும் புனித செபஸ்டியன் கல்லூரிகளுக்கிடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது.


புனித சில்வெஸ்டர் கல்லூரி எதிர் புனித அலோசியஸ் கல்லூரி

சிங்கர் கிரிக்கெட் தொடரின் குழு ‘C’ இற்கான போட்டியொன்றில் புனித சில்வெஸ்டர் கல்லூரியை எதிர்த்து புனித அலோசியஸ் கல்லூரி போட்டியிட்டது. முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று 55 ஓட்டங்களினால் முன்னிலை வகித்த புனித அலோசியஸ் கல்லூரி இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது.

அதன்படி 71.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 215 பெற்றிருந்த நிலையில், அவ்வணி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. நவிந்து நிர்மால் (62*) மற்றும் ரவிந்து சஞ்சன (54) அரைச்சதம் கடந்தனர். பந்துவீச்சில் துசித டி சொய்சா 3 விக்கெட்டுகளையும் மனுஜ பெரேரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

135 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த புனித சில்வெஸ்டர் கல்லூரி மீண்டும் துடுப்பாட்டத்தில் ஏமாற்றம் அளித்தது. தனித்து போராடிய அணித்தலைவர் மனுஜ பெரேரா ஆட்டமிழக்காது 57 ஓட்டங்கள் குவித்த போதிலும், அவ்வணி 135 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

மீண்டும் அற்புதமாக பந்துவீசிய ஹரீன் புத்தில 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கவிக டில்ஷான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஹரீன் புத்தில இப்போட்டியில் மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

வெறும் 1 ஓட்டத்தையே பெற வேண்டிய நிலையில் களமிறங்கிய புனித அலோசியஸ் கல்லூரி 2 பந்துகளில் இலக்கைக் கடந்து வெற்றியை சுவீகரித்தது.

முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடிய புனித சில்வெஸ்டர் கல்லூரி ஹரீன் புத்திலவின் (6/14) அபார பந்துவீச்சினால் 80 ஓட்டங்களுக்கு சுருண்டது. துடுப்பாட்டத்தில் சஷிக ரேமன் அதிகபட்சமாக 36 ஓட்டங்களை குவித்தார். ஹரீன் புத்திலவுக்கு அடுத்தபடியாக நிதுக மல்சித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வெஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 80 (45.3) – சஷிக ரேமன் 36, ஹரீன் புத்தில 6/14, நிதுக மல்சித் 3/25

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 215/6d (71.1) – நவிந்து நிர்மால் 62*, ரவிந்து சஞ்சன 54, துசித டி சொய்சா 3/75, மனுஜ பெரேரா 2/58

புனித சில்வெஸ்டர் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 135 (46) – மனுஜ பெரேரா 57*, நதீர பாலசூரிய 32, ஹரீன் புத்தில 6/67, கவிக டில்ஷான் 3/26

புனித அலோசியஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 1/0 (0.2)

முடிவு – புனித அலோசியஸ் கல்லூரி 10 விக்கெட்டுகளினால் வெற்றி.


புனித சேர்வேஷஸ் கல்லூரி எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

இத் தொடரின் குழு ‘C’ இற்கான போட்டியொன்றில் இவ்விரு கல்லூரி அணிகளும் மோதிக் கொண்டன. முதல் நாள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றிருந்த  மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக மேலும் 124 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

அபாரமாக துடுப்பெடுத்தாடிய லசித் குரூஸ்புள்ளே 123 ஓட்டங்களையும் ரவிந்து பெர்னாண்டோ 77 ஓட்டங்களையும் விளாச, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 302 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது. புனித சேர்வேஷஸ் கல்லூரி சார்பில் சஷிக துல்ஷான் 4 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டார்.

இதன்படி 88 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த புனித சேர்வேஷஸ் கல்லூரி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பந்துவீச்சில் அசத்திய பசிந்து மாதவ மற்றும் ரவிந்து பெர்னாண்டோ தலா 5 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்த, புனித சேர்வேஷஸ் கல்லூரி 99 ஓட்டங்களுக்கு சுருண்டது. துடுப்பாட்டத்தில் கேஷர நுவந்த அதிகபட்சமாக 34 ஓட்டங்கள் குவித்தார்.

12 ஓட்டங்கள் என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 2.1 ஓவர்களில் விக்கெட் இழப்பேதுமின்றி வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய புனித சேர்வேஷஸ் கல்லூரி 62.1 ஓவர்களில் 214 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. முதித ஹஷான் மற்றும் சந்தரு நெத்மின முறையே 71 மற்றும் 58 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் சச்சிந்து கொலம்பகே 4 விக்கெட்டுகளையும் ரவிந்து பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

போட்டியின் சுருக்கம்

புனித சேர்வேஷஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 214 (62.1) – முதித ஹஷான் 71, சந்தரு நெத்மின 58, சச்சிந்து கொலம்பகே 4/30, ரவிந்து பெர்னாண்டோ 3/42

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 302/6d (76.3) – லசித் குரூஸ்புள்ளே 123, ரவிந்து பெர்னாண்டோ 77, சஷிக துல்ஷான் 4/103

புனித சேர்வேஷஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 99 (36) – கேஷர நுவந்த 34, பசிந்து மாதவ 5/17, ரவிந்து பெர்னாண்டோ 5/52

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 12/0 (2.1)

முடிவு – மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 10 விக்கெட்டுகளினால் வெற்றி.


ரோயல் கல்லூரி எதிர் லும்பினி கல்லூரி

இன்று நிறைவுற்ற குழு ‘B’ இற்கான போட்டியொன்றில் ரோயல் கல்லூரியை எதிர்த்து லும்பினி கல்லூரி விளையாடியது. நேற்றைய தினம் 3 விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்றிருந்த ரோயல் கல்லூரி, முதல் இன்னிங்சில் முன்னிலை பெற மேலும் 194 ஓட்டங்கள் தேவையான நிலையில் களமிறங்கியது.

எனினும், சிறப்பாக பந்துவீசிய விமுக்தி குலதுங்க மற்றும் தனுக தாபரே 4 விக்கெட்டுகள் வீதம் சாய்க்க, ரோயல் கல்லூரி 152 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பாக கவிந்து சதுரங்க 63 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இதன்படி 108 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக்கொண்ட லும்பினி கல்லூரி எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோயல் கல்லூரி 57 ஓவர்களில் 286 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அதிரடியாக ஆடிய ஹெலித விதானகே ஆட்டமிழக்காது 111 ஓட்டங்களை விளாசினார்.

பந்துவீச்சில் பிரகாசித்த விமுக்தி குலதுங்க 7 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார். அவர் இப்போட்டியில் மொத்தமாக 11 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. போட்டி நிறைவடைய சிறிது நேரமே எஞ்சியிருந்த நிலையில் 179 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லும்பினி கல்லூரி விக்கெட் இழப்பேதுமின்றி 22 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது.

முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடிய லும்பினி கல்லூரி 61.1 ஓவர்களில் 260 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்திலும் பிரகாசித்த தனுக தாபரே 81 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். மேலும், கவின் பீரிஸ் 45 ஓட்டங்களையும், ரவீஷ சத்சர 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் கனித் சந்தீப மற்றும் கோதம ரணசிங்க தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 260 (61.1) – தனுக தாபரே 81, கவின் பீரிஸ் 45, ரவீஷ சத்சர 42, கனித் சந்தீப 3/51, கோதம ரணசிங்க 3/81

ரோயல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 152 (49.1) – கவிந்து சதுரங்க 63, விமுக்தி குலதுங்க 4/25, தனுக தாபரே 4/43

ரோயல் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 286 (57) – ஹெலித விதானகே 111*, தெவிந்து சேனாரத்ன 42, விமுக்தி குலதுங்க 7/141

லும்பினி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 22/0 (2.3)

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. லும்பினி கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


புனித செபஸ்டியன் கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி

இத் தொடரின் குழு ‘A’ இற்கான போட்டியொன்றில் புனித செபஸ்டியன் கல்லூரியும் நாலந்த கல்லூரியும் மோதிக் கொண்டன. நேற்றைய தினம் விக்கெட் இழப்பேதுமின்றி 33 ஓட்டங்களைப் பெற்றிருந்த நாலந்த கல்லூரி, முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக மேலும் 295 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

எனினும், அவ்வணி 101.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டி நிறைவுக்கு வந்தது. நாலந்த கல்லூரி சார்பாக தசுன் செனவிரத்ன 91 ஓட்டங்களையும் லக்ஷித ரசஞ்சன 58 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் பிரவீன் ஜயவிக்ரம 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதன்படி போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

நேற்று, முதலில் களமிறங்கிய புனித செபஸ்டியன் கல்லூரி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய மிஷென் சில்வா 121 ஓட்டங்களையும், நுவனிது பெர்னாண்டோ 67 ஓட்டங்களையும் விளாச,  அவ்வணி 327 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது. நாலந்த கல்லூரி சார்பாக உமேஷ்க டில்ஷான் 4 விக்கெட்டுகளையும் கலன பெரேரா 3 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 327 (72.2) – மிஷென் சில்வா 121, நுவனிது பெர்னாண்டோ 67, உமேஷ்க டில்ஷான் 4/62, கலன பெரேரா 3/73

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 302/7 (101.5) – தசுன் செனவிரத்ன 91, லக்ஷித ரசஞ்சன 58, கசுன் சந்தருவன் 42, பிரவீன் ஜயவிக்ரம 5/132

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.