இலங்கை அபிவிருத்தி அணியினர் 467 ஓட்டங்களுடன் முன்னிலையில்

203
sl v sa

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அபிவிருத்தி அணியினர் இரண்டாவது டெஸ்ட் போட்டியை தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் விளையாட்டு அணியுடன் ஞாயிற்றுக்கிழமை(21) பிரிட்டோரிய மைதானத்தில் ஆரம்பித்தனர்.

தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் விளையாட்டு அணி முதலாவது இனிங்ஸ் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 588 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணியின் தலைவர் டு புளூய் முதலில் தனது அணியினை துடுப்பெடுத்தாடப் பணித்தார். முதலாவது இனிங்ஸ் முடிவில் 5 விக்கட்டுளை இழந்து 588  ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.  

இதில் மோகோட்ஸி ஆட்டமிழக்காமல் 205 ஓட்டங்களை நிதானமாகப் பெற்றார். மறு முனையில் அகெர்மன் சிறப்பாக ஆடி 156 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அபிவிருத்தி அணியின் பந்து வீச்சைப் பொருத்தமட்டில் சதுரங்க 2 விக்கட்டுகளும், சக வீரர்களான அனுக் பெர்னாண்டோ, ரமேஷ் புத்திக்க மற்றும் தனஞ்சய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டினை வீழ்த்தினர்.

முதலாவது இனிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அபிவிருத்தி அணியினர் 1 விக்கட்டை மாத்திரம்  இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றபோது இரண்டாவது  நாள்  ஆட்டம் முடிவுக்குவந்தது.  

தொடர்ந்து தமது முதலாவது இனிங்கஸை மூன்றாவது நாளில்  ஆடிய இலங்கை அபிவிருத்தி அணியினர் 7 விக்கட்டுகளை  இழந்து 467 ஓட்டங்களைப் பெற்ற  நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம்  நிறுத்தப்பட்டது.

இதில் லஹிரு மிலந்த அதிரடியாக ஆடி  31 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 196 ஓட்டங்களைப் பெற்று இரட்டைச்சதத்தைத் தவறவிட்டார். மறுமுனையில் சந்துன் 78 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஹசன் துமிந்து 49 ஓட்டங்களைப் பெற்று அவரும் அரைச்சதத்தை தவறவிட்டார்.  

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணி சார்பில் பந்துவீச்சில் பூதாசா 77 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளைக்  கைப்பற்றினர். போர்டுன் 92 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

நாளைய இறுதி நாள் ஆட்டம் இலங்கை அபிவிருத்தி அணியினருக்கு சாதகமாக அமையுமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

போட்டியின் சுருக்கம் :

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணி – 588/5

மோகோட்ஸோ 205*, அகெர்மன் 156, டு ப்ளூய் 42, கோமாரி 59, டலியம் 30, குருகர் 53

சதுரங்க 2/95, அணுக்  பெர்னாண்டோ 1/111, புத்திக்க 1/42, தனஞ்சய 1/152

இலங்கை அபிவிருத்தி அணியினர் – 467/7

மிலிந்த 196, சந்துன் 78 , துமிந்து 49*

பூதாசா  3/77, போர்டுன் 2/92, நிட்டுலி 1/92