அபுதாபி T10 லீக்கில் பிரகாசித்த சாமிக்க, மதீஷ

718

ஐக்கிய அரபு இராச்சியம் கிரிக்கெட் சபையினால் 6ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான அபுதாபி T10 லீக் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

இம்முறை போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கிரென் பொல்லார்ட் தலைமையிலான நிவ்யோர்க் ஸ்டைகர்ஸ் அணியை 37 ஓட்டங்களால் வீழ்த்தி நிகொலஸ் பூரான் தலைமையிலான டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணி தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில், 3ஆவது இடத்துக்காக நடைபெற்ற போட்டியில் டீம் அபுதாபி அணியை வீழ்த்தி மொயின் அலி தலைமையிலான சேம்ப் ஆர்மி அணி வெற்றியீட்டியது. சேம்ப் ஆர்மி அணியில் இலங்கை வீரர்களான சாமிக்க கருணாரத்ன மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய வீரர்கள் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இம்முறை போட்டித் தொடரில் இலங்கையில் இருந்து நான்கு வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

இதில் பங்ளா டைரகர்ஸ் அணிக்காக விளையாடிய 19 வயது மதீஷ பத்திரன 3 போட்டிகளில் ஆடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதில் நிவ்யோர்க் ஸ்ட்ரைகர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், சேம்ப் ஆர்மி மற்றும் சென்னை பிரேவ்ஸ் அணிகளுடனான போட்டியில் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தார்.

இவரது பந்துவீச்சில் ரொமாரியோ ஷெபர்ட், இயென் மோர்கன், டுவைன் ப்ரிடோயரிஸ், டாவிட் மலான் உள்ளிட்ட முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மாலிங்கவின் பாணியில் பந்துவீசுகின்ற மதீஷ, இந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார். எவ்வாறாயினும், அபுதாபி T10 லீக்கில் கடந்த ஆண்டும் விளையாடிய அவர், இந்த ஆண்டு IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக விளையாடி திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல, அடுத்த ஆண்டு IPL தொடரில் சென்னை அணிக்காக விளையாட தக்கவைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இம்முறை அபுதாபி T10 லீக்கில் நொதர்ன் வொரியர்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரரான இசுரு உதான, 5 போட்டிகளில் ஆடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

34 வயதான இசுரு உதான, கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு பெற்றார். எனினும், அண்மையில் நிறைவடைந்த மேஜர் பிரீமியர் லீக்கில் தமிழ் யூனியன் கழகத்துக்காகவும், அதற்குமுன் இந்தியாவில் நடைபெற்ற லெஜண்ட் லீக் T20 தொடரில் இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்காகவும் அவர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமின்றி, இம்முறை LPL தொடரில் வனிந்து ஹஸரங்க தலைமையிலான கண்டி பெல்கோன்ஸ் அணியில் இசுரு உதான விளையாடி வருகின்றார்.

இதனிடையே, இலங்கை அணிக்காக அண்மைக்கலாங்களில் தொடர்ச்சியாக ஆடி வந்த சகலதுறை வீரரான சாமிக்க கருணாரத்ன, ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

>> LPL தொடரில் பங்கேற்றிருக்கும் தமிழ் வீரர்கள் யார்?; முழுமையான பார்வை | LPL 2022

இதனையடுத்து அபுதாபி T10 லீக் தொடரில் சேம்ப் ஆர்மி அணியில் இணைந்து கொண்ட அவர், 7 போட்டிகளில் ஆடி 3 விக்கெட்டுகளை வீழ்;ததியிருந்தார். இதில் நொதர்ன் வொரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களைக் குவித்து அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை நிறைவு செய்த கையோடு அபுதாபி T10 லீக்கில் சேம்ப் ஆர்மி அணியில் இணைந்து கொண்ட மஹீஷ் தீக்ஷன, 4 போட்டிகளில் ஆடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் நிவ்யோர்க் ஸ்டைகர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<