அதிர்ச்சி கொடுத்த இராணுவ அணி T20 மகுடம் சூடியது

172
Army sc v SSC

23 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான T20 கிரிக்கட் போட்டிகளின் இறுதிப் போட்டியில் சிங்கள கிரிக்கட் கழகத்தை தோல்வியுறச் செய்து இராணுவ அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி ஆர்.பிரேமதாச மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. என்.சி.சி கழகத்தை அரை இறுதியில் வெற்றிகொண்டு சிங்கள கிரிக்கட் கழகம் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய அதே நேரம், கொழும்பு கிரிக்கட் கழகத்தை வெற்றிகொண்டு இராணுவ அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிங்கள கிரிக்கட் கழகமானது முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இராணுவ அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ரந்திக அதிரடியாக ஆடி 11 பந்துகளில் 21 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

2ஆம் விக்கட்டுக்காக 31 ஓட்டங்களைப் பிரான்ஸிஸ்கொ மற்றும் சொய்சா இணைப்பாட்டமாகப் பெற்றனர்.

பிரான்ஸிஸ்கொ  32 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க,லியனகேவும் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

83 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இராணுவ அணி இழந்த நிலையில் 4ஆவது விக்கட்டுக்காக இணைந்த பெரேரா மற்றும் சொய்சா 45 ஓட்டங்களைப் பகிர்ந்து இராணுவ அணியை வலுப்படுத்தினர்.

வேகமாக துடுப்பெடுத்தாடிய சொய்சா 17 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்றார். விக்கட்டுகள் பறி போகும் நிலையில் நிதானமாக ஆடிய சொய்சா 39 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

ஏனைய வீரர்கள் பிரகாசிக்காத நிலையில் இராணுவ அணி நியமிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது. ஆர். மெண்டிஸ் சிங்கள கிரிக்கட் கழகம் சார்பாக 3 விக்கட்டுகளைப் பெற்றுக்கொண்டார்.

159 எனும் பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சிங்கள கிரிக்கட் அணியானது ஆரம்பம் முதலே தடுமாற்றத்திற்கு உள்ளானது. அணி 2 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முதலாவது விக்கட்டாக பானுக ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து குலசேகரவும் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கும் போது சிங்கள கிரிக்கட் அணி 5 ஓட்டங்களைப் பெற்றுக் காணப்பட்டது.

அணியின் 3ஆவது விக்கட்டாக ஓப்பத்த 6 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். 12 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து சிங்கள கிரிக்கட் கழகம் தடுமாற்றத்திற்கு உள்ளானது.

சஞ்சுல 13 ஓட்டங்களைப் பெற்று நம்பிக்கை கொடுத்தாலும் அவரும் ஆட்டமிழந்து அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தினார்.

5ஆவது விக்கட்டுக்காக இணைந்த வை.மெண்டிஸ் மற்றும் ஆர்.மெண்டிஸ் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து 4 விக்கட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டு இருந்த அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

எனினும் வை.மெண்டிஸ் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மீண்டும் சிங்கள கிரிக்கட் கழகம் நம்பிக்கை இழந்தது.

தனி ஒருவனாக போராடிய ஆர்.மெண்டிஸ் வேகமாக துடுப்பெடுத்தாடி 58 ஓட்டங்களைப் பெற்று இருந்த போது ஆட்டமிழந்ததன் மூலம் சிங்கள கிரிக்கட் கழகம் வெற்றி பெறும் வாய்ப்பை இழந்தது.

120 ஓட்டங்களை சிங்கள கிரிக்கட் கழகம் பெற்ற நிலையில் ரத்நாயக்க ஓடும் பொழுது ஆட்டமிழந்தார்.

பின் தொடர்ந்த துடுப்பெடுத்தாட வீரர்கள் அனைவரும் வந்த வேகத்திலேயே மைதானத்தை விட்டு வெளியேற சிங்கள கிரிக்கட் கழகம் 20 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.பெரேரா, பெர்னாண்டோ மற்றும் சொய்சா தலா 2 விக்கட்டுகள் வீதம் பெற்றுக்கொண்டனர்.

இறுதிப் போட்டியில் இராணுவ அணி, சிங்கள கிரிக்கட் கழகத்தை 26 ஓட்டங்களால் வெற்றி பெற்று 23 வயத்திற்குட்பட்ட T20 கிரிக்கட் கிண்ணத்தை வென்றனர்.

போட்டியின் சுருக்கம்

இராணுவ அணி – 158/8 (20):  தில்ஷன் த சொய்சா 34, லியோ பிரான்சிஸ்கோ 32 ரமேஷ் மெண்டிஸ் 3/18, டி விஜேசூரிய 2/33

எஸ்.எஸ்.சி. – 132/10 (20): ரமேஷ் மென்டிஸ் 58, தரிந்து ரத்நாயக்க 20

நளின் பெரேரா 2/21, நிர்மல் பெர்னாண்டோ 2/20, தில்ஷன் த சொய்சா 2/27