தனுஷ்க குணதிலக்க குற்றம் இழைக்கவில்லை – பொலிஸார் அறிவிப்பு

1658

நோர்வே நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக இலங்கை கிரிக்கெட்டினால் போட்டித் தடைக்குள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க, குற்றமற்றவர் என அந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்ற கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது.

இதேநேரம், குறித்த சம்பவம் தொடர்பில் தனுஷ்கவிடம் கொள்ளுப்பிட்டி பொலிஸார் நேற்றைய தினம் (25) வாக்கு மூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.

>> தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பம்

நோர்வே நாட்டைச் சேர்ந்த 23 வயதுடைய ஹெயிட் பேர்ஜி பெக்கென்சீன் என்ற பெண், தான் கொள்ளுபிட்டியவில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக, செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. இதில் போட்டியின் இரண்டாவது நாள் இரவு இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்கவின் அறையில் வைத்து அவரது நண்பர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என நோர்வேயைச் சேர்ந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் கடந்த 22ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக தனுஷ்க குணதிலக்கவின் நண்பரான சந்தீப் ஜூட் செல்லையா என்ற நபரை கொள்ளுப்பிட்டிய பொலிஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்திருந்தனர். இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனுஷகவின் நண்பர் சந்தீப் இன்று (26) கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

26 வயதான குறித்த நபர் தனுஷ்க குணதிலக்கவுடன் நெருங்கிப் பழகுபவர் என செய்திகள் வெளிவந்துள்ளதுடன், அவர் பிரித்தானிய கடவுச்சீட்டுடன் இலங்கையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், தனுஷ்கவின் நண்பரான சந்தீப் அடையாள அணிவகுப்பின்போது பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காட்டப்பட்டப்பட்டுள்ளார். சந்தீப்பிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து நோர்வே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துடன் தனுஷ்க குணதிலக்கவும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 21 ஆம் திகதி, நோர்வே நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் தனுஷ்க குணதிலக்கவினால், கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அழைத்துச் செல்லப்பட்ட பெண்களில் சில்ஜே நைய்லேன்ட் என்பவர் தனுஷ்கவுடன் சமூக வலைத்தளம் மூலமாக நட்பினைக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

>> டி-10 கிரிக்கெட் தொடரில் விளையாட தசுன் சானக்க ஒப்பந்தம்

பின்னர் தனுஷ்கவின் அழைப்பின் பேரில் அவருடைய நண்பரும் ஹோட்டலுக்கு வந்துள்ளதோடு, நால்வரும் ஒரு அறையில் தங்கியுள்ளனர். இந்நிலையில், தனுஷ்க உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரது நண்பரால் ஹெயிட் பேர்ஜி பெக்கென்சீன் என்ற பெண் பலாத்காரமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேநேரம், குறித்த முறைப்பாட்டை மேற்கொண்ட இரு பெண்களையும், விசாரணைகள் முடிவடையும் வரை நாட்டில் தங்கியிருக்குமாறும், அதற்கான தங்குமிட வசதிகள் மற்றும் அனைத்து தேவைகளையும் பெற்றுக்கொடுப்பதாக சுற்றுலா பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், அவ்விரண்டு பெண்களும் தம்மால் தொடர்ந்து இலங்கையில் தங்கியிருக்க முடியாது என தெரிவித்து சொந்த நாட்டுக்கு மீண்டும் திரும்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொள்ளுபிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வீரர்களுக்கான நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக, தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகை சர்வதேச போட்டிகளிலும் இருந்து இடைநிறுத்தம் செய்வதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தது.

எனினும் குறித்த சம்பவத்துக்கும் தனுஷ்க குணதிலக்கவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். தனுஷ்கவின் மீது குற்றமில்லை என தெரிவித்த அவர், அவருக்கு எதிராக எந்தவொரு விசாரணைகளும் தொடரப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, தான் எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவில்லை என தனுஷ்க குணதிக்கவும் தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை கிரிக்கெட் சபையின் நடத்தை விதிமுறையை மீறிய குற்றச்சாட்டுக்காக, தனிப்பட்ட ரீதியில் தனுஷ்க குணதிலக்கவிடம் கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாகவும், தனுஷ்க குணதிலக்கவின் மீது பல்வேறு நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இறுதியாக, கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இவருக்கு 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.  குறித்த காலப்பகுதியில் இந்திய தொடருக்கான பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, இரவு விடுதியொன்றுக்கு சென்ற குணதிலக, அடுத்தநாள் பயிற்சியை புறக்கணித்த குற்றச்சாட்டுக்காக இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த 6 போட்டிகள் கொண்ட தடை பின்னர் மூன்று போட்டிகளாக குறைக்கப்பட்டிருந்து.

>> ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பில் மனம் திறக்கும் கிளேன் மெக்ஸ்வெல்

இதேவேளை, இவ்வருடம் ஜனவரி மாதம் பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியின் போது, ஐசிசி இன் ஒன்றாம் நிலை சட்ட விதியினை மீறிய குற்றச்சாட்டுக்காக, அவரது நடத்தை புள்ளி ஒன்று குறைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<