தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நாளை ஆரம்பம்

99th National Athletics Championship – 2021

158

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயம் நாளை (30) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த சுமார் 500 மெய்வல்லுனர்கள் கலந்துகொள்ளவுள்ள இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரானது அரசாங்கத்தின் கொவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் 2ஆவது அத்தியாயம் ஒத்திவைப்பு

சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் வெற்றியீட்டியவர்களும் எதிர்காலத்தில் அடைவு மட்டங்களை எட்டக்கூடிய வீர வீராங்கனைகளை மாத்திரமே இப்போட்டியில் பங்கேற்கச் செய்வதற்கு இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முன்னணி மெய்வல்லுனர்கள் நாளை ஆரம்பமாகவுள்ள 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் பங்குபற்றவுள்ளளனர்.

இதன்படி, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த எஸ். புவிதரன், ஆர்.பி முருகைய்யா மற்றும் தீபிகா சந்திரகுமார், என். டக்சிதா ஆகிய வீரர்கள் கோலூன்றிப் பாய்தலிலும், ஆர். சதீஸன் (10 அம்சப் போட்டிகள்), கே அபிக்ஷான் (400 மீட்டர் தடைதாண்டல்) ஆகிய வீரர்களும் களமிறங்கவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம் ஆஷிக் (தட்டெறிதல்), மொஹமட் அசான் (10 அம்சப் போட்டிகள்), எம்.ஏ இஜாஸ் (200 மீட்டர்), பாசிஸ் உடையார் (200 மீட்டர்) மற்றும் மொஹமட் நிப்ராஸ் (1500 மீட்டர்) உள்ளிட்ட வீரர்களும் இம்முறை பங்குபற்றவுள்ளனர்.

2021-2022 இற்கான மெய்வல்லுனர் அட்டவணை வெளியீடு

இதனிடையே, மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வர்ன, டபிள்யூ வொட்சன் ஆகிய இருவரும் 10,000 மற்றும் 5,000 மீட்டர் ஓட்டப் போட்டிகளிலும், எம். சிவராஜன் (10,000 மீட்டர்), சி. அரவிந்தன் (800 மீட்டர்), சி. சந்திரதாசன் (300 மீட்டர் தடைதாண்டல்) உள்ளிட்ட வீரர்களும் இம்முறை தேசிய மெய்வல்லுனரில் களமிறங்கவுள்ளனர்.

அத்துடன், அண்மைக்காலமாக குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற மொஹமட் சபான் ஆண்களுக்கான 200 மற்றும் 100 மீட்டர் ஓட்டப் போட்டிகளிலும், சப்ரின் அஹமட் முப்பாய்ச்சல் போட்டியிலும் பங்குபற்றவுள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களை தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் இணைத்துக்கொள்ளவும் இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆசிய இளையோர் மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் நவம்பரில்

இதேவேளை, போட்டிகளின் முதலாவது நாளான நாளைய தினம் (30) ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஓட்டம், 200 மீட்டர், 800 மீட்டர், 5,000 மீட்டர் ஓட்டப் போட்டி, கோலூன்றிப் பாய்தல், தட்டெறிதல், முப்பாய்ச்சல் ஆகியனவும் பெண்களுக்கான 200 மீட்டர், 1,500 மீட்டர், 10,000 மீட்டர், முப்பாய்ச்சல், சம்மெட்டி எறிதல் ஆகியவற்றின் இறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இரண்டாம் நாளான 31 ஆம் திகதியன்று, ஆண்களுக்கான 10,000 மீட்டர், 1,500 மீட்டர், 400 மீட்டர் சட்டவேலி ஓட்டம், 3,000 மீட்டர் தடைத்தாண்டல், உயரம் பாய்தல், குண்டெறிதல், பத்து அம்சப் போட்டிகள் என்பனவும் பெண்களுக்கான 5,000 மீட்டர், 400 மீட்டர் சட்டவேலி ஓட்டம், நீளம் பாய்தல், கோலூன்றிப் பாய்தல், குண்டெறிதல், உயரம் பாய்தல் மற்றும் ஏழு அம்சப் போட்டிகள் என்பனவும் நடைபெறவுள்ளன.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<