நேற்று (25) நடைபெற்று முடிந்திருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் மெகா ஏலத்தில் ஆறு இலங்கை வீரர்கள் மொத்தமாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளனர்.
>>ஹஸரங்க, தீக்ஷனவை வாங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ்!<<
இரண்டு நாட்களாக சவூதி அரேபியாவின் ஜெத்தாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல். தொடர் மெகா வீரர்கள் ஏலத்தில், அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக வனிந்து ஹஸரங்க மாறியிருந்தார்.
ஹஸரங்கவினை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்திய நாணயப்படி 5.25 கோடி (இலங்கை நாணயப்படி 18.13 கோடி) ரூபாய்களுக்கு கொள்வனவு செய்திருந்தது. எனினும் ஹஸரங்கவினை விட அதிக விலைக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மூலம் மதீஷ பதிரன இந்திய நாணயப்படி 13 கோடி ரூபாய்களுக்கு (இலங்கை நாணயப்படி 44.89 கோடி) ரூபாய்களுக்கு ஏலம் நடைபெற முன்னரே தக்க வைக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
அதேவேளை இலங்கையின் மற்றுமொரு சுழல் வீரரான மகீஷ் தீக்ஸனவும் (இலங்கை நாணயப்படி 15.16 கோடி ரூபாய்களுக்கு) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மூலம் கொள்வனவு செய்யப்பட்டிருந்தார்.
ஐ.பி.எல். தொடரின் இரண்டாம் நாள் ஏலத்தில் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீர டெல்லி கெபிடல்ஸ் அணி மூலம் வாங்கப்பட்டிருந்தார். சமீரவினை இந்திய நாணயப்படி 75 லட்ச (இலங்கை நாணயப்படி 2.48 கோடி) ரூபாய்களுக்கு டெல்லி அணி வாங்கியிருந்ததோடு, இதே தொகைக்கு சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி மூலம் கமிந்து மெண்டிஸ் வாங்கப்பட்டார். அத்துடன் கமிந்து மெண்டிஸ் தனது கன்னி IPL தொடரில் ஆடும் வாய்ப்பினையும் பெற்றுக் கொண்டார்.
மாலிங்க பாணியில் பந்துவீசீம் நுவான் துஷார றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினால் இந்திய நாணயப்படி 1.6 கோடி (இலங்கை நாணயப்படி 5.52 கோடி) ரூபாய்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டதோடு, அறிமுக வேகப்பந்துவீச்சாளரான எஷான் மாலிங்க சன்ரைஸர்ஸ் அணியினால் 1.2 கோடி (இலங்கை நாணயப்படி 4.14 கோடி) ரூபாய்களுக்கு வாங்கப்பட்டிருந்தார்.
இம்முறை ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக இந்திய அணியின் முன்னணி விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ரிசாப் பாண்ட் மாறினார். ரிசாப் பாண்ட்டை லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் இந்திய நாணயப்படி 27 கோடி (இலங்கை நாணயப்படி 93.03 கோடி) ரூபாய்களுக்கு வாங்கியமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<