2 வருடங்களில் 3ஆவது தடவையாக இலங்கை சாதனையை முறியடித்த யாழ். வீரர்

60th Sri Lanka Army Athletics Championship 2025

86
60th Sri Lanka Army Athletics Championship 2025

இலங்கை இராணுவத்தினால் 60ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கடந்த 18, 19 மற்றும் 20 ஆகிய திகதகளில் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

இலங்கை இராணுவத்தில் உள்ள படைப் பிரிவுகளுக்கிடையில் நடத்தப்படுகின்ற இம்முறை போட்டிகளில் ஒரு இலங்கை சாதனை, ஒரு இலங்கை இராணுவ சாதனை மற்றும் 11 புதிய போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

இம்முறை இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வருடத்தின் அதி சிறந்த இராணுவ மெய்வல்லுனர் வீரருக்கான விருதை ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 20.52 செக்கனில் நிறைவுசெய்து, இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியை சேர்ந்த பணிநிலை சார்ஜன் அருண தர்ஷன தட்டிச் செல்ல,  பெண்கள் பிரிவில் அதி சிறந்த வீராங்கனைக்கான விருதை பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 52.86 செக்கனில் நிறைவுசெய்து, புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை இராணுவ மகளிர் படையைச் சேர்ந்த சார்ஜன் நதீஷா ராமநாயக்க பெற்றுக் கொண்டார். இந்த 2 வீரர்களும் கடந்த ஆண்டும் இதேபோல வருடத்தின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனைக்கான விருதை தட்டிச் சென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற இம்முறை இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கை மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் படையணி ஆண்களுக்கான ஒட்டுமொத்த சம்பியன்ஷிப்பை வென்றதுடன், இலங்கை இராணுவ பீரங்கி படையணி இரண்டாவது இடத்தைப் பெற்றது. இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண்களுக்கான சம்பியன்ஷிப்பை வென்றதுடன், இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

>>புவிதரன் போட்டிச் சாதனை; அசான், டக்சிதா, மிதுன்ராஜுக்கு தங்கம்

இதுஇவ்வாறிருக்க, இம்முறை இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் முறியடிக்கப்பட்ட ஒரேயொரு இலங்கை சாதனைக்கு சொந்தக்காரராக இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் அருந்தவராசா புவிதரன் மாறினார்.

குறித்த போட்டியில் 5.18 மீற்றர் உயரத்தைத் தாவிய புவிதரன், இதே மைதானத்தில் நிலைநாட்டிய தனது சொந்த இலங்கை சாதனையை ஒரு மீற்றரினால் முறியடித்ததுடன், கோலூன்றிப் பாய்தலில் இராணுவ சாதனையையும் முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இவர் கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இதே இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 5.17 மீற்றர் உயரம் தாவி இலங்கை சாதனை படைத்திருந்தார்.

அதேபோல, புவிதரன், இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷப்பில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 5.05 மீற்றர் உயர் தாவி, மைதான சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

யாழ்ப்பாணம், சாவக்கச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான புவிதரன் 2021இல் இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார். அவர் தற்போது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரலாகவும், அந்தப் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி வருகிறார். அதேபோல, இவரது பயிற்சியாளராக சாவக்கச்சேரி இந்துக் கல்லூரியின் கோலூன்றிப் பாய்தல் பயிற்சியாளரான கணாதீபன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இம்முறை இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவ மெய்வல்லுனர் அணிக்காக விளையாடி வருகின்ற கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசுகின்ற வீரர்கள் பதக்கங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

வக்ஷானுக்கு இரட்டை தங்கம்

இராணுவ காலாட் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மலையகத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷான், 14 நிமிடங்கள் 44.00 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். கடந்த ஆண்டும் இதே போட்டி நிகழ்ச்சில் வக்ஷான் தங்கப் பதக்கத்தை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதேபோல, ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த வக்ஷான், 3 நிமிடங்கள் 48.87 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இந்தப் போட்டியில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் நிப்ராஸ், போட்டி தூரத்தை 3 நிமிடங்கள் 49.05 செக்கன்களில நிறைவு செயது வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

பிரசானுக்கு முதல் தங்கம்

இம்முறை இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் இராணுவ காலாட் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட ஜெயகாந்தன் குகேந்திர பிரசான், தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். குறித்த போட்டியை 30 நிமிடங்கள் 58.90 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார். கடந்த ஆண்டும் குறித்த போட்டியில் பிரசான் தங்கப் பதக்கம் வென்ற போதிலும், அவருக்கு பதக்கத்தை இழக்க நேரிட்டது.

இதனிடையே, ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குகொண்ட பிரசான், போட்டி தூரத்தை 14 நிமிடங்கள் 44.08 செக்கன்களில் நிறைவு செயது வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் தேசிய சம்பியனான மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரனுக்கு, இம்முறை இராணுவ மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் 5ஆவது இடத்தையும், 5 ஆயிரம் மீற்றரில் 6ஆவது இடத்தையும் பெற்றுக்கொள்ள முடிந்தது.

குண்டெறிதலில் மிதுனுக்கு முதலிடம் 

ஆண்களுக்கான குண்டெறிதலில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட யாழ். பருத்தித்துறை ஹார்ட்லிக் கல்லூரியின் முன்னாள் மாணவரான சுசீந்திரகுமார் மிதுன்ராஜ், 15.86 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து தங்கப் பதக்கத்தையும், ஆண்களுக்கான தட்டெறிதலில் 43.81 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்று அசத்தினார்.

இறுதியாக, இவர் இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிபிப்பில் ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் 16.02 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து தங்கப் பதக்கத்தையும், ஆண்களுக்கான தட்டெறிதலில் 47.91 மீற்றர் தூரத்தை மிதுன்ராஜ் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் அசானின் வெற்றி 

ஆண்களுக்கான 10 அம்சப் போட்டியில் (decathlon) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சார்பில் களமிறங்கிய மொஹமட் அசான், 7044 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக 5ஆவது முறையாக இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 10 அம்சப் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த 103ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 10 அம்சப் போட்டியிலும் அவர் தங்கப் பதக்கமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

சபியாவிற்கு இரட்டை தங்கம்

பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சமிஞ்சைப் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட கண்டியைச் சேர்ந்த பாத்திமா சபியா யாமிக், 11.88 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அதேபோல, பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் அவர் தங்கப் பதக்கம் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

முன்னதாக, இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற 103ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிலும் அவர் பெண்களுக்கான 100 மீற்றரில் வெள்ளி; பதக்கத்தையும், பெண்களுக்கான 200 மீற்றரில் தங்கப் பதக்கத்தையும் வென்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ரதுஷான், சப்ரின், அரவிந்தன் அபாரம் 

இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ரவி ரதுஷான், 75.83 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகதரித்தார். குறித்த போட்டியில் அவரது அதிசிறந்த தூரப் பெறுமதி இதுவாகும்.

இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற 103ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிலும் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட சி. அரவிந்தன், போட்டியை ஒரு நிமிடம் 49.04 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தையும், அதே படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் களமிறங்கிய வெலிகவைச் சேர்ந்த சப்ரின் அஹமட், 15.82 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

ஆஷிக்கின் 12ஆவது பதக்கம் 

இம்முறை இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான தட்டெறிதலில் 43.49 மீற்றர் தூரத்தை எறிந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம் ஆஷிக் வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

இதன் மூலம் இராணுவ மெய்வல்லுனர் போட்டிகளில் தொடர்ச்சியாக 12 ஆவது வருடமாகவும் ஆஷிக் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.