விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான 43ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று மாத்தறை, கொடவில மைதானத்தில் நிறைவுக்கு வந்தது.

மெய்வல்லுனர் போட்டிகளின் மொத்த முடிவுகள்   

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 1000 இற்கும் அதிகமான மெய்வல்லுனர் வீர வீராங்கனைகளின் பங்குபற்றலுடன் இம்முறை நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் வருடத்தின் சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த நீளம் பாய்தல் வீரர் (7.83 மீற்றர்) ஜனக பிரசாத் விமலசிறி பெற்றுக்கொண்டதுடன், வருடத்தின் சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனைக்கான விருதை மேல் மாகாணத்தைச் சேர்ந்த முப்பாய்ச்சல் வீராங்கனை (13.32 மீற்றர்) விதூஷா லக்‌ஷானி பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், கடந்த 3 தினங்களாக நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் வருடத்தின் மிகச் சிறந்த அணிகளில் ஆண்களுக்கான சம்பியன் பட்டத்தை மேல் மாகாணமும், பெண்களுக்கான சம்பியன் பட்டத்தை தென் மாகாணமும் பெற்றுக்கொண்டது. இதேவேளை, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் 2 தேசிய சாதனைகளும், ஒரு போட்டி சாதனையும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோலூன்றிப் பாய்தலில் அனித்தா தேசிய சாதனை

Anitha Jegathiswaranபோட்டிகளின் முதல் நாள் காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜகதீஸ்வரன் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்து, இவ்வருடத்தில் தொடர்ச்சியாக 4ஆவது முறையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்தார்.

போட்டிகளின் ஆரம்பத்தில் 3.42 மீற்றர் உயரத்தைப் பாய்ந்து 2016ஆம் ஆண்டு அவரால் நிலைநாட்டப்பட்ட (3.41 மீற்றர்) போட்டி சாதனையை முறியடித்த அனித்தா, 2ஆவது முயற்சியாக 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய தேசிய சாதனை படைத்தார். எனினும் 3.50 மீற்றருக்காக அவர் மேற்கொண்ட முயற்சி மைதானத்தில் தீடீரென பெய்த மழையால் தடைப்பட்டது. எனினும் அதன்பிறகு அவரால் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

இதன்படி, கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் முதல்நாளில் தேசிய சாதனை படைத்த அனித்தா, இவ்வருடமும் போட்டிகளின் முதல் நாளில் தேசிய சாதனை படைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சம்மெட்டி எறிதலில் ஷானிகா தேசிய சாதனை

Shanika-Manoji

43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான சம்மெட்டி எறிதலில் தென் மாகாணத்தைச் சேர்ந்த ஷானிகா மனோஜி, தேசிய விளையாட்டு விழாவில் 2ஆவது தேசிய சாதனை படைத்த வீராங்கனையாக இடம்பிடித்தார். அவர் குறித்த போட்டியில் 48.76 மீற்றர் தூரம் எறிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முப்பாய்ச்சலில் விதூஷா போட்டி சாதனை

Vedusha Lakshani

பெண்களுக்கான முப்பாய்ச்சலில் தேசிய சாதனைக்குச் சொந்தக்காரியான விதூஷா லக்‌ஷானி, சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த போட்டி சாதனையை இன்று முறியடித்தார்.

இப்போட்டியில் மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட விதூஷா லக்‌ஷானி, 13.22 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய போட்டி சாதனை நிகழ்த்தி தங்கப் பதக்கம் வென்றதுடன், இவ்வருடத்திற்கான சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதையும் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த ப்ரபோதா பாலசூரிய, 12.66 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும், எஸ். துலாஞ்சலி, 12.61 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

கிழக்கு மாகாணத்துக்கு 5ஆவது இடம்

43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று நிறைவுக்கு வந்தது. இதில் கிழக்கு மாகாண அணி 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அண்மைக்காலமாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல வெற்றிகளை ஈட்டிவருகின்ற பொத்துவில்லைச் சேர்ந்த அஷ்ரப், நிந்தவூரைச் சேர்ந்த ஆஷிக், ஒலுவிலைச் சேர்ந்த ரஜாஸ்கான், திருகோணமலையைச் சேர்ந்த வொஷிம் இல்ஹாம் மற்றும் மொஹமட் பாஸில் உடையார் ஆகியோர் தாம் பங்குபற்றிய தனிப்பட்ட போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்திருந்த அதேநேரம், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டப் போட்டியில் கிழக்கு மாகாண அணிக்காக வரலாற்றில் முதற்தடவையாக தங்கப்பதக்கத்தையும் பெற்றுக்கொடுத்தனர்.

எனினும் கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் வருடத்தின் சிறந்த மெய்வல்லுனராகத் தெரிவான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மொஹமட் மிப்ரான், இம்முறை போட்டித் தொடரில் தோல்வியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் அண்மைக்காலமாக நட்சத்திர வீரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாணமும், வீர்ரகளின் நன்மைகருதியும், எதிர்காலத்தை கருத்திற்கொண்டும் அங்கு நீண்டகால குறைபாடாக இருந்து வருகின்ற அனைத்து வசிதகளையும் கொண்ட விளையாட்டு மைதானமொன்றை பெற்றுக்கொடுக்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தினால் இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டில் கிழக்கின் ஆதிக்கம் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

100 மீற்றரில் அஷ்ரப் வெண்கலப்பதக்கம், தடைதாண்டலில் இல்ஹாமுக்கு தோல்வி

இதேவேளை, குழுநிலைப் போட்டிகளில் கிழக்கு மாகாண அணி 3 சம்பியன் விருதுகளைப் பெற்றுக்கொண்டது. இதில் கூடைப்பந்து ஆண்கள் அணி, கிரிக்கெட் ஆண்கள் அணி மற்றும் கபடி ஆண்கள் அணி ஆகியன சம்பியன்களாக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கிற்கு ஒரேயொரு தங்கம்

கோலூன்றிப் பாய்தலில் தமது ஆதிக்கத்தை அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வருகின்ற வட மாகாண வீரர்கள், இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் எதிர்பார்த்தளவு வெற்றிகளைப் பெற்றுக்கொள்ளவில்லை. அதிலும் குறிப்பாக 100 இற்கும் குறைவான மெய்வல்லுனர் வீரர்களுடன் களமிறங்கிய வட மாகாண அணிக்கு இம்முறை போட்டித் தொடரில் ஒரேயொரு தங்கப்பதக்கத்தை மாத்திரமே வெற்றிகொள்ள முடிந்தது.

கடந்த வருடத்தைப் போல அந்ந மாகாணத்துக்காக தேசிய சாதனையுடன் முதல் தங்கப்பதக்கத்தை கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட அனித்தா ஜகதீஸ்வரன் பெற்றுக்கொடுத்தார்.

ஆனால் கடந்த 3 தினங்களாக 33 மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெற்றதுடன், இதன் அனைத்து போட்டிகளிலும் வட மாகாண வீரர்கள் கலந்து கொண்டிருந்தமை பாராட்டத்தக்க விடயமாகும்.

ஆனாலும் வட மாகாண வீரர்களின் திறமைகளை மேலும் அதிகரித்து அவர்களுக்கான வசிதகளைப் பெற்றுக்கொடுக்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தினால் நிச்சயம் எதிர்வரும் காலங்களில் வட மாகாணமும் தேசிய மட்டத்தில் சிறந்த வீரர்களை உருவாக்கி இந்நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஒட்டுமொத்த சம்பியனானது மேல்மாகாணம்

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் தமது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்ற மேல் மாகாணம், இன்று நிறைவுக்கு வந்த 43ஆவது விளையாட்டு விழாவிலும் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை வென்றது.

இதில் 102 தங்கம், 82 வெள்ளி மற்றும் 76 வெள்ளிப்பதக்கங்களை வென்று மேல் மாகாணம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், 46 தங்கம், 41 வெள்ளி, 45 வெண்கலப்பதக்கங்களை வென்ற மத்திய மாகாணம் 2ஆவது இடத்தையும், 27 தங்கம், 28 வெள்ளி மற்றும் 52 வெண்கலப்பதக்கங்களை வென்ற வட மத்திய மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 6 தங்கம், 8 வெள்ளி மற்றும் 10 வெண்கலப்பதக்கங்களை வென்ற கிழக்கு மாகாணம் 8ஆவது இடத்தையும், 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 12 வெண்கலப்பதக்கங்களை வென்ற வட மாகாணம் 9ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

இரத்தினபுரியில் 44ஆவது தேசிய விளையாட்டு விழா

கடந்த வருடம் யாழ். துரையப்பா மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில், இவ்வருடத்துக்கான (2017) 43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் உள்ளிட்ட 33 விளையாட்டுக்களை சப்கரமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் நடாத்துவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவிருந்த இரத்தினபுரி நகர சபை மைதானத்தின் நிர்மாணப் பணிகள் மற்றும் சுவட்டு மைதானப் பணிகள் பூர்த்தியாகாத நிலையில், குறித்த போட்டிகளை தென் மாகாணத்துக்கு வழங்கவும், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாத்தறை, கொடவில மைதானத்தில் மெய்வல்லுனர் போட்டிகளை நடாத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனவே இன்று நிறைவுக்கு வந்த தேசிய விளையாட்டு விழாவின் போது 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 44ஆவது தேசிய விளையாட்டு விழா சப்ரகமுவ மாகாணம், இரத்தினபுரியில் நடத்துவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் தiமையில் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளின் பிரதம விருந்தினராக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி சார்பாக கலந்துகொண்டதுடன், வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கான விருதுகளும், கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.