புதிய போட்டிச் சாதனையுடன் தங்கம் வென்றார் புவிதரன்; அப்துல்லாஹ், சயிபுக்கு வெற்றி

135

கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் வருடாந்தம் இடம்பெற்றுவரும் 35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான தேசிய ரீதியான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று (30) ஆரம்பமாகியது.

12, 14, 18 மற்றும் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவுகளில் நடைபெறுகின்ற இம்முறைப் போட்டித் தொடரின் முதல் நாளில் 4 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ. புவிதரன் 4.82 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டிச் சாதனையுடன் முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அதனைத்தொடர்ந்து 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் குருநாகல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆர்.எஸ் ஜயசுந்தர 48.73 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

அத்துடன், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த ருமேஷ் தரங்க 66.63 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து புதிய போட்டிச் சாதனை நிகழ்த்த, 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 1.75 மீற்றர் உயரத்தைத் தாவிய ஏழு நாட்கள் எட்வெண்ட்ஸ் உயர்தர பாடசாலையைச் (Seventh-day Adventist High School) சேர்ந்த மிஷேக் மிலோஷ் புதிய போட்டிச் சாதனை நிகழ்த்தி தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.

இவ்விரண்டு மாணவிகளும் கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நிகழ்த்திய தமது சொந்த சாதனைகளை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான உயரம் பாய்தலில் கொழும்பு கேரி கல்லூரியைச் சேர்ந்த ஒமெத் சொனித்து 1.50 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டிச் சாதனை நிகழ்த்தினார்.

இது இவ்வாறிருக்க, இன்று (30) காலை ஆரம்பமாகிய மைதான நிகழ்ச்சிகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மூன்று பதக்கங்களை வென்று அசத்தியதுடன், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் இரண்டு பதக்கங்களை பெற்றுக் கொண்டனர். 

இதில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ. புவிதரன் 4.82 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

ஆரம்ப சுற்றுக்களில் முறையே 4.20, 4.40, 4.55 மீற்றர் ஆகிய உயரங்களை அடுத்தடுத்து தாவியிருந்தார்.

இதனையடுத்து, அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த நெப்தலி ஜொய்சனால் கடந்த 2016 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட 4.61 மீற்றர் போட்டி சாதனையை முறியடிக்கும் நோக்கில் 4.62 மீற்றர் உயரத்தை தனது அடுத்த இலக்காக புவிதரன் நிர்ணயித்தார். 

கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கத்தை மயிரிழையில் தவறவிட்டார் புவிதரன்

பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்ற 45 ஆவது தேசிய…

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் குறித்த சவாலுக்கு முகங்கொடுத்த அவர், 3 ஆவது முயற்சியில் அந்த இலக்கை வெற்றிகொண்டு 3 வருடங்களுக்குப் பிறகு போட்டிச் சாதனையை முறியடித்து அசத்தினார். 

கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவிலும் இந்த சாதனையை முறியடிக்க புவிதரன் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து 4.72 மீற்றர் உயரத்தை 2ஆவது முயற்சியிலேயே தாவிய புவிதரன், நடுவர்களால் வழங்கப்பட்ட 4.77 மற்றும் 4.82 மீற்றர் உயரங்களை முதலாவது முயற்சிகளில் அடுத்தடுத்து தாவி அசத்தியிருந்தார். 

இதனையடுத்து 4. 87 மீற்றர் உயரத்தை தனது அடுத்த இலக்காக புவிதரன் நிர்ணயித்தார். எனினும், மூன்று முயற்சிகளிலும் சோபிக்கத் தவறிய அவர், இறுதியில் 4.82 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற புவிதரன், மூன்று தினங்களுக்கு முன் பதுளையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் 4.50 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார். 

இதேநேரம், இன்று நடைபெற்ற போட்டியில் 4.40 மீற்றர் உயரத்தைத் தாவிய யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த எஸ். சுகிகேரதன் வெள்ளிப் பதக்கத்தையும், 4.20 மீற்றர் உயரத்தைத் தாவிய யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த எஸ். கபில்ஷன் வெண்லகப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

இவ்விரண்டு வீரர்களும் இறுதியாக கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குகொண்டு முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இது இவ்வாறிருக்க, குறித்த போட்டியில் கடந்த வருடம் வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த ஆர். யதூஷனுக்கு இம்முறை போட்டிகளில் 5ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. 

அப்துல்லாஹ், சய்புக்கு வெற்றி

12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் என். அப்துல்லாஹ், 1.47 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கம் வென்றார். 

குறித்த போட்டியில் அதே 1.47 மீற்றர் உயரத்தைத் தாவிய திரப்பனே மஹானாம மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சி. விக்ரமசிங்க தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதேநேரம், 1.38 மீற்றர் உயரத்தைத் தாவிய கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியைச் சேர்ந்த எம்.ஆர்.எம் சயிப் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இவர் கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் இதே போட்டியில் 5 ஆவது இடத்தைப் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<