தம்புள்ளை அணியை 3 விக்கெட்டுகளால் வென்ற கொழும்பு அணி, இலங்கை கிரிக்கெட் சபையின் SLC டி-20 லீக் போட்டியில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
அனுபவ வீரர் தில்ருவன் பெரேரா தலைமையில் இந்தப் போட்டியில் களமிறங்கிய தம்புள்ளை அணி எதிரணிக்கு சவால் விடுக்க தவறிய நிலையில் இந்த தொடரில் முதல் தோல்வியை சந்தித்தது.
திமுத் கருணாரத்னவின் அதிரடியோடு காலி அணிக்கு த்ரில்லர் வெற்றி
ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் சனிக்கிழமை (25) இரவு நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி உறுதியான ஆரம்பம் ஒன்றை பெற்றது. தனுஷ்க குணதிலக்க மற்றும் ரமித் ரம்புக்வெல்ல முதல் விக்கெட்டுக்கு 34 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றனர்.
குறிப்பாக வேகமாக துடுப்பெடுத்தாடக் கூடியவரான ரம்புக்வெல்ல 22 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 33 ஓட்டங்களை விளாசினார். மறுபுறம் குணதிலக்க 30 பந்துகளில் 23 ஓட்டங்களை பெற்றார்.
எனினும் இந்த இருவரும் ஒரு ஓவர் இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க தம்புள்ளை அணி சரிவை எதிர்கொண்டது. அடுத்து வந்த மூன்று வீரர்களும் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர். குறிப்பாக சமரவிக்ரம (08), அஷான் பிரியன்ஜன் (01) மற்றும் ஹசித்த போயகொட (06) ஆகிய மூவரும் தொடர்ச்சியாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து சரிய ஆரம்பித்த தம்புள்ளை அணியின் ஓட்ட வேகம் மீளவே இல்லை. பின் வரிசை வீரர்களும் சொற்ப ஓட்டத்திற்கு விக்கெட்டுகளை பறிகொடுக்க தம்புள்ளை அணி 18.5 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்போது கொழும்பு அணி சார்பில் ஏழு வீரர்கள் பந்து வீசியபோதும் இலங்கையின் அதிரடி சுழற்பந்து வீச்சாளராக மாறிவரும் அகில தனஞ்சய 28 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு அணிக்கு உபுல் தரங்க வேகமான ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொடுத்தார். மறுமுனையில் அஷான் பெர்னாண்டோ 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோதும் இந்த தொடரில் சோபித்து வரும் தரங்க பௌண்டரிகள் மற்றும் சிக்சர்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க வீசிய 4 ஆவது ஓவரில் உபுல் தரங்க தொடர்ச்சியாக 4 பெண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை விளாசி அந்த ஓவரில் மாத்திரம் 22 ஓட்டங்களை பெற்றார். எனினும் தரங்க 21 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 35 ஓட்டங்களை பெற்றிருந்தபோது குணதிலக்கவின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.
தரங்க இந்த தொடரின் முதல் போட்டியில் அதிரடி சதமும் இரண்டாவது போட்டியில் வேகமான அரைச்சதமும் பெற்று மொத்தம் 221 ஓட்டங்களுடன் அதிக ஓட்டங்களை பெற்றவராக முதலிடத்தில் உள்ளார்.
சங்கக்காரவின் வரலாற்று சாதனையை நெருங்கும் கோஹ்லி
தொடர்ந்து ஷெஹான் ஜயசூரிய 6 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனபோது கொழும்பு அணி 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அணித்தலைவர் தினேஷ் சந்திமால் களத்தில் இருந்து ஓட்டங்களை சேகரித்தார். பௌண்டரிகளே இன்றி ஒரு சிக்ஸருடன் 26 பந்துகளில் 20 ஓட்டங்களை பெற்ற சந்திமால் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவின் பந்துக்கு போல்டானார். தொடர்ந்து வந்த ஷம்மு அஷான் ஓட்டமின்றி ஆட்டமிழந்ததால் கொழும்பு அணி சற்று தடுமாற்றத்தை சந்தித்தது.
தம்புள்ளை அணி கடைசி நேரத்தில் நெருக்கடி கொடுத்தபோதும் அந்த அணி போதுமான ஓட்டங்களை பெறாத நிலையில் கொழும்பு அணிக்கு வெற்றி இலக்கை நெருங்குவது கடினமாக இருக்கவில்லை.
கமிந்து மெண்டிஸ் கடைசி நேரத்தில் நிலைத்து நின்று அட்டமிழக்காது 23 ஓட்டங்களை பெற்றார். கொழும்பு அணி கடைசி 7 பந்துகளுக்கு 6 ஓட்டங்களை பெற இருந்தபோது ஜீவன் மெண்டிஸ் களமிறங்கி முகம் கொடுத்த முதல் பந்துக்கே சிக்ஸர் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் கொழும்பு அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 124 ஓட்டங்களை எட்டியது.
ஸ்கோர் விபரம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















