சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து டானியல் வெட்டோரி ஓய்வு

130

நியூஸிலாந்து அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் டானியல் வெட்டோரி சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் தனது ஓய்வு குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த வெட்டோரி, அவுஸ்திரேலியாவுடனான உலகக்கிண்ண இறுதிப் போட்டியே தனது இறுதிப் போட்டியாக அமைந்ததாகவும் இந்த போட்டி மிகச் சிறப்பான போட்டியாக தனக்கு அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தாம் வெற்றி பெற்றிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் என தெரிவித்துள்ள வெட்டோரி, கடந்த ஆறு வாரங்களில் அணி வீரர்களின் முன்னேற்றங்களை எண்ணி பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணியில் இடம்பெற்ற டானியல் வெட்டோரி இதுவரை 295 ஒருநாள் போட்டிகள் மற்றும்; 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 305 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அத்துடன் 4 ஆயிரம் ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

எனினும் நியூஸிலாந்து அணியில் நீண்ட நாட்களாக இடம்பெற்றிராத வெட்டோரி இந்த ஆண்டு உலகக்கிண்ண அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். அதேவேளை நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண தொடரில் மாத்திரம் 9 போட்டிகளில் விளையாடிய வெட்டோரி 15 விக்கெட்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.