தெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம்

55
GROUND
 

தெற்காசியாவின் ஒலிம்பிக் விழா என வர்ணிக்கப்படுகின்ற 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா இன்று (01) மாலை 5.15 மணிக்கு நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் உள்ள தஸரத் ரங்கசால விளையாட்டரங்கில் கோலகலமாக அந்நாட்டு ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரியின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.

வரவேற்பு நாடான நேபாளம், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவுகள் மற்றும் பூட்டான் உள்ளிட்ட 7 நாடுகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவானாது சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு மூன்றாவது தடவையாக நேபாளத்தில் நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

35 தங்கப் பதக்கங்களை குறிவைத்து நேபாளம் செல்லும் இலங்கை அணி

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா எதிர்வரும் டிசம்பர்

முன்னதாக அங்குரார்ப்பண தெற்காசிய விளையாட்டு விழா 1984 இலும், 8 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா 1999 இலும் நேபாளத்தில் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது

இம்முறை போட்டிகள் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவிலும், 200 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பெக்காராவிலும் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதன்படிவில்வித்தை, மெய்வல்லுனர், கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, மல்யுத்தம், சைக்கிளோட்டம், வாற்போர், கோல்வ்ப், கைப்பந்து, ஜுடோ, கபடி, கராத்தே, கோ கோ, நீச்சல், குறிபார்த்து சுடுதல், ஸ்கொஷ், மேசைப்பந்து, டென்னிஸ், டய்க்வொண்டோ, ட்ரைஎத்லன் (மூவம்ச நிகழ்ச்சி), கரப்பந்தாட்டம், பெட்மிண்டன், கடற்கரை கரப்பந்தாட்டம், பளுதூக்கல், வூஷு உள்ளிட்ட 27 போட்டிகள் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் நடைபெறவுள்ளன

இதில் 17 போட்டிகள் கத்மண்டுவிலும், எஞ்சிய 10 போட்டிகளில் 9 போட்டிகள் பெக்கஹரா நகரிலும், மல்யுத்தப் போட்டிகள் மாத்திரம் ஜனக்பூரிலும் நடைபெறவுள்ளது

இதில் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 23 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்காக டி20 போட்டிகளாக நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்குபற்றவில்லை

அத்துடன், முதல் முறையாக இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் இணைத்துக் கொள்ளப்பட்ட பரக்லைடிங் எனப்படுகின்ற விளையாட்டை போதியளவு வீரர்கள் இல்லாத காரணத்தினால் நீக்குவதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது

இம்முறை போட்டிகளில் 3228 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் போட்டிகளை நடத்தும் நேபாளத்திலிருந்து 648 வீரர்களும், இலங்கையிலிருந்து 622 வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

பங்களாதேஷ் (591), இந்தியா (413), மாலைதீவுகள் (332), பூட்டான் (142) ஆகிய நாடுகளில் இருந்து வீரர்கள் நேபாளத்துக்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன், இம்முறை போட்டிகளில் 316 தங்கம், 342 வெள்ளி மற்றும் 487 வெண்கலப் பதக்கம் என ஒட்டுமொத்தமாக 1135 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன

இதில் நீச்சல் (38 தங்கம்), மெய்வல்லுனர் (36), டய்க்வொண்டோ (29) ஆகிய போட்டிகளுக்கு அதிகளவான பதக்கங்கள் வழங்கப்பட்டவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

வூஷு (22), பளுதூக்கல் மற்றும் மல்யுத்தம் (20), கராத்தே (19), குத்துச்சண்டை (16), ஜுடோ (15), வாள் சண்டை (12), வில்லாளர் (10) போட்டிகளுக்கு குறைவான பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

இது இவ்வாறிருக்க, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் இந்தியா சார்பாக வில்வித்தை, கிரிக்கெட், கோல்வ்ப், கடற்கரை கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், டய்க்வொண்டோ மற்றும் மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகளில் வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இந்தியா (118 தங்கம், 90 வெள்ளி, 30 வெண்கலம்), முதலிடத்தையும், இலங்கை (25 தங்கம், 63 வெள்ளி, 98 வெண்கலம்) இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.

இந்த நிலையில், இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணியின் தலைவராக நட்சத்திர நீச்சல் வீரரான மெத்யூ அபேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக குவஹாத்தியில் நடைபெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட இவர், 7 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் உள்ளடங்கலாக 10 பதக்கங்களை வென்றிருந்மை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

எனினும், மெத்யூ அபேசிங்க நேபாளத்துக்கு வருவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் எடுப்பதால் இன்று (01) நடைபெறவுள்ள ஆரம்ப விழாவில் இலங்கை மெய்வல்லுனர் அணியின் ஈட்டி எறிதல் வீராங்கனையான நதீகா லக்மாலி தேசிய கொடியை ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போட்டிகளை நடத்தும் வரவேற்பு நாடான நேபாள அணியின் தேசிய கொடியை அந்நாட்டு தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான பராஸ் கட்கா ஏந்திச் செல்லவுள்ளதாக அறிவித்திருந்தது. எனினும், இறுதி நேரத்தில் பளுதூக்கல் வீரரான கமல் பஹதுர் தேசிய கொடியை ஏந்திச் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான டய்க்வொண்டோவில் 4 தடவைகள் தங்கப் பதக்கம் வென்ற தீபக் பிஸ்தா ஒலிம்பிக் தீபத்தை ஏற்றவுள்ளார்

மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க