SAG மெய்வல்லுனரில் 2ஆவது பதக்கத்தை தவறவிட்ட சண்முகேஸ்வரன்

168

நேபாளத்தில் நடைபெற்று வருகின்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குமார் சண்முகேஸ்வரன், இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பலத்த போட்டிக்கு மத்தியில்  பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். 

கடும் குளிருக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்ப சுற்றுக்களில் திறமையாக ஓடி முன்னிலை பெற்றிருந்த சண்முகேஸ்வரன் இந்திய மற்றும் நேபாள நாட்டு போட்டியாளர்களிடம் இருந்து கடும் சவாலை எதிர்கொண்டார்

SAG 10,000 மீற்றரில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சண்முகேஸ்வரன்

தெற்காசிய விளையாட்டுப் விழா (SAG) மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது…

எனினும், போட்டியின் இறுதிச் சுற்றில் தமது ஓட்ட வேகத்தை அதிகரித்துக் கொண்ட குறித்த வீரர்கள் முன்னிலை பெற்று சண்முகேஸ்வரனை பின்னுக்குத் தள்ளி வெற்றியீட்டினர்.  

இதன்படி, நேபாள வீரர் (14 நிமிடம் 54.20 செக்.) தங்கப் பதக்கத்தையும், இந்தியாவின் சுனில் தவார் (14 நிமிடம் 55.21 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும்   தட்டிச்சென்றனர்.

இதில் வெண்கலப் பதக்கதுக்காக பலத்த போட்டியைக் கொடுத்த குமார் சண்முகேஸ்வரன் ஒரு செக்கனால் அந்த வாய்ப்பை தவறவிட்டார். இதில் நேபாள வீரர ஹரி குமார் ரிமால் போட்டியை 14 நிமிடம் 57.05 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தையும், சண்முகேஸ்வரன் போட்டியை 14 நிமிடம் 58.57 செக்கன்களில் நிறைவு செய்து நான்காவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.  

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளின் நான்காவது நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிலானி ரத்நாயக்க தங்கப் பதக்கம் வென்றதுடன், ஆண்களுக்கான 4x100 அஞ்சலோட்டத்தில் இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கப் பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்தனர்.

அத்துடன், பெண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் கௌஷல்யா மதுஷானி வெள்ளிப் பதக்கத்தையும், பெண்களுக்கான குண்டு எறிதலில் தாரிக்கா பெர்னாண்டோ வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்களுக்கான குண்டு எறிதலில் சமித் பெர்னாண்டோ வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்

 நிலானிக்கு இரண்டாவது தங்கம்

பெண்களுக்கான 5,000 மீற்றரில் இலங்கை வீராங்கனை நிலானி ரத்நாயக்க, 16 நிமிடங்கள் 55.18 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று மெய்வல்லுனர் போட்டிகளுக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை நிலானி ரத்நாயக்க வென்று கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் நிலானிக்கு பலத்த போட்டியைக் கொடுத்த இந்திய வீராங்கனைகளான பருல் சவுத்தரி மற்றும் ப்ரீதி லம்பா முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டனர்.

>>Photos: Day 5 | South Asian Games 2019<<

கௌஷல்யாவுக்கு வெள்ளி 

பெண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல்  ஓட்டத்தில் பங்குகொண்ட கௌஷல்யா மதுஷானி, ஒரு நிமிடமும் 00.40 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.  

மற்றுமொரு இலங்கை வீராங்கனையான நிரோஷிகா லக்மாலி, இந்தப் போட்டியில் நான்காவது இடத்தை தனதாக்கிக் கொண்டார்

குறித்த போட்டியில் பாகிஸ்தானின் நஜ்மா ப்ரவீன் தங்கப் பதக்கத்தையும், இந்தியாவின் கவுர் வீர்பால் வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.

தாரிக்க, சமித்தவுக்கு பதக்கம்

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இலங்கையின் சமித் பெர்னாண்டோ வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியில் அவர் 15.55 மீற்றர் தூரத்தை எறிந்தார்.

20 வயதுடைய இளம் வீரான சமித் பெர்ணான்டோ, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 16.23 மீற்றர் தூரத்தை எறிந்து போட்டிச் சாதனையை சமப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

SAG 4×100 அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு இரட்டைத் தங்கம்

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய…

குண்டு எறிதல் போட்டியில் ஆசிய சம்பியனான இந்தியாவைச் சேர்ந்த சிங் தூர் 20.03 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய தெற்காசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றதுடன், மற்றுமொரு இந்திய வீரரான பிரகாஷ் சிங் 17.31 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதேநேரம் பெண்களுக்கான குண்டு எறிதலில் இலங்கை வீராங்கனை தாரிக்கா பெர்னாண்டோ 14.35 மீற்றர் துரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்

இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

இதேநேரம், இந்திய வீராங்கனைகளாக அபா கது (15.32 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், கன்சினார் சவுத்ரி (13.66 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்

>>தெற்காசிய விளையாட்டு விழா கொடர்பான மேலதிக தகவல்களை படிக்க<<