இந்துக்களின் பெரும் சமரில் சம பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகள்

11th Battle of the Hinduites 2022

228
 

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 11வது இந்துக்களின் பெரும் சமரின் முதல் நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை (10) நிறைவுக்கு வந்துள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

>> கேன் வில்லியம்சனுக்கு கொவிட்-19 தொற்று

அதன்படி களமிறங்கிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி மதியபோசன இடைவேளையின்போது, T.சம்சனின் 70 ஓட்டங்களின் உதவியுடன் 4 விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மதியபோசன இடைவேளைக்கு பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய யாழ். இந்துக் கல்லூரி அணிக்கு, கொழும்பு இந்துக் கல்லூரி பந்துவீச்சாளர் R. சகிதரன் மற்றும் அணியின் ஏனைய பந்துவீச்சாளர்கள் இணைந்து கடுமையான அழுத்தத்தை கொடுக்க தொடங்கினர்.

இதில் அணிக்காக அதிகமாக ஓட்டங்களை பெற்றிருந்த சம்சன் 77 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்தடுத்த துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். L.பிரியந்தன் ஒரு பக்கம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், தேநீர் இடைவேளையின் போது யாழ். இந்துக் கல்லூரி அணி 201 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

தேநீர் இடைவேளையின் பின்னர் மீண்டும் துடுப்பெடுத்தாட களமிறங்கிய யாழ். இந்துக் கல்லூரி அணிசார்பாக L.பிரியந்தன் அரைச்சதம் கடந்து 58 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்க இந்துக் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸில் 230 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி சார்பாக R. சகிதரன் 56 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு இந்துக் கல்லூரி அணி இன்றைய ஆட்டநேர நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

அவ்வணி சார்பாக R. டிலுக்ஷன் 34 ஓட்டங்களையும், R. சகிதரன் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் பிரகாசித்த யாழ். இந்துக் கல்லூரி அணித்தலைவர் T. கஜனாத் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார்.

சுருக்கம்

  • யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி – 230/10, (59.3), சம்சன் 77, L.பிரியந்தன் 58, T.கிருஷ்ணாத் 30*, R. சகிதரன் 5/56
  • கொழும்பு இந்துக் கல்லூரி – 81/3, (28), டிலுக்ஷன் 34*, R. சகிதரன் 18*, T. கஜனாத் 1/25,

முதல் நாள் முடிவு – யாழ். இந்துக் கல்லூரி அணி 149 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<