பொன் அணிகளின் சமரின் கிண்ணத்தை வென்ற புனித பத்திரிசியார் கல்லூரி

106th Battle of the Golds 2023

165

வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இன்று (25) நடைபெற்று முடிந்த 106வது பொன் அணிகளின் சமரின் கிண்ணத்தை புனித பத்திரிசியார் கல்லூரி அணி சுவீகரித்துக்கொண்டது.

முதல் இன்னிங்ஸில் 272 என்ற சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்ட புனித பத்திரிசியார் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியை வீழ்த்தியது.

பொன் அணிகளின் சமரின் கிண்ணத்தை வென்ற புனித பத்திரிசியார் கல்லூரி

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணக் கல்லூரி அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கி துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி 74.4 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 272 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பின்னர் களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 33 ஓட்டங்களை பெற்றிருந்தது. 239 ஓட்டங்கள் பின்னடைவில் தங்களுடைய இன்னிங்ஸை இன்று ஆரம்பித்த யாழ்ப்பாணக் கல்லூரி அணி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

குறிப்பாக மயூரன் சௌத்ஜன் மற்றும் குமனதாசன் சாருசன் ஆகியோரின் பந்துவீச்சுக்கு முற்றுமுழுதாக தடுமாறிய யாழப்பாணக் கல்லூரி அணி வெறும் 70 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பொன் அணிகளின் சமரின் கிண்ணத்தை வென்ற புனித பத்திரிசியார் கல்லூரி

நேற்றைய தினம் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த சிதம்பரலிங்கம் மதுசன் 24 ஓட்டங்களையும், அந்தோனி ரித்மான் அபிநாத் 18 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் மயூரன் சௌத்ஜன் மற்றும் குமனதாசன் சாருசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து 202 ஓட்டங்கள் பின்னடைவிலிருந்த யாழ்ப்பாணக் கல்லூரி அணி போலாவ் ஒன் முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரிக்கு சிறந்த ஆரம்பம் கிடைக்கவில்லை. ரித்மான் அபிநாத் 14 ஓட்டங்களுடனும், தனுஷ்காந்த் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஆரம்ப விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட பின்னர் அணியின் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவேண்டிய கட்டாயத்துக்கு யாழ்ப்பாணக் கல்லூரி தள்ளப்பட்டது. எனினும் துடுப்பாட்ட வீரர்கள் போதுமான பங்களிப்புகளை வழங்கவில்லை.

முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சிதம்பரலிங்கம் மதுசன் பொறுப்புடன் ஆடி 114 பந்துகளுக்கு 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தாலும், எதிர் பக்கத்திலிருந்து துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பு கிடைக்கவில்லை. சிதம்பரலிங்கம் நர்த்தனன் 22 ஓட்டங்களையும், பாபு பிருந்தன் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து போட்டியை சமப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும், கடைசி அரை மணிநேரத்துக்கு முன்னர் யாழ்ப்பாணக் கல்லூரி தங்களுடைய அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுக்க நேரிட்டது.

அதன்படி இறுதி அரை மணிநேரம் வரை போராடியிருந்த யாழ்ப்பாணக் கல்லூரியால் 64.4 ஓவர்கள் நிறைவில் 179 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்த நிலையில், இன்னிங்ஸ் மற்றும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. புனித பத்திரிசியார் கல்லூரியின் சார்பில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய குமனதாசன் சாருசன் 3 விக்கெட்டுகளையும், டேவிட் அபிலாஷ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

எனவே கடந்த ஆண்டு சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்திருந்த புனித பத்திரிசியார் கல்லூரி அணி, இம்முறை யாழ்ப்பாணக் கல்லூரியை அவர்களுடைய சொந்த மைதானத்தில் வீழ்த்தி கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்டது.

சுருக்கம்

புனித பத்திரிசியார் கல்லூரி – 272/9d (74.4), அபிலாஷ் 55, சமிந்தன் 50, பாபு பிருந்தன் 38/2, ரொய்ஸ் ஜென்சன் 56/2, நர்த்தனன் 70/2

யாழ்ப்பாணக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) -70/10 (44), மதுசன் 24, அபிநாத் 18, சௌத்ஜன் 14/4, சாருசன் 16/4

யாழ்ப்பாணக் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) -179/10 (64.4), மதுசன் 59, நர்தனன் 22, அபிலாஷ் 26/3, சாருசன் 45/4

முடிவு – புனித பத்திரிசியார் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 23 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<