உள்ளூரில் பிரகாசித்த இவர்களுக்கு உலகக் கிண்ண வாய்ப்பு கிடைக்குமா?

861

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2018/2019 பருவகாலத்துக்கான இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவுக்கு வந்தது.  

இதன் இறுதிப் போட்டியில் தேசிய அணி வீரர்களைக் கொண்ட பலம் பொருந்திய அணிகளான எஸ்.எஸ்.சி கழகமும், கொழும்பு கிரிக்கெட் கழகமும் (என்.சி.சி) பலப்பரீட்சை நடத்தியிருந்தன. இதில் எஸ்.எஸ்.சி அணிக்காக தனுஷ்க குணதிலக்க மற்றும் சந்துன் வீரக்கொடி ஆகிய வீரர்கள் சதமடித்து அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.  

உலகக் கிண்ண வாய்ப்பை இழக்கும் நான்கு இலங்கை வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள மாகாணங்களுக்கு….

இதன்மூலம் இம்முறை பருவகாலத்துக்கான கழகங்களுக்கிடையிலான ஒருநாள் தொடரின் சம்பியன் பட்டத்தை எஸ்.எஸ்.சி கழகம் கைப்பற்றியது.  

முன்னதாக நடைபெற்ற உள்ளூர் கழகங்களுக்கிடையிலான 4 நாட்களைக் கொண்ட முதல்தர போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் சம்பியன் பட்டத்தை வென்றதுடன், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளூர் கழகங்களுக்கிடையிலான டி-20 தொடரில் என்.சி.சி கழகத்தை வீழ்த்தி முவர்ஸ் கிரிக்கெட் கழகம் சம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 3ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4 அணிகள் பங்கேற்கும் மாகாணங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளை இலக்காகக் கொண்டு நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அனைத்து வீரர்களும் விளையாடவுள்ளனர்.

உலகக் கிண்ணப் போட்டிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அண்மைக்காலமாக நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் இலங்கை பெற்றுக்கொண்ட தோல்விகள், மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளன.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் SSC அணி சம்பியன்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் ….

அந்தவகையில், இலங்கையின் உலகக் கிண்ண குழாமின் தலைவர் உள்ளிட்ட அனைத்து இடங்களும் ஏறத்தாழ வெற்றிடமாகவே உள்ள நிலையில், அக்குழாமில் இடம்பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான இறுதி வாய்ப்பாக குறித்த மாகாண அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.  

இதுஇவ்வாறிருக்க, நிறைவுக்கு வந்த உள்ளூர் ஒருநாள் போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு உலகக் கிண்ண அணியில் வாய்ப்பு வழங்குவது குறித்து தேர்வுக்குழு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி, அண்மையில் நிறைவுக்கு வந்த உள்ளுர் கழகங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்போம்.

துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய சச்சித்ர

துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் இலங்கை அணியின் அனுபவமிக்க வீரரும், எஸ்.எஸ்.சி கழகத்தைச் சேர்ந்த வலதுகை துடுப்பாட்ட வீரருமான சச்சித்ர சேனநாயக்க இம்முறை போட்டித் தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவராக இடம்பிடித்தார். 8 போட்டிகளில் விளையாடிய அவர் 74.16 என்ற சராசரியுடன் ஒரு சதம், 3 அரைச்சதங்களுடன் 445 ஓட்டங்களைப் குவித்துக் கொண்டார்.  

34 வயதுடைய சகலதுறை ஆட்டக்காரரான சச்சித்ர சேனநாயக்க, அண்மைக்காலமாக உள்ளூர் கழகமட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற முன்னிலை வீரராக உள்ளார். அதிலும் குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவுக்குவந்த 2018/2019 பருவகாலத்துக்கான உள்ளூர் கழகங்களுக்கிடையிலான முதல்தரப் போட்டியில் 41 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை பெற்ற வீரர்கள் பட்டியலில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இதில் 4 தடவைகள் 5 விக்கெட்டுகள் பிரதியையும் அவர் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அண்மையில் நிறைவுக்கு வந்த கழகங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் துடுப்பாட்டத்தைப் போல பந்துவீச்சிலும் பிரகாசித்திருந்த சச்சித்ர, இம்முறை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இதில் 8 போட்டிகளில் 17.17 என்ற சராசரியுடன் 17 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். எனினும், கடந்த வருடமும் இதே அளவு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியின் போது .சி.சியின் விதிமுறைகளை மீறி பந்துவீசியதாக சச்சித்ர சேனநாயக்கவின் மீது குற்றம் சுமத்தப்பட்டதுடன், போட்டித் தடையும் விதிக்கப்பட்டது.

எனினும், தனது பந்துவீச்சுப் பாணியை சரிசெய்துகொண்டு மீண்டும் இலங்கை அணிக்குள் இடம்பெற்று சச்சித்ர விளையாடியிருந்த போதிலும், தொடர்ந்து அவரால் சிறப்பாக செயற்பட முடியாமல் போக தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பையும் அவர் இழந்தார்.

இந்நிலையில், எஸ்.எஸ்.சி அணிக்காக விளையாடி வருகின்ற 34 வயதான சச்சித்ர சேனநாயக்க, கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூர் கழக மட்ட ஒருநாள் போட்டிகளில் எஸ்.எஸ்.சி அணியின் தலைவராகச் செயற்பட்டு அந்த அணிக்கு சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாகவும் இருந்தார்.

அத்துடன், இவ்வருடம் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் எஸ்.எஸ்.சி அணியில் சகலதுறையிலும் பிரகாசித்த அவர், அந்த அணிக்காக மத்திய வரிசையில் களமிறங்கி துடுப்பாட்டத்தில் நம்பிக்கை கொடுத்து மீண்டும் ஒருமுறை அவ்வணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுக்க முக்கிய பங்கு வகித்தார்.  

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சு சகலதுறை வீரராகவும், பின்வரிசை வீரராகவுமே அவுஸ்திரேலிய அணியில் ஆரம்பத்தில் இடம்பெற்றிருந்தார்.

எனினும், 2011 காலப்பகுதியில் துடுப்பாட்டத்தில் மாத்திரம் அதிக கவனம் செலுத்திய ஸ்மித், அதன்பிறகு அந்நாட்டு உள்ளூர் கழகங்களுக்கிடையில் நடைபெறுகின்ற ஷெபில்ட் ஷீல்ட் போட்டித் தொடரில் துடுப்பாட்டத்தில் மாத்திரம் கவனம் செலுத்தினார். அதன்பிறகு 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரிலிருந்து துடுப்பாட்ட வீரராகப் பிரகாசிக்கத் தொடங்கிய ஸ்மித், உலக டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் முன்னிலை வீரராகவும் இடம்பெற்றார்.

இதுஇவ்வாறிருக்க, ஸ்மித்தைப் போல ஆரம்பத்தில் பந்துவீச்சாளராக மாத்திரம் பிரகாசித்து வந்த சச்சித்ர சேனநாயக்க, 2014ஆம் ஆண்டு .சி.சி.இ.யினால் விதிக்கப்பட்ட பந்துவீச்சு தடைக்குப் பிறகு தனது பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்டு பந்துவீச்சைப் போல துடுப்பாட்டத்திலும் அதிக கவனம் செலுத்தினார். இதன் பிரதிபலனாக கடந்த இரண்டு வருடங்களாக உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்களையும், அதிக விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்ட வீரராகவும் அவர் மாறினார்.

எனவே, சச்சித்ர சேனநாயக்கவுக்கு இனிவரும் காலங்களில் தொடர்ந்து தேசிய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்றாலும், மாகாண அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக விளையாடினால் இம்முறை உலகக் கிண்ணத்தில் சச்சித்ர சேனாநாயக்க விளையாடுவதில் தவறில்லை என்றே சொல்ல முடியும்.

பொலிஸ் கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் சோபிக்கும் அஜந்த மெண்டிஸ்

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில்…..

அதுமாத்திரமின்றி, அனுபவமிக்க வீரர்கள் இல்லாமல் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற இலங்கை அணிக்கு, சச்சித்ர சேனநாயக்க போன்ற அனுபவமிக்க வீரரை உலகக் கிண்ண இலங்கை அணியில் களமிறக்கினால் பந்துவீச்சைப் போல துடுப்பாட்டத்திலும் மிகப் பெரிய பலத்தைக் கொடுக்கும்.

அதேபோல, அண்மைக்காலமாக மத்திய வரிசையில் களமிறங்கி நின்று விளையாடுகின்ற வீரர்கள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு, சச்சித்ர சேனநாயக்கவின் தெரிவானது மிக முக்கிய இடத்தை வகிக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

இதேநேரம், இம்முறை உள்ளூர் கழக மட்ட ஒருநாள் போட்டிகளில் பாணந்துறை விளையாட்டுக் கழகத்துக்கான விளையாடிய 20 வயதுடைய இளம் விக்கெட் காப்பாளரும், இடதுகை துடுப்பாட்ட வீரருமான விஷ்வ சதுரங்க, அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இதில் 6 போட்டிகளில் பங்குபற்றிய அவர், 3 அரைச்சதங்களுடன் 341 ஓட்டங்களைக் குவித்தார்.

இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரரும், பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரியின் பயிற்சியாளருமான மலிந்த வர்ணபுரவின் சகோதரரான மாதவ வர்ணபுர, இம்மறை உள்ளூர் ஒருநாள் போட்டித் தொடரில் 8 ஆட்டங்களில் களமிறங்கி 3 அரைச்சதங்களுடன் 316 ஓட்டங்களைக் குவித்தார்.

கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்ற 30 வயதான மாதவ வர்ணபுர, 2008ஆம் ஆண்டு முதல் உள்ளூர் முதல்தர போட்டிகளில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிக ஓட்டங்களைக் குவித்த துடுப்பாட்ட வீரர்கள்

வீரர்போட்டிகள்ஓட்டங்கள்10050
சச்சித்ர சேனாநாயக்க

(எஸ்.எஸ்.சி)

844513
விஷ்வ சதுரங்க

(பாணந்துறை வி.கழகம்)

63413
கிடான்ஸ் கேரா

(பொலிஸ் கழகம்)

531812
தரூஷான் இந்தமல்கொட

(கடற்படை விளை. கழகம்)

531612
மாதவ வர்ணபுர

(கொழும்பு கிரிக்கெட் கழகம்)

83163

பந்துவீச்சாளர்களில் நிஷான் பீரிஸ் முதலிடம்

இம்முறை உள்ளூர் கழக மட்ட ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ராகம கிரிக்கெட் கழகத்தைச் சேர்ந்த 21 வயதுடைய வலதுகை சுழல் பந்துவீச்சாளரான நிஷான் பீரிஸ் பெற்றுக்கொண்டார். அவர் 6 போட்டிகளில் மொத்தம் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.   

இதில் கண்டி சுங்க கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், 10.45 என்ற சராசரியுடன் 2 தடவைகள் 5 விக்கெட் பிரதியையும் பதிவு செய்துகொண்டார்.

கடந்த வருடம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை குழாத்தில் மேலதிக வீரராகவும் நிஷான் பீரிஸ் இடம்பெற்றிருந்தார். எனினும், அதற்கு முன் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடரிலும் மேலதிக வீரராக அவர் இடம்பிடித்திருந்தார்.

கேள்விக்குறியாகும் இலங்கை அணியின் உலகக் கிண்ண கனவு

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன் தம்மைத் ……..

இலங்கை 17 வயதுக்குட்பட்ட அணி மற்றும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்காக விளையாடியுள்ள நிஷான் பீரிஸ், கடந்த வருடம் பங்களாதேஷ் அணிக்கெதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரிலும், அதன்பிறகு கடந்த ஒக்டோபர் நடைபெற்ற தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியுடனான ஒருநாள் தொடரிலும் விளையாடியிருந்தார். குறித்த தொடரின் 2 போட்டிகளில் விளையாடிய அவர், 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராகவும் இடம்பிடித்தார்.

ஆரம்பத்தில் டென்னிஸ் வீரராக திகழ்ந்த நிஷான் பீரிஸ், தனது சகோதரனுடன் கிரிக்கெட் விளையாடி அதில் ஏற்பட்ட ஆசையினால் திறமையான ஒரு சுழல் பந்துவீச்சாளராக மாறினார். பாடசாலைக் காலத்தில் அதீத திறமைகளை வெளிப்படுத்திய அவர், கடந்த வருடம் முதல்தரப் போட்டிகளில் ராகம விளையாட்டுக் கழகத்துக்காக களமிறங்கியிருந்தார். அதில் 9 போட்டிகளில் விளையாடிய அவர் 30 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். அத்துடன், இவ்வருடம் நடைபெற்ற முதல்தரப் போட்டிகளில் 10 ஆட்டங்களில் விளையாடிய நிஷான், 37 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனவே, முதல்தரப் போட்டிகள், இலங்கை மற்றும் வளர்ந்துவரும் அணிகளுடனான போட்டிகளில் விளையாடி தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற இளம் வீரரான நிஷான் பீரிஸ், இலங்கை அணிக்கு விளையாடுகின்ற அனைத்து தகுதிகளையும் பெற்றுக்கொண்டாலும், உலகக் கிண்ண இலங்கை குழாத்தில் அவர் இடம்பெறுவாரா என்பது சந்தேகம் தான்.

இதேநேரம், உள்ளூர் போட்டிகளில் அண்மைக்காலமாக தனது சிறப்பான துடுப்பாட்டத்தையும், பந்துவீச்சையும் வெளிப்படுத்தி தேசிய அணியில் மீண்டும் இடம்பெறுவதற்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற மற்றுமொரு இளம் வீரரான வனிந்து ஹசரங்க, இம்முறை கழகங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்ற 21 வயதான வனிந்து, 8 போட்டிகளில் விளையாடி, 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

2016ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கைக்காக விளையாடியிருந்த வனிந்து. இலங்கை துறைமுக அதிகார சபை அணியுடன் இணைந்துகொண்டு முதல்தரப் போட்டிகளில் களமிறங்கினார். அதன்பிறகு கொழும்பு கிரிக்கெட் கழகத்துடன் அவர் இணைந்து கொண்டார்.

இந்த நிலையில், 2017ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க, அந்தப் போட்டியில் ஹெட்ரிக் விக்கெட் கைப்பற்றி உலக சாதனையும் படைத்தார். அதன்பிறகு இலங்கையில் நடைபெற்ற இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடிய அவர், இறுதியாக பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியிலும் விளையாடினார்.  

சென்னை சுப்பர் கிங்ஸ் : அன்றும் இன்றும் என்றும் அசைக்க முடியாத ரசிகர் கோட்டை

காத்திருப்புக்கள் காதலை அதிகப்படுத்தும்……

எனவே, இலங்கை அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்புக்களை வனிந்து அவ்வப்போது பெற்றுக்கொண்டாலும், அதனை உரிய முறையில் பயன்படுத்தி தவறியமையினால் அணியிலிருந்து ஒதுக்கப்பட்டார்.  

எனினும், உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வருகின்ற திறமைகள் நிச்சயம் அவரை தேசிய அணிக்குள் உள்வாங்குவதற்கான நல்ல தருணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் எஸ்.எஸ்.சி கழகத்தின் சச்சித்ர சேனநாயக்க (18) மூன்றாவது இடத்தையும், என்.சி.சி கழகத்தின் அசித பெர்னாண்டோ மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் மாலிந்த புஷ்பகுமார ஆகியோர் தலா 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 4ஆவது, 5ஆவது இடங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்கள்

வீரர்போட்டிகள்ஓட்டங்கள்விக்கெட்டுகள்
நிஷான் பீரிஸ்

(ராகம கிரிக்கெட் கழகம்)

620920
வனிந்து ஹசரங்க

(கொழும்பு கிரிக்கெட் கழகம்)

832618
சச்சித்ர சேனநாயக்க

(எஸ்.எஸ்.சி கழகம்)

829217
அசித பெர்னாண்டோ

(என்.சி.சி கழகம்)

516015
மாலிந்த புஷ்பகுமார

(கொழும்பு கிரிக்கெட் கழகம்)

826715

 


>> 
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<