மலேஷியாவில் முதல் வெற்றியை சுவைத்த இலங்கை கனிஷ்ட அணி

531

மலேஷியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய இளைஞர் கிண்ண போட்டித் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 7 விக்கெட்டுகளால் இலகுவாக வீழ்த்திய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்தது.

றோயல் செலகோர் கழக மைதானத்தில் இன்று (10) நடைபெற்ற B குழுவுக்கான இப்போட்டியில், இடது கை வேகப்பந்து வீச்சாளர் திசரு ரஷ்மிக்க டில்ஷான் வழிநடாத்த இலங்கை பந்து வீச்சாளர்கள் வளைகுடா நாட்டை 22 ஓவர்களில் வெறும் 66 ஓட்டங்களுக்கே சுருட்டினர். தொடர்ந்து இலங்கை அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டியது.

ஆசிய கிண்ணத்துக்கான இலங்கை கனிஷ்ட அணி மலேஷியா பயணம்

மலேஷியாவில் நாளை (09) முதல் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்கு..

நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் அணித் தலைவர் பஹாத் நவாஸ், டில்ஷான் வீசிய முதல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அது தொடக்கம் ஐக்கிய அரபு இராச்சிய துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.  

அவ்வணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் செயித் ஹைதர் அதிகபட்சமாக 16 ஓட்டங்கள் பெற்றார். திரித்துவக் கல்லூரி அணித் தலைவராக இருக்கும் டில்ஷான் 8 ஓவர்கள் பந்துவீசி 17 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு உப தலைவர் ஜெஹான் டானியல் 14 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை பறித்தார்.

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு தனது கன்னிப் போட்டியில் ஆடிய இடது கை வேகப்பந்து விச்சாளர் கலன பெரேரா ஒரு விக்கெட்டை பெற்றதோடு இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம கடைசி இரண்டு விக்கெட்டுகளையும் பதம்பார்த்தார்.   

பின்னர் இலகுவான இலக்கான 67 ஓட்டங்களை துரத்தி ஆடிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியினர் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றியீட்டினர்.  

ஆரம்பத்தில் ஆடிய ஹசித்த போயகொட, தனஞ்சய லக்ஷான் மற்றும் கிரிஷ்ன சன்ஜுல ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு தமது விக்கெட்டை பறிகொடுத்தனர். எனினும், அணித் தலைவரும் ரிஷ்மண்ட் கல்லூரி வீரருமாகிய கமிந்து மெண்டிஸ் 40 பந்துகளில் ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.   

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி அடுத்து ஆப்கானிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணியை நாளை (11) கோலாலம்பூர் பயுமாஸ் ஓவல் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இன்று நடந்த மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகளால் வென்றது. ஆப்கான் பந்துவீச்சாளர்கள் பாக். 19 வயதுக்கு உட்பட்ட அணியை 57 ஓட்டங்களுக்கே சுருட்டியிருந்தனர்.

எனவே, இலங்கை அணியினருக்கு ஆப்கான் அணியை எதிர்கொள்வது கடும் போராட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

ஐக்கிய அரபு இராச்சியம் – 66 (22) – செயித் ஹைதர் 16, திசரு ரஷ்மிக்க டில்ஷான் 4/17, ஜெஹான் டானியல் 3/14, பிரவீன் ஜயவிக்ரம 2/13

இலங்கை – 68/3 (16) – கமிந்து மெண்டிஸ் 27*, கிரிஷான் சன்ஜுல 15, நிபுன் தனஞ்சய 11*, ஷாஹ் பைசல் கான் 2/30

போட்டி முடிவு – இலங்கை இளம் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி