ஸாஹிராவுடனான போட்டியை போராடி சமநிலை செய்த லும்பினி கல்லூரி

18

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன் – I பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவுக்கு வந்த கொழும்பு லும்பினி கல்லூரி மற்றும் ஸாஹிரா கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி சமநிலை அடைந்தது.

நேற்று (8) கொழும்பு ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற லும்பினி அணியினர் முதலில் ஸாஹிரா வீரர்களை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தனர்.

ஜப்னா சுப்பர் லீக் கிண்ணத்தை தமதாக்கிய வேலணை வேங்கைகள்

யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட்டினை மக்கள் மயப்படுத்தும் நோக்கத்துடன் யாழ் மாவட்ட…

இதன்படி துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஸாஹிரா கல்லூரி அணியினர் 40 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 159 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக் கொண்டனர். ஸாஹிரா கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் மொஹமட் ஸ்லாசா அரைச்சதம் ஒன்றை தாண்டி 63 ஓட்டங்களை குவித்ததோடு, லும்பினி கல்லூரி அணியின் பந்துவீச்சில் ரவிஷ்க விஜேசிங்க 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த லும்பினி கல்லூரி அணி சொஹான் தில்ஷான் சதம் கடந்து பெற்ற 101 ஓட்டங்களின் துணையோடும், ரவிஷ்க விஜேசிரியின் அரைச்சதத்தின் (60) உதவியோடும் 253 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

பந்துவீச்சில் ஏற்கனவே ஸாஹிரா கல்லூரி அணிக்காக  அரைச்சதம் பெற்ற மொஹமட் ஸ்லாசா 60 ஓட்டங்களை மட்டும் விட்டுத்தந்து 6 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

இதன் பின்னர் 94 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய ஸாஹிரா கல்லூரி அணிக்கு இலங்கை கனிஷ்ட அணி வீரர் மொஹமட் சமாஸ் மற்றும் மொஹமட் சஹ்தில்லா ஆகியோர் சிறப்பான முறையில் செயற்பட்டு ஓட்டங்கள் சேர்த்து உதவினர்.

இவர்களது துடுப்பாட்ட உதவியோடு ஸாஹிரா கல்லூரி அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 275 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்தவாறு தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

ஸாஹிரா கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் மொஹமட் சமாஸ் 95 ஓட்டங்கள் குவித்து சதத்தினை 5 ஓட்டங்களால் தவறவிட, மொஹமட் சஹ்தில்லா 55 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதேநேரம் லும்பினி கல்லூரி அணியின் பந்துவீச்சில் சிதும் திசநாயக்க மற்றும் ரவிஷ்க விஜேசிரி தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸாஹிரா கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 182 ஓட்டங்களை அடைய  பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய லும்பினி கல்லூரி அணி ஆரம்பம் முதலே தடுமாற்றம் காட்டி வந்திருந்தது.

எனினும், மிகவும் போராடி தமது விக்கெட்டுக்களை பாதுகாத்த லும்பினி கல்லூரி அணி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 118 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த காரணத்தினால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

>>டி20 சர்வதேச போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா

லும்பினி கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் பிராசத் மதுசங்க 48 ஓட்டங்கள் குவித்து அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, ஸாஹிரா அணிக்காக மொஹமட் ஸ்லாசா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 159 (40) – மொஹமட் ஸ்லாசா 63, ரவிஷ்க விஜேசிரி 4/45, யசிரு ஜயசிங்க 2/22

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 253 (52.4) – சொஹான் டில்ஷான் 101, ரவிஷ்க விஜேசிரி 60, மொஹமட் ஸ்லாசா 6/63

ஸாஹிரா கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 275/8d (54) – மொஹமட் சமாஸ் 95, மொஹமட் சஹ்தில்லா 55, சித்தும் திசநாயக்க 3/62, ரவிஷ்க விஜேசிரி 3/100

லும்பினி கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 118/9 (42) – பிரசாத் மதுசங்க 48, மொஹமட் ஸ்லாசா 3/28

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது (லும்பினி கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<