பங்களாதேஷுடான தோல்விக்குப் பிறகு நம்பிக்கையை கைவிட்ட ஹோல்டர்

350
Getty

பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் தமது அணி தோல்வியை தழுவுவதற்கு மூன்று துறைகளிலும் பிரகாசிக்கத் தவறியமையே காரணம் என தெரிவித்த மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர், இம்முறை உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வது இனிவரும் போட்டிகளில் மிகவும் கடினமான இருக்கும் என ஒப்புக்கொண்டார்.

பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த வீரர்களின் நம்பிக்கை

இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் …..

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று (17) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.  

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்களைக் குவித்தது. இதையடுத்து 322 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

பங்களாதேஷ் அணி வெற்றி பெற மிக முக்கிய காரணம் மேற்கிந்திய தீவுகள் அணியின் மோசமான பந்துவீச்சும், களத்தடுப்புமாகும். அந்த அணி எந்த நேரத்திலும், பங்களாதேஷ்அணியை அச்சுறுத்தவில்லை.

இதன்காரணமாக, ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் தமது இரண்டாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை துரத்தியடித்த பங்களாதேஷ் அணி, முதற்தடவையாக உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது.

ஒருநாள் அரங்கில் அதிசிறந்த வெற்றியை பதிவுசெய்த பங்களாதேஷ்

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ………

மறுபுறத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி, இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒன்றில் மாத்திரம் வெற்றிபெற்றது. எனவே, அந்த அணி அரையிறுதிக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள வேணடுமாயின் எஞ்சியுள்ள நான்கு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்களாதேஷ் அணியுடனான தோல்வி குறித்து ஜேசன் ஹோல்டர் கருத்து வெளியிடுகையில்,

”இந்தப் போட்டியில் அதிகளவு ஓட்டங்களைக் குவிக்கின்ற வாய்ப்பு எமக்கு இருந்தும் நாங்கள் அதை சரியாகப் பயன்படுத்தவில்லை. இந்த ஆடுகளத்தைப் பொறுத்தமட்டில் 365-375 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நாங்கள் 40 அல்லது 50 ஓட்டங்களை குறைவாகப் பெற்றோம்.

அதுமாத்திரமின்றி, நாங்கள் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், மத்திய ஓவர்களில் வேகமாக ஓட்டங்களைக் குவிக்க தவறிவிட்டோம். இதனால் போட்டியின் இறுதிப் பகுதியில் ஓட்டங்களைக் குவிப்பது மிகவும் கடினமாக இருந்தது” என அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல, பந்துவீச்சில் நாங்கள் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும், களத்தடுப்பிலும் மிகவும் மோசமாக செயல்பட்டிருந்தோம். இவ்வாறான ஆடுகளங்களில் 320 ஓட்டங்களை எடுத்தால், அதைப் பாதுகாக்க ஆடுகளத்தில் கடுமையாக போராட வேண்டும். ஆனால், தேவையான தருணத்தில் எங்களுக்கு விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியாமல் போனது. மேலும், ஒருசில வாய்ப்புகளை நழுவ விட்டோம் என அவர் தமது தறவுகள் தொடர்பில் குறிப்பிட்டார்.

தற்பொழுது மோசமான பதிவுகளைப் பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இனிவரும் அனைத்துப் போட்டிகளும் மிகவும் சவால் மிக்கதாகவே உள்ளன. இது குறித்து குறிப்பிட்ட ஜேசன்,

”தற்போதைய தருணத்தில் அரையிறுதிக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்வது கடினமாக உள்ளது. ஆனால், அது சாத்தியமான விடயமல்ல. எனவே, இனிவரும் ஒவ்வொரு ஆட்டத்தையும் இறுதிப் போட்டியாகக் கருதி நாங்கள் விளையாட வேண்டும்

அதேபோல, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள எஞ்சியுள்ள ஒவ்வொரு ஆட்டத்தையும் நாங்கள் வெல்ல வேண்டும். நாங்கள் அரையிறுதிக்கு செல்ல விரும்பினால், சிறந்த அணிகளை வெல்ல வேண்டும்” என்று ஹோல்டர் கூறினார்.

மேற்கிந்திய தீவுகள் அணி, அடுத்துவரும் லீக் ஆட்டங்களில் நியூசிலாந்து (22) மற்றும் இந்தியா (27) ஆகிய இரண்டு அணிகளையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<