அசத்தல் துடுப்பாட்டத்தால் தரவரிசையில் முன்னேறிய ஸ்டீவ் ஸ்மித்

621
AFP

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித், சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) அறிவித்துள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஷ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததை தொடர்ந்து, வீரர்களுக்கான புதிய தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று (6) அறிவித்துள்ளது.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அவுஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி

இங்கிலாந்தின் எஜ்பெஸ்டனில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து…

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஷ் தொடரில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றிருந்தது.  இந்தப் போட்டியில் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஸ்டீவ் ஸ்மித், இரண்டு சதங்களை விளாசியிருந்தார். 

முதல் இன்னிங்ஸில் 144 ஓட்டங்களை விளாசிய இவர், இரண்டாவது இன்னிங்ஸில் 142 ஓட்டங்களை பெற்றிருந்தார். இவ்வாறு சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித், துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 4 ஆவது இடத்திலிருந்து ஒரு இடம் முன்னேறி மூன்றாவது (900 புள்ளிகள்) இடத்தை பிடித்துள்ளார். பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கு பின்னர், முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்மித், முதல் போட்டியிலேயே தரவரிசையில் முன்னேற்றத்தை கண்டுள்ளார்.

துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இந்திய அணியின் விராட் கோஹ்லி தொடர்ந்தும் முதல் இடத்தை பிடித்துள்ளதுடன், இரண்டாவது இடத்தை கேன் வில்லியம்சன் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்திலிருந்த இந்திய அணியின் சிட்டேஸ்வர் புஜாரா நான்காவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியை பொருத்தவரை பென் போக்ஸ் ஒரு இடம் முன்னேறி 69 ஆவது இடத்தையும், க்ரிஸ் வோக்ஸ் 11 இடங்கள் முன்னேறி 70 ஆவது இடத்தையும், 133 ஓட்டங்களை விளாசிய ரோரி பேர்ன்ஸ் 25 இடங்கள் முன்னேறி 81 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் வரிசையை பொருத்தவரை, ஆஷஷ் தொடரின் முதல் போட்டியில் அபாரமாக பந்துவீசி 9 விக்கெட்டுகளை வீழ்த்திய நெதன் லையோன் 6 இடங்கள் முன்னேறி 13 ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், மறுபக்கம் பெட் கம்மின்ஸ் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி, முதல் இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை தென்னாபிரிக்க அணியின் ககிஸோ ரபாடாவும், மூன்றாவது இடத்தை இங்கிலாந்தின் ஜேம்ஸ் எண்டர்சனும் பிடித்துள்ளனர்.

இதேவேளை பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், ஆஷஷ் தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டுவர்ட் ப்ரோட் இரண்டு இடங்கள் முன்னேறி 16 ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், க்ரிஸ் வோர்க்ஸ் 4 இடங்கள் முன்னேறி 29 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

டேல் ஸ்டெய்ன் ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்?

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன்…

சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் அறிவித்துள்ள டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில், சகலதுறை வீரர்களுக்கான பட்டியலில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை என்பதுடன், அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசையிலும் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<