கொழும்பு ஸாஹிராவை வீழ்த்தி சம்பியனாகியது புனித ஹென்றியரசர் கல்லூரி

623

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதிற்குட்பட்ட தேசிய மட்ட கால்பந்து சுற்றுப் போட்டியில் பலம் மிக்க கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அணியை வீழ்த்திய யாழ்ப்பாணம் புனித ஹென்றியரசர் கல்லூரி அணி சம்பியனாகத் தெரிவாகியுள்ளது.

கிண்ணியாவில் கடந்த 3 நாட்களாக இடம்பெற்ற இந்த சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டியில், கால்பந்தில் இலங்கையில் முன்னணி அணியாகவும் இந்தப் போட்டியின் நடப்புச் சம்பியனாகவும் உள்ள கொழும்பு ஸாஹிராக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணிகள் மோதிக்கொண்டன.

தேசிய மட்ட பாடசாலைகள் கால்பந்து போட்டிகள் கிண்ணியாவில் ஆரம்பம்

மிகவும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆரம்பமான இந்தப் போட்டியில் இரு அணியினரும் பலத்த போராட்டத்துடன் விளையாடினர். இதன் காரணமாக ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவே இருந்தது.

இரு அணிகளும் கோல் போடுவதற்கு பலத்த முயற்சிகளை எடுத்தபோதும் அவை கைகூடவில்லை. இதன் காரணமாக ஆட்டத்தின் முழு நேரத்தில் இரு அணியினரும் கோல்களைப் பெற்றுக்கொள்ளவில்லை.  

எனவே, தேசிய மட்ட வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக இரு அணியினருக்கும் பெனால்டி (சமனிலை தவிர்ப்பு உதை) வழங்கப்பட்டது.

இதன்போது, புனித ஹென்றியரசர் கல்லூரி 4-3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2017ம் ஆண்டுக்குரிய தேசிய மட்ட சம்பியன்களாகத் தெரிவாகினர்.

எனவே, நடப்புச் சம்பியன் கொழும்பு ஸாஹிராவுக்கு இம்முறை சம்பியன் கிண்ணம் இறுதித் தருவாயில் பறிபோனது.

அரையிறுதிச் சுற்று

தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணிக்கும், புனித ஹென்றியரசர் கல்லூரி அணிக்குமிடையில் பலப்பரீட்சை இடம்பெற்றது. இதில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் புனித ஹென்றியரசர் கல்லூரி இலகுவாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.  

புனித ஹென்றியரசர் கல்லூரி அணி சார்பாக ஜயகுனரத்தினம் சங்கீதன் மற்றும் அமலேஸ்வரன் அருல்ஜோசப் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றுக்கொடுத்தனர்.   

இரண்டாவது அரையிறுதிப் போட்டி கொழும்பு ஸாஹிராக் கல்லூரி மற்றும் கொழும்பு ஹமீத் அல்ஹுசைனி கல்லூரி அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. இரண்டு அணிகளும் மிகத் திறமையாக விளையாடியபோதும் போட்டி நேரத்தில் எந்தவித கோல்களையும் பெறவில்லை.

இதன் காரணமாக பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. பெனால்டி உதைமூலம் 5-4 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தது

இச்சுற்றுப் போட்டியில் சிறந்த வீரராக புனித ஹென்றியரசர் கல்லூரி அணியின் தலைவரும் பின்கள வீரருமான பாக்யனாதன் ரெக்ஸன் தெரிவானார். சிறந்த கோல் காப்பாளராக கொழும்பு ஸாஹிராக் கல்லூரி வீரா் ஸாக்கிர் தெரிவானார்.

மேலும் பல செய்திகளைப் படிக்க