பேசுபொருளாக மாறியுள்ள அஸ்வினின் தலைமைத்துவம்

341
IPLT20.COM

ஐ.பி.எல். தொடரில் இம்முறை ஆரம்பத்திலிருந்து அதிகமாக பேசப்பட்டு வரும் பெயராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயர் மாறியிருக்கிறது. முதல் போட்டியில் மேன்கட் (Mankad) முறையிலான ரன்-அவுட் தொடர்பாக பேசப்பட்ட நிலையில், நேற்று (28) இவரது, அணித்தலைமை தொடர்பான விவாதங்கள் ஆரம்பித்துள்ளன.

மைதானத்தில் முரண்பட்ட ரபாடா, சர்மா மற்றும் வொட்சன்

ஐ.பி.எல். தொடரில் இம்முறை ஒவ்வொரு ……

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியை ஒரு கட்டத்தில் 200 ஓட்டங்களுக்குள் பஞ்சாப் அணி கட்டுப்படுத்தக்கூடிய நிலை இருந்த போதும், கொல்கத்தா அணி இறுதியில் 218 ஓட்டங்களை விளாசியது. இந்த ஓட்ட எண்ணிக்கையானது ஈடன் கார்டன் மைதானத்தில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும்  (ஐ.பி.எல். போட்டிகள்) பதிவாகியது.

இவ்வாறு, இந்தப் போட்டியின் முடிவு கொல்கத்தா அணியின் பக்கம் திரும்புவதற்கு முக்கியமான காரணமாக அமைந்த விடயம் என்ரு ரசலின் ஆட்டமிழப்புக்கு வழங்கப்பட்ட நோ போல் (No Ball). கொல்கத்தா அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸின் 17வது ஓவரை, பஞ்சாப் அணியின் மொஹமட் சமி வீசினார். குறித்த ஓவரின் 5வது பந்தில் ரசல் போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார். ஆனால், அந்த பந்து நோ போல் என நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

போட்டி என்றால் பந்து வீச்சாளர்கள் நோ போல் வீசுவது சகஜமான ஒன்றுதான். அதில் அணித்தலைவரின் பிழையொன்றும் இல்லை. அதனால் அஸ்வின் மீது குற்றம் சுமத்த முடியாது என நினைக்கலாம். ஆனால், குறித்த நோ போல், வீச்சாளரின் தவறுக்காக வழங்கப்படவில்லை. களத்தடுப்பாளர்களை சரியான முறையில் வழிநடத்த தவறிய காரணத்தால் குறித்த பந்து நோ போலாக அறிவிக்கப்பட்டது.

T20 போட்டிகளை பொருத்தவரை  பவர் ப்ளே (Power Play) ஓவர்களை தவிற, ஏனைய ஓவர்களின் போது வரையறுக்கப்பட்டிருக்கும் 30 யார்ட் வட்டத்திற்குள் (30 Yard Circle) கட்டாயம் நான்கு வீரர்களை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அஸ்வின் 3 வீரர்களை மாத்திரம் குறித்த 30 யார்ட் வட்டத்திற்குள் நிறுத்தியிருந்தமையால், குறித்த பந்து நோ போலாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி நோ போலின் மூலமாக இரண்டாவது வாய்ப்பை பெற்ற என்ரு ரசல், அதிரடியின் மூலம் நோ போல் பந்துக்கான பெறுமதியை பஞ்சாப் அணிக்கு உணர்த்தியிருந்தார். நோ போல் பந்து வரை வெறும் 3 (5) ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த இவர், அதன் பின்னர் கிடைத்த 12 பந்துகளில் 45 ஓட்டங்களை விளாசினார். மொத்தமாக இவர் 17 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்களை குவித்ததுடன், பந்து வீச்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாக தெரிவானார்.

மைதானத்தில் முரண்பட்ட ரபாடா, சர்மா மற்றும் வொட்சன்

ஐ.பி.எல். தொடரில் இம்முறை ஒவ்வொரு …..

ரசலின் துடுப்பாட்டத்தின் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட சவாலான ஓட்ட எண்ணிக்கையை நோக்கிய பஞ்சாப் அணி, 190 ஓட்டங்களை பெற்ற போதும், 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எவ்வாறாயினும், குறித்த நோ போல் வழங்கப்டவில்லை என்றால் பஞ்சாப் அணியால் குறித்த போட்டியின் முடிவில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்க முடியும் என சமுகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றது. அதுநேரம், அஸ்வினின் அணித்தலைமை தொடர்பிலும் இரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

போட்டி சுருக்கம்

கொல்கத்தா நைட் ரைடர்ஷ் – 218/4 (20), ரொபின் உத்தப்பா 67 (50), நித்திஷ் ரானா 63 (34), என்ரு ரசல் 48 (17), வருண் சக்கரவர்த்தி 35/3

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 190/4 (20), டேவிட் மில்லர் 59 (40), மயங்க் அகர்வால் 58 (34), என்ரு ரசல் 21/2

முடிவு – கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<