இந்திய மகளிர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஜெனிமாஹ் ரொட்ரிகஸ்

368

இலங்கை மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது T20 போட்டியில், இந்திய மகளிர் அணி ஜெனிமாஹ் ரொட்ரிகஸின் அதிரடி அரைச் சதத்தின் உதவியுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய மூன்றாவது T20 போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி,  முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

தொடரின் இரண்டு போட்டிகள் நிறைவுற்ற நிலையில், 1-0 என இந்திய அணி முன்னிலைப் பெற்றிருந்தது. இந்நிலையில் போட்டியை சமப்படுத்தும் நோக்கில் களமிறங்கிய இலங்கை அணி, துடுப்பாட்டத்தை குவிக்க தவறிய காரணத்தால் தோல்வியை தழுவியது.

இலங்கை – இந்திய மகளிர் இடையிலான இரண்டாவது T20 கைவிடப்பட்டது

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் சஷிகலா சிறிவர்தன, நிலக்ஷி டி சில்வா மற்றும் அணித் தலைவி சமரி அட்டபத்து ஆகியோர் ஓரளவு பங்களிப்பை வழங்கிய போதிலும், இலங்கை அணியால் பாரிய ஓட்ட எண்ணிக்கைக்கு செல்லமுடியவில்லை.

போட்டியின் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை மகளிர் அணி, 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. சஷிகலா சிறிவர்தன அதிபட்சமாக 35 ஓட்டங்களையும், நிலக்ஷி டி சில்வா 31 ஓட்டங்களையும் பெற்றதுடன், சமரி அட்டபத்து 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இந்திய அணி சார்பில் அருந்ததி ரெட்டி மற்றும் ஹர்மன்பிரீட் கஹுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து இலகுவான வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் ஜெனிமாஹ் ரொட்ரிகசின் அதிரடி அரைச்சதத்தின் உதவியுடன் 5 விக்கெட்டுகளை இழந்து 18.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளாக களமிறங்கிய மிதாலி ராஜ் மற்றும் ஸ்ம்ரிட் மந்தனா ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போதும், இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணியின் தலைவியாக செயற்பட்ட ஹர்மன்பிரீட் கஹுர் மற்றும் ஜெனிமாஹ் ரொட்ரிகஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

ஜெனிமாஹ் ரொட்ரிகஸ் 40 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் ஹர்மன்பிரீட் கஹுர் 24 ஓட்டங்களையும், வெதா கிருஷ்ணமூர்த்தி ஆட்டமிழக்காமல் 11 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதிசெய்தனர். இலங்கை அணி சார்பில் சமரி அட்டபத்து 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி T20 தொடரில் 2-0 என முன்னிலைபெற்றுள்ளது. இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்காவது T20 போட்டி எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ளது

ஸ்கோர் விபரம்

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<