பந்துவீச்சில் அகில தனஞ்சயவும் துடுப்பாட்டத்தில் அஞ்செலோ மெதிவ்ஸும் மிரட்ட தென்னாபிரிக்காவுடனான ஐந்தாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 178 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றி ஒன்றை பெற்றது.

தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக…

கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற போட்டியில் மெதிவ்ஸ் ஆட்டமிழக்காது பெற்ற 97 ஓட்டங்களால் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 299 ஓட்டங்களை குவித்ததோடு தொடர்ந்து தனஞ்சய 6 விக்கெட்டுகளை வீழ்த்த பதிலெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 121 ஓட்டங்களுக்கே சுருண்டது.

இந்த ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 3-2 என வெற்றி பெற்றபோதும் இலங்கை அணி கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி ஈட்டியமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை, பல்லேகலவில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்திய அதே அணியுடன் களமிறங்கியது.

எனினும் தென்னாபிரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. லுன்கி நிகிடியுக்கு பதில் ககிசோ ரபாடா இணைக்கப்பட்டதோடு டேவிட் மில்லரின் இடத்திற்கு எய்டன் மார்க்ரம் அணிக்கு திரும்பினார்.

அதேபோன்று, ஆறு போட்டிகளில் .சி.சி தடைக்கு முகம்கொடுத்த இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க அணிக்கு திரும்பியிருந்தார். அவரோடு தடைக்கு முகம்கொடுத்த தினேஷ் சந்திமால் வரும் செவ்வாய்க்கிழமை தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெறவிருக்கும் டி-20 போட்டியில் இலங்கை அணிக்கு ஆடவுள்ளார்.

தென்னாபிரிக்காவுடனான T-20 போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இந்நிலையில் துடுப்பெடுத்தாட களமிங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் சற்று தடுமாற்றம் கண்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு குசல் பெரேராவினால் 8 ஓட்டங்களையே பெற முடிந்தது.

எனினும் மறுமுனை ஆரம்ப வீரர் நிரோசன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் இணைந்து 50 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். 65 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்ற திக்வெல்ல வேகப்பந்து வீச்சாளர் அன்டில் பெஹ்லுக்வாயோவின் பந்துக்கு ஆட்டமிழந்ததோடு குசல் மெண்டிஸும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவரால் 38 ஓட்டங்களையே பெற முடிந்தது.

எனினும், மத்திய வரிசையில் வந்த மெதிவ்ஸ் இலங்கை அணிக்கு கைகொடுத்தார். இவர் தனன்ஜய டி சில்வாவுடன் சேர்ந்து வேகமாக ஓட்டங்களை சேர்க்க இலங்கை அணிக்கு 40 ஓவர்களுக்குள் 200 ஓட்டங்களை தாண்ட முடிந்தது. இதன்போது தனன்ஜய டி சில்வா 41 பந்துகளில் 30 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.  

எனினும் அனுபவ சகலதுறை வீரர் திசர பெரேராவுடன் 6 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மெதிவ்ஸ் மேலும் 52 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். இதன்போது தனது வழக்கமான ஆட்டத்திற்கு மாறாக துடுப்பெடுத்தாடிய திசர பெரேரா எந்த ஒரு பௌண்டரியும் இன்றி 15 பந்துகளில் 13 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.   

அசேலவின் சகலதுறை ஆட்டத்தால் ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கைத்தரப்பு

இந்நிலையில் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடிய தசுன் ஷானக்க 15 பந்துகளில் 2 பௌண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 21 ஓட்டங்களை பெற்றார். கடைசி பந்து வரை களத்தில் இருந்த மெதிவ்ஸ் தனது 3ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்ய இன்னிங்ஸின் கடைசி பந்துக்கு 4 ஓட்டங்களை பெற வேண்டி இருந்தபோது அந்த பந்துக்கு அவர் ஒரு ஓட்டத்தையே எடுத்தார். இரண்டாவது ஓட்டத்தை பெற முயன்று மறுமுனையில் இருந்த அகில தனஞ்சய 5 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார்.   

இதனால் மெதிவ்ஸ் 97 பந்துகளில் 11 பௌண்டரி ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காது 97 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 299 ஓட்டங்களை பெற்றது. இதன்போது தென்னாபிரிக்க அணி சார்பில் வில்லியம் முல்டர் மற்றும் பெஹ்லுக்வாயோ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி ஓட்டம் பெறும் முன்னரே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. ஹஷிம் அம்லா லக்மாலின் பந்துக்கு ஓட்டமின்றி வெளியேறினார்.

மறுமுனை ஆரம்ப வீரரான அணித்தலைவர் டி கொக் அரைச்சதம் ஒன்றை பெற்றபோதும் அதிரடியாக செயற்பட ஆரம்பித்த வலதுகை சுழல் வீரர் அகில தனஞ்சய ஆறாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஒரு ஓவர் கழித்து மேலும் ஒரு விக்கெட்டை பதம்பார்த்தார்.

தொடர்ந்து அவர் விக்கெட்டுகளை வீழ்த்த தென்னாபிரிக்க அணி 85 ஓவர்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது. பின்வரிசை வீரர்களும் சீரான இடைவெளியில் தமது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் தென்னாபிரிக்க அணி 24.4 ஓவர்களில் 121 ஓட்டங்களுக்கே சுருண்டது.

இலங்கை சார்பில் அபாரமாக பந்துவீசிய அகில தனஞ்சய ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சாக 9 ஓவர்களில் 29 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.    

ஓட்டங்கள் அடிப்படையில் தென்னாபிரிக்க அணியின் மூன்றாவது மிக மோசமான ஒருநாள் தோல்வியாகவும் இது பதிவானது.

தென்னாபிரிக்காவின் தொடர் வெற்றிக்கு துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட ஜேபி டுமினிக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தது.

அடுத்து இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு ஒருநாள் போட்டி வரும் செவ்வாய்க்கிழமை (14) ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.  

போட்டியின் சுருக்கம்