சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், இரண்டு போட்டிகளில் தோல்வியுற்று தொடரை இழந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, நாளைய (23) தினம் தங்களுடைய முழுமையான தொடர் தோல்வியை தவிர்க்கும் நோக்கில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது.

18 வருடங்களின் பின் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக கண்டி…

காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 221 என்ற பாரிய ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியினை தழுவியிருந்த இலங்கை அணி, பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி நகர்ந்தும் 57 ஓட்டங்களால் தோல்விக் கண்டது. அதேநேரம், இங்கிலாந்து அணியானது 2001ம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை மண்ணி்ல் டெஸ்ட் தொடரை வென்றதுடன், 2012ம் ஆண்டுக்கு பின்னர் ஆசிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றது.

தற்போது, தொடரை 2-0 என வென்ற இங்கிலாந்து அணி, இலங்கை மண்ணில் வைட்வொஷ் முறையிலான வெற்றியை நோக்கிய திட்டத்தினை வகுத்துள்ளதுடன், இலங்கை அணி முழுமையான தொடரை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன், எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்குகின்றது.

போட்டி நடைபெறவுள்ள எஸ்.எஸ்.சி. மைதானத்தை பொருத்தவரை இலங்கை அணி, டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பெறுபேற்றினை தக்கவைத்துள்ள மைதானமாக பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இலங்கை அணி 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 20 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், 8 போட்டிகளில் மாத்திரம் தோல்வியடைந்துள்ளது. முக்கியமாக இங்கிலாந்து அணியுடன் 4 போட்டிகளில் விளையாடி, 2 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் இலங்கை அணி சந்தித்துள்ளது.

இலங்கை அணியின் எஸ்.எஸ்.சி. மைதான டெஸ்ட் போட்டி முடிவுகள்

  • போட்டிகள் – 42
  • வெற்றிகள் – 20
  • தோல்விகள் – 8
  • சமனிலை – 14

இலங்கை மண்ணில் உலக சாதனை படைத்த இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள்

பல்லேகலை மைதானத்தில் கடந்த 14ஆம் திகதி…

எனினும், இங்கிலாந்து அணியானது, இலங்கை அணியின் டெஸ்ட் கோட்டையான காலி மைதானத்தில் வைத்து மிகப்பெரிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. இதனால், இந்தப் போட்டியானது இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயங்களும் இல்லை.

இலங்கை அணியில், நாளைய போட்டியில் எதிர்பார்க்கப்படும் வீரர்களாக அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் பார்க்கப்படுகின்றனர். முக்கியமாக உடற்தகுதி காரணமாக ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட மெதிவ்ஸ் தனது நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று அரைச்சதங்களை பெற்றுக்கொடுத்துள்ளார். அத்துடன், திமுத் கருணாரத்ன இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு அரைச்சதங்களுடன் அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தியுள்ளார்.

இவர்களை தவிர்த்து தனன்ஜய டி சில்வா, டிக்வெல்ல ஆகியோர் ஓரளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தாலும் நிலையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகின்றனர். இவர்களுடன் துடுப்பாட்டத்தில் தடுமாறி வரும் குசால் மெண்டிஸ் அணியில் தனது இடத்தை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக நாளைய போட்டியில் ஓட்டங்கள் பெறவேண்டிய கட்டயாத்துக்கு முகங்கொடுத்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர் அகில தனன்ஜய அணியில் இல்லாத காரணத்தால் மலிந்த புஷ்பகுமார, டில்ருவான் பெரேரா ஆகியோர் மேலும் பலத்துடன் பந்து வீச வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

நாளைய போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக முதல் டெஸ்ட் போட்டியில் உபாதை காரணமாக வெளியேறிய தினேஷ் சந்திமால் உடற்தகுதி பெறாத காரணத்தால், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதனால் சுரங்க லக்மால் அணிக்கு தலைமை தாங்கவுள்ளதாக கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை அணியில் சந்திமாலின் இடத்திற்கு தனுஷ்க குணத்திலக்க

உபாதைக்குள்ளான இலங்கை அணித்தலைவர்…

அதேநேரம், தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக அணிக் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த சரித் அசலங்க நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தனுஷ்க குணதிலக்க குழாத்தில் இடம்பிடித்துள்ளார். இதேவேளை பந்து வீச்சு பரிசோதனைக்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள அகில தனன்ஜயவுக்கு பதிலாக புதுமுக வீரர் நிசான் பீரிஸ் டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அரைச்சதமேனும் கடக்காத கௌஷால் சில்வாவுக்கு பதிலாக தனுஷ்க குணதிலக நாளைய போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதுடன், அகில தனன்ஜயவுக்கு பதிலாக லக்ஷான் சந்தகன் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியின் உத்தேச பதினொருவர்

திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணதிலக்க, தனன்ஜய டி சில்வா, குசால் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், ரொஷேன் சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால் (தலைவர்), மலிந்த புஷ்பகுமார.

டெஸ்ட் தொடரை பொருத்தவரை இங்கிலாந்து அணி 2-0 என தொடரை கைப்பற்றி வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரோரி பேர்ன்ஸ் மற்றும் கீடொன் ஜென்னிங்ஸ் ஆகியோர் இலங்கை மண்ணில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன், அணித் தலைவர் ஜோ ரூட், ஜோஸ் பட்லர், செம் கரன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றனர்.

பந்துவீச்சு பக்கம் பார்க்கும் போது, மொயீன் அலி, ஜெக் லீச் மற்றும் ஆதில் ரஷீட் ஆகியோர் இலங்கை அணியை தடுமாறச் செய்து வருகின்றனர். இவர்களது பந்துவீச்சு இம்முறை இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு அதீத பலம் என்றுதான் கூறவேண்டும்.

இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட்டில் அன்டர்சனுக்கு ஓய்வு

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை…

இதேவேளை, இங்கிலாந்து அணி நாளைய போட்டிக்கான தங்களுடைய பதினொருவரை உறுதிப்படுத்தியுள்ளது. இரண்டாவது போட்டியில் உபாதைக்குள்ளாகிய செம் கரன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சனுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக உபாதைக்குள்ளாகியிருந்த ஜோனி பெயார்ஸ்டோவ் மற்றும் ஸ்டுவர்ட் ப்ரோட் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணியின் உத்தேச பதினொருவர்

கீடொன் ஜென்னிங்ஸ், ரோய் பர்ன்ஸ், மொயீன் அலி, ஜோ ரூட் (தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், பென் போக்ஸ், ஆதில் ரஷீட், ஜொனி பெயார்ஸ்டோவ், ஜெக் லீச், ஸ்டுவர்ட் ப்ரோட்

ஆடுகள நிலைமை

எஸ்.எஸ்.சி. மைதான ஆடுகளத்தை பொருத்தவரை துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதானம் என்றாலும், இம்முறை சுழற்பந்து வீச்சுக்கு அதிக சாதகம் கொண்ட மைதானமாக காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

காலநிலை

காலநிலையை பொருத்தவரை, கொழும்பில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழைக் குறுக்கிட வாய்ப்புள்ளது. எனினும் போட்டியின் ஐந்து நாட்களும் விளையாடக்கூடிய சூழ்நிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<