கொழும்பு பி.சாரா ஓவல் மைதானத்தில் இன்று (30) நடைபெற்ற இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறிய இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
இன்னிங்ஸ் தோல்வியுடன் டெஸ்ட் தொடரையும் இழந்த இலங்கை இளையோர் அணி
இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான இரண்டாவதும்…..
இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி, இரண்டு இளையோர் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது. இதில் நடைபெற்று முடிந்த இரண்டு இளையோர் டெஸ்ட் போட்டிகளிலும், இலங்கை அணி இன்னிங்ஸ் அடிப்படையில் தோல்வியடைந்து, சரிவை சந்தித்திருந்தது.
இந்தநிலையில் இன்று ஆரம்பமாகிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்பத்திலிருந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
இந்திய அணிக்கு எதிரான இளையோர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சதம் விளாசிய, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நிசான் மதுஷ்க ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றமளித்தார். தொடர்ந்து களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்களில் அணித் தலைவர் நிபுன் தனஞ்சய நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதிலும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு பங்களிப்பை வழங்கத் தவறினர்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நவோத் பர்னவிதான 15 ஓட்டங்கள், இளையோர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அரைச்சதம் கடந்து 78 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நுவனிந்து பெர்னாண்டோ 6 ஓட்டங்கள், டெஸ்ட் தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைத்சதத்தை விளாசிய பசிந்து சூரியபண்டார 4 ஓட்டங்கள் என, சிறந்த துடுப்பாட்ட உத்வேகத்தில் இருந்த அனைத்து வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இலங்கை அணியின் தோல்வி குறித்து மனந்திறந்த திலான் சமரவீர
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில்……
தொடர்ந்து களமிறங்கிய சந்துன் மெண்டிஸ் 4 ஓட்டங்கள், துலித் வெல்லாலகே 13 ஓட்டங்கள், லக்ஷித மனசிங்க 9 ஓட்டங்கள் என தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுக்க, இலங்கை இளையோர் அணி 29.3 ஓவர்கள் நிறைவில் 99 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழ்நிலைக்கு முகங்கொடுத்தது.
எனினும் இலங்கை இளையோர் அணிசார்பில் நிபுன் மாலிங்க இறுதி நேரத்தில் தனியாளாக போராட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது போராட்டத்தால் பெறப்பட்ட 38 ஓட்டங்களின் உதவியுடன், இலங்கை அணியால் 38.4 ஓவர்களில் 143 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. நிபுன் மாலிங்கவுக்கு சற்று உதவியாக இருந்த நவீன் பெர்னாண்டோ 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அவிஷ்க லக்ஷான் ஆட்டமிழக்காமல் ஒரு ஓட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்திய இளையோர் அணிசார்பில் பந்து வீச்சில் அஜய் டேவ் கவுட் 6.4 ஓவர்கள் பந்து வீசி, 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்ற, ஆரம்ப விக்கெட்டுகளை பதம் பார்த்த மொஹிட் ஜங்ரா 2 விக்கெட்டுகளையும், யடின் மங்வானி மற்றும் ஆயுஸ் படோனி ஆகியோர் தலா 2 விக்கெட் வீதமும் பகிர்ந்துக்கொண்டனர். இவர்களைத் தவிற சித்தார்த் டேசாய் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
பலமான துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி, 144 என்ற இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுவதற்காக களமிறங்கியது. ஆரம்பத்திலிருந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, வெற்றியிலக்கை நோக்கி மெதுவாக முன்னேறியது.
பெரேராக்களின் இணைப்பினால் மீண்டது இலங்கை
ககிசோ றபாடா மற்றும் தப்ரைஸ் ஷம்சியின் அதிரடி பந்துவீச்சின் மூலம்….
எனினும், இடையில் தன்னுடைய பந்து வீச்சில் அபாரம் காட்டிய இலங்கை அணியின் லக்ஷித மனசிங்க, டெஸ்ட் தொடரில் இரட்டைச் சதம் அடித்த, பவன் ஷஹாவை 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்தும் சிறப்பாக செயற்பட்ட லக்ஷித மனசிங்க, இரண்டாவதாக களமிறங்கிய யசஷ்வி ஜெய்ஷ்வாலையும் 15 ஓட்டங்களுடன் வெளியேற்றினார். இதனால் இந்திய அணி 14.3 ஓவர்களில் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய தொடக்க வீரர் அனுஜ் ராவத் அரைச்சதத்தை நெருங்க, அணிக்காக ஓரளவு ஓட்டங்களை குவிக்க உதவிய அணித் தலைவர் அர்யான் ஜுவால், 20 ஓட்டங்களை பெற்றிருந்த போது அவிஷ்க லக்ஷானின் பந்து வீச்சில், நுவனிந்து பெர்னாண்டோவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
எனினும், இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை இலகுவாக எதிர்கொண்ட அனுஜ் ராவத் 82 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். எவ்வாறாயினும் அரைச்சதம் கடந்த சில நொடிகளில், சந்துன் மெண்டிஸின் பந்து வீச்சில் 50 (85) ஓட்டங்களுடன் அனுஜ் ராவத் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த சமீர் சௌத்ரி மற்றும் அதர்வா டைட் ஆகியோர் இணைந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். சிறப்பாக ஆடிய சமீர் சௌத்ரி 35 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, அவருடன் இணைந்து துடுப்பெடுத்தாடிய அதர்வா டைட் 9 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, அணியின் வெற்றியை 37.1 ஓவர்களில் உறுதிசெய்தனர்.
>>கிரிக்கெட் காணொளிகளைப் பார்வையிட<<
போட்டியை பொருத்தவரையில் இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் நெருக்கடிகளை கொடுத்திருந்தனர். 144 என்ற வெற்றியிலக்கினை எட்டுவதற்கு இந்திய இளையோர் அணி 37.1 ஓவர்களை எடுத்துக்கொண்டிருந்தது. இதனால் இலங்கை அணி சற்று நிலையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருக்குமாயின் இலங்கை அணிக்கும் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
இலங்கை அணியின் சார்பில் பந்து வீச்சில் லக்ஷித மனசிங்க 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், அவிஷ்க லக்ஷான் மற்றும் சந்துன் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை பகிர்ந்துக்கொண்டனர். இதன்படி இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலைப்பெற்றுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சிங்களிஸ் கிரிக்கெட் மைதானத்தில் (SSC), எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.
போட்டி சுருக்கம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















