இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு எதிரான இரண்டாவதும் கடைசியுமான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்கும் நோக்குடன் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறது
அம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியின் மூன்றாவது நாளான இன்று (04) முழு நாளும் தனது இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 344 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 241 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் நாளை (05) கடைசி நாள் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு சவால் கொடுக்க எதிர்பார்த்துள்ளது.
அசலங்கவின் சதத்தினால் இலங்கை வளர்ந்து வரும் அணி முன்னிலையில்
சரித் அசலங்கவின் சதத்தின் உதவியோடு தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்கு எதிரான…
கடந்த வியாழக்கிழமை (2) ஆரம்பமான இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி தனது முதல் இன்னிங்ஸில் 216 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 19 வயது சுழல் பந்துவீச்சாளர் கமிந்து மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் இலங்கை வளர்ந்து வரும் அணி சரித் அசலங்கவின் சதத்தின் உதவியோடு தனது முதல் இன்னிங்ஸில் 319 ஓட்டங்களை பெற்று முன்னிலை பெற்றது.
எனினும் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி விக்கெட் இழப்பின்றி 47 ஓட்டங்களை பெற்ற நிலையிலேயே இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இதில் 20 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தை தொடர்ந்த ரியான் ரிகல்டன் மேலும் 17 ஓட்டங்களை பெற்ற நிலையில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவின் பந்துக்கு போல்டானார்.
மறுமுனையில் 25 ஓட்டங்களுடன் இன்றை தினத்தில் துடுப்பாட்டத்தை தொடர்ந்த அணித்தலைவர் டோனி டி சொர்சி இரண்டாவது விக்கெட்டுக்கு ககிசோ ரபுலானாவுடன் இணைந்து 101 ஓட்டங்களை பகிர்ந்துகொள்ள தென்னாபிரிக்க அணியின் ஓட்டங்கள் 200 ஐ நெருங்கியது.
இந்நிலையில் 41 ஓட்டங்களை பெற்றிருந்த ரபுலானாவை சுழல் பந்து வீச்சாளர் சரித் அசலங்க போல்ட் செய்தார். அபாரமாக துடுப்பெடுத்தாடிய டி சொர்சி சதம் கடந்த நிலையில் லஹிரு கமகேவின் பந்துக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். 167 பந்துகளுக்கு முகம்கொடுத்த டி சொர்சி 10 பௌண்டரிகளுடன் 103 ஓட்டங்களை பெற்றார்.
மத்திய வரிசையில் சிறப்பாக ஆடிய ரய்னார்ட் வான் டொன்டர் 68 ஓட்டங்களை பெற்றிருந்தபோது உபாதை காரணமாக ஓய்வறை திரும்பினார். மத்திய பின்வரிசை விக்கெட்டுகளை இலங்கை பந்து வீச்சாளர்களால் குறைந்த ஓட்டங்களுக்கு வீழ்த்த முடிந்த போதும் அதற்குள் தென்னாபிரிக்க அணி வலுவான முன்னிலை ஒன்றை பெற்றுக் கொண்டது.
மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி 344 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருக்கும் நிலையில் இன்னும் 4 விக்கெட்டுகள் கைவசம் இருக்க நாளை கடைசி நாள் ஆட்டத்தில் சிறிது நேரம் துடுப்பெடுத்தாடி இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.
தென்னாபிரிக்காவுடனான முதல் மோதலில் இலங்கை வளர்ந்து வரும் அணி வெற்றி
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி…
மத்திய பின்வரிசை வீரர்களான சமன்கலிசன் லெபேலா 4 ஓட்டங்களுடனும் கிரகோரி மஹ்லொக்வானா 6 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஏற்கனவே முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை வளர்ந்து வரும் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற நிலையில் இலங்கை தரப்பு தொடரை வெல்ல இந்த போட்டியை குறைந்தது சமநிலையிலேனும் முடித்துக் கொள்ளவேண்டும். நாளை போட்டியின் கடைசி நாள் என்பதால் இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விபரம்
>
பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க




















