பஞ்சாப் அணியிலிருந்து விடைபெறும் அஸ்வின்!

70
www.iplt20.com

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் அறிமுகபடுத்தப்பட்டுள்ள வீரர்கள் பறிமாற்றத்தின் அடிப்படையில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, ரவிச்சந்திரன் அஸ்வினை வாங்கியுள்ளதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் நோ போல்களைக் கண்காணிக்க தொலைக்காட்சி நடுவர்

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டியில் ……..

குறிப்பிட்ட இந்த வீரர்கள் பறிமாற்றத்தின் படி, டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி இந்திய ரூபாயில் ஒன்றரை கோடி மற்றும் இடதுகை சுழல் பந்துவீச்சாளரான ஜெகதீஸா சுச்சித் ஆகியோரை வழங்கி, அஸ்வினை தங்களது அணியில் இணைத்துள்ளது. இந்த பரிமாற்றத்தின் அடிப்படையில் அஸ்வின் 2018ம் ஆண்டு ஏலத்தில் பெற்றுக்கொண்ட 7.6 கோடியை பெற்றுக்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிமாற்றம் தொடர்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் குறிப்பிடுகையில், “இந்த பரிமாற்றத்தால் இரண்டு அணிகள் மற்றும் அஸ்வினுக்கும் மகிழ்ச்சி. நாம் மூன்று அணிகளிடம் இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், இந்த பரிமாற்றம் சரியாக அமைந்தது” 

இந்த பரிமாற்றம் தொடர்பில் அஸ்வின் மற்றும் எமக்கு (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் மூலமாகதான் இந்த பரிமாற்றம் தொடர்பிலான முடிவு எடுக்கப்பட்டது” எனவும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

அஸ்வின் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அறிமுகமாகினார். இதுவரையில். 139 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் சிறந்த பந்துவீச்சு பிரதியுடன் 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேநேரம் 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக இவர் விளையாடிய போது, அந்த அணி சம்பியன் கிண்ணத்தை வென்றிருந்தது.

அதேநேரம், அஸ்வின் கடந்த இரண்டு பருவகாலங்களாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடியுள்ளதுடன், அணித் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். இவரது தலைமையின் கீழ் அணி சிறப்பாக செயற்பட்டிருந்த போதும், ப்ளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை. அத்துடன், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதுவரையில் ஐ.பி.எல். சம்பியன் கிண்ணத்தை வெல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். ஏலத்தில் கோடிகளை அள்ளிய வருண் சக்ரவர்த்தி

சர்வதேச கிரிக்கெட்டில் இரசிகர்கள் மத்தியில் தற்போது …….

இந்தநிலையில், பஞ்சாப் அணியில் கடந்த பருவகாலங்களில் சிறப்பாக விளையாடி வரும் கே.எல். ராஹுல், அஸ்வினுக்கு பதிலாக புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. எனினும், இதுதொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, ஐ.பி.எல். வீரர்கள் பறிமாற்றமானது எதிர்வரும் 14ம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<