கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் 80ஆம் வருட குழுவினரால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டு வரும் 2017ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி கிண்ண தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு டி மெசனொட், ஹமீட் அல் ஹுசைனி, புத்தளம் ஸாஹிரா மற்றும் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணிகள் தெரிவாகியுள்ளன.

இத்தொடரின் ஆரம்பப் போட்டி கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் இடம்பெற்ற நிலையில், அடுத்த கட்டங்களான, காலிறுதிக்கு முன்னைய மற்றும் காலிறுதிச் சுற்றுக்கள் கொழும்பு சிடி லீக் கால்பந்து மைதானத்தில் இடம்பெற்றன.

டி மெசனொட் கல்லூரி எதிர் திருச் சிலுவைக் கல்லூரி

ஏற்கனவே காலிறுதிக்கு முன்னைய சுற்றில் டி மெசனொட் கல்லூரி, முஸ்லிம் மத்திய கல்லூரியை 5-4 என்று பெனால்டியில் வீழ்த்தியிருந்ததுடன், திருச் சிலுவைக் கல்லூரி அணியினர் ஆனந்த கல்லூரி அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தினர்.

இறுதியாக இடம்பெற்று முடிந்த டிவிஷன் 01 தரத்திலான பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்து அணிகளுக்கு இடையிலான சுற்றுத்தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்ற திருச் சிலுவைக் கல்லூரி அணி பலம் வாய்ந்த அணி எனக் கருதப்பட்டது.

எனினும், போட்டியின் 3ஆவது நிமிடத்தில் டி மெசனொட் அணி வீரர் நிம்ஷான் சொய்சா அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்து, ஆரம்பத்திலேயே தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

எனினும் பின்னர் டிவிஷன் 01 போட்டித் தொடரின் தங்கப் பாதணியை சுவீகரித்துக்கொண்ட நிர்மால் உதார, திருச் சிலுவைக் கல்லூரி அணிக்கான முதல் கோலைப் பெற பல முயற்சிகளை மேற்கொண்டும் அவை வெற்றியளிக்கவில்லை.

பாடசாலைகளுக்கு இடையிலான மற்றொரு மோதலான ஜனாதிபதிக் கிண்ணத் தொடர் ஆரம்பம்

போட்டியின் இரண்டாவது பாதியின் 52ஆவது நிமிடத்தில் ப்ரமுதித குனசேகர டி மெசனொட் அணிக்கான இரண்டாவது கோலையும் பெற, போட்டி நிறைவில் அவ்வணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

முழு நேரம்: டி மெசனொட் கல்லூரி 02 – 00 திருச் சிலுவைக் கல்லூரி

கோல் பெற்றவர்கள் 

டி மெசனொட் கல்லூரி – நிம்ஷான் சொய்சா 03’, ப்ரமுதித குனசேகர 52’


ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி

காலிறுதிக்கு முன்னைய சுற்றில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி அணி, புனித பெனடிக்ட் கல்லூரி அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கிலும், நாலந்த கல்லூரி அணி, டி.எஸ் சேனநாயக கல்லூரி அணியினரை பெனால்டியில் 4-1 என்ற கோல்கள் கணக்கிலும் வெற்றிகொண்டிருந்தனர்.

காலிறுதியில், பின்கள வீரராக செயற்படும் கரீம் பாசிலின் 9ஆவது நிமிட கோலுடன் முன்னிலை பெற்ற ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி அணியினர், பின்னர் 22ஆவது மற்றும் 35ஆவது நிமிடங்களில் சாஜித் பெற்ற கோல்களின் உதவியுடன் முதல் பாதியில் 3-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாதியில் சிறந்த பின்கள தடுப்புக்களை மேற்கொண்ட நாலந்த கல்லூரி வீரர்கள் முதல் பாதியை விடவும் சிறந்த முறையில் எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தனர்.

இதன் காரணமாக 47ஆவது நிமிடத்தில் அபிஷயன் மாத்திரம் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரிக்காக ஒரு கோலைப் பெற்றுக்கொடுத்தார். எனினும் நாலந்த கல்லூரி அணியினருக்கு கோல் பெற்றுக்கொள்ளும் எந்த வாய்ப்பையும் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி வீரர்கள் வழங்கவில்லை.

முழு நேரம்: ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி 04 – 00 நாலந்த கல்லூரி  

கோல் பெற்றவர்கள்  

ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி – கரீம் பாசில் 09’, சாஜித் 22’, 35’, அபிஷயன் 47’


புத்தளம் ஸாஹிரா கல்லூரி எதிர் லும்பினி கல்லூரி

புத்தளம் ஸாஹிரா கல்லூரி அணி முன்னைய சுற்றில் டி.பி ஜாயா கல்லூரி அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட அதேவேளை, லும்பினி கல்லூரி அணியும் 2-1 என்ற கோல்கள் கணக்கில் அல் ஹிலால் கல்லூரி அணியை வீழ்த்தியிருந்தது.

இந்நிலையில் காலிறுதிப் போட்டி ஆரம்பமாகி 13ஆவது நிமிடத்தில் ஸாஹிரா அணி வீரர் மொஹமட் ஜலீல் அணிக்கான முதல் கோலைப் பெற, அடுத்த இரண்டு நிமிடங்களில் அவ்வணியின் சக வீரர் மொஹமட் முசக்கிர் அடுத்த கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

எனினும் அதற்கு முதல் பாதியிலேயே பதில் கொடுக்கும் வகையில், லும்பினி கல்லூரி வீரர் தான்ஜோய் போட்டியின் 26ஆவது மற்றும் 31ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் பெற்று ஆட்டத்தை சமப்படுத்தினார்.

இரண்டாவது பாதியில் மீண்டும் அதிரடி ஆட்டம் காட்டிய முசக்கிர் 40ஆவது நிமிடத்திலும், ஜலீல் 46ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோலைப் பெற்றுக்கொடுத்தனர்.

அதற்கு ஈடாக, லும்பினி கல்லூரியினரால் மேலதிகமாக ஒரு கோலை மாத்திரமே பெற முடிந்தது. அதனை அவ்வணியின் மொஹமட் பஹாத் 57ஆவது நிமிடத்தில் பெற்றார்.

முழு நேரம்: புத்தளம் ஸாஹிரா கல்லூரி 04 – 03 லும்பினி கல்லூரி

கோல் பெற்றவர்கள்  

புத்தளம் ஸாஹிரா கல்லூரி – மொஹமட் ஜலீல் 13’, 46’, மொஹமட் முசக்கிர் 15’, 40’

லும்பினி கல்லூரி – தான்ஜோய் 26’, 31’, மொஹமட் பஹாத் 57’


மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி

இப்போட்டியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியின் கோல் காப்பாளர் உமேஷ் சஞ்சயவின் சிறந்த பங்களிப்பே வெற்றிக்கு காரணம் என்று கூற வேண்டும்.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி தமது முன்னைய சுற்றில் தர்ஸ்டன் கல்லூரியை 5-0 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக வெற்றிகொண்டிருந்த அதேவேளை, புனித பேதுரு கல்லூரி, ரோயல் கல்லூரியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டிருந்தது.  

பாடசாலைகளுக்கு இடையிலான டிவிஷன் 1 தொடரின் மூன்றாம் இடத்தைப் பிடித்த மாரிஸ் ஸ்டெல்லா அணியினர் போட்டியின் முதல் பாதியின் 30ஆவது நிமிடத்தில் தத்சர பெர்னாண்டோ மூலம் ஆட்டத்தில் முன்னிலை பெறுவதற்கான கோலைப் பெற்றார்.

எனினும் இரண்டாவது பாதியின் 50ஆவது நிமிடத்தில் 16வயதின் கீழ் தேசிய அணியின் முன்னாள் வீரர் மொஹமட் சாபிர் மூலம் பேதுரு கல்லூரி அணியினர் முதல் கோலைப் பெற்றனர்.

அவ்விரு கோல்களுடன் போட்டி சமநிலையில் நிறைவடைய, வெற்றியைத் தீர்மானிப்பதற்கு பெனால்டி உதை வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன்போது சிறந்த முறையில் செயற்பட்ட மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியின் கோல் காப்பாளர் உமேஷ் சஞ்சய, இரண்டு தடுப்புக்களை மேற்கொள்ள, அவ்வணி 3-2 என்ற கணக்கில் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகியது.

முழு நேரம்: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 01(03) – (02) 01 புனித பேதுரு கல்லூரி

கோல் பெற்றவர்கள்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – தத்சர பெர்னாண்டோ- 30’

புனித பேதுரு கல்லூரி – மொஹமட் சாபிர் – 50 ‘

இந்நிலையில் இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.