டயலொக் றக்பி லீக் 3 ஆம் வாரப் போட்டிகளில் இன்று CH & FC அணியை வெளிசரை மைதானத்தில் எதிர்கொண்ட கடற்படை அணியானது 55-03 என்ற புள்ளிகள் கணக்கில் பாரிய வெற்றியீட்டியது.

ஆரம்பத்திலிருந்தே கடற்படை அணியானது CH & FC அணிக்கு அழுத்தத்தின் மேல் அழுத்தத்தைக் கொடுத்து வந்தது. CH & FC அணியும் அதை தாங்கி வந்த போதிலும் 12 ஆவது நிமிடத்தில் கடற்படை அணியானது முதலாவது புள்ளியைப் பெற்றுக்கொண்டது. 12 ஆவது நிமிடத்தில் ரிச்சி தர்மபால CH & FC அணியின் கோட்டைக்குள் உதைத்த பந்தை சிறப்பாகப் பெற்றுக்கொண்ட சாணக சந்திமால் கடற்படை அணி சார்பாக முதலாவது ட்ரை வைத்தார். திலின வீரசிங்கவின் வெற்றிகரமான உதையுடன் கடற்படை அணி 7 புள்ளிகளால் முன்னிலை பெற்றது. (CH & FC 00 – கடற்படை 07)

அதன் பின்னர் கடற்படை அணியானது ஒவ்வொரு 5 நிமிடமும் ட்ரை வைத்தது எனக் கூறலாம். 19 ஆவது நிமிடத்தில் கடற்படை அணியானது தமது 2 ஆவது ட்ரையை வைத்தது. இம்முறை 5 மீட்டர் ஸ்க்ரம் இருந்து பந்தை பெற்றுக்கொண்ட லீ கீகள், CH & FC அணியூடாக சென்று ட்ரை வைத்து அசத்தினார். திலின வீரசிங்க இவ் உதையையும் தவறவிடவில்லை. (CH & FC 00 – கடற்படை 14)

சில நிமிடங்களின் பின்னர் திலின வீரசிங்க கடற்படை அணி சார்பாக 3 ஆவது ட்ரை வைத்தார். அவரே உதையையும் வெற்றிகரமாக இரு கம்பங்களின் நடுவே உதைந்தார். CH & FC அணியின் வீரர் நிஸ்மி நிலார் நடுவரினால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட, CH & FC அணியின் நிலைமை மேலும் மோசமானது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட கடற்படை அணியானது அடுத்த 5 நிமிடங்களில் லீ கீகள் மற்றும் துலாஞ்சன விஜேசிங்க மூலமாக அடுத்தடுத்து இரண்டு ட்ரை வைத்தது. (CH & FC 00 – கடற்படை 33)

கடற்படை அணியின் முன் வரிசை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை முதல் பாதியில் வெளிப்படுத்தினர். 8 ஆம் இலக்க வீரரான நிவங்க பிரசாத் இப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார். CH & FC அணியானது கடற்படை அணியின் கோட்டைக்குள் ஒரே ஒரு முறை நுழைந்தது. அவ் வாய்ப்பைப் பயன்படுத்தி கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பின் மூலம் 3 புள்ளிகளை CH & FC அணி பெற்றுக்கொண்டது. (CH & FC 03 – கடற்படை 33)

முதற் பாதி – CH & FC 03 – கடற்படை 33

இரண்டாம் பாதியின் முதல் சில நிமிடங்களில் இரு அணிகளாலும் ஒரு புள்ளியேனும் பெற முடியவில்லை. கடற்படை அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் அவ் வாய்ப்புகளின் மூலம் புள்ளிகளைப் பெற கடற்படை அணி தவறியது. எனினும் சில நிமிடங்களின் பின்னர் கடற்படை அணி புதிய வீரர்களை களமிறக்க மீண்டும் ட்ரை மழையை கடற்படை அணி ஆரம்பித்தது.

கடற்படை அணியின் புத்திம பிரியரத்ன சிறப்பாக செயற்பட்டு, எதிரணியின் 22 மீட்டர் எல்லைக்குள் சென்ற பின்னர் பந்தை பிரசாத் நிவங்கவிற்கு பரிமாறினார். பந்தைப் பெற்ற பிரசாத் ட்ரை கோட்டை தாண்டி ட்ரை வைத்தார். (CH & FC 03 – கடற்படை 38)

3 நிமிடங்களின் பின்னர் ரிச்சி தர்மபால சாதுர்யமாக எதிரணி வீரர்களை கடந்ததன் மூலம் இலகுவான வாய்ப்பை பெற்ற கடற்படை அணியானது ஹர்ஷ மதுரங்க மூலமாக 7 ஆவது ட்ரையை வைத்தது. திலின வீரசிங்க இரு கம்பங்களுக்கு இடையே வெற்றிகரமாக உதைத்து மேலதிக 2 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார். (CH & FC 03 – கடற்படை 45)

இறுதி 10 நிமிடங்களில் கடற்படை அணியானது மேலும் 2 ட்ரை வைத்து தனது முன்னிலையை அதிகரித்துக்கொண்டது. சிறு சிறு தவறுகளை செய்ததனால் கடற்படை அணி இப்போட்டியில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது எனக் கூறமுடியாது. மறு முனையில் CH & FC அணியானது மீண்டும் ஒரு முறை மோசமான தோல்வியை அடைந்தது. CH & FC அணியானது முழுப் போட்டியிலும் ஒரே ஒரு முறை மட்டும்தான் எதிரணியின் 22 மீட்டர் எல்லைக்குள் நுழைந்தது. இது இப்போட்டியில் கடற்படை அணியின் ஆதிக்கத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

முழு நேரம் :  CH & FC 03 – கடற்படை 55

ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் – நிவங்க பிரசாத் (கடற்படை அணி)

கடற்படை அணி சார்பாக புள்ளிகள் பெற்றோர்  – திலின வீரசிங்க 1T 5C, லீ கீகள் 2T, துலாஞ்சன விஜேசிங்க 1T, பிரசாத் நிவங்க 1T, சாணக சந்திமால் 1T, லஹிரு ஹேரத் 1T, ஸ்டெப்பான் க்ரெகரி 1T, ஹர்ஷ மதுரங்க 1T

CH & FC அணி சார்பாக புள்ளிகள் பெற்றோர் – ஜனித் சந்திமால் 1P