பிரிவு – A (டிவிஷன் -A) இற்குரிய வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான (மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட) பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் 25 ஆவது தடவையாகவும் சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு இன்று ஆரம்பமாகியிருந்தது. தொடரின் முதல் நாளில் மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்தன.

சம்பத் வங்கி எதிர் டிமோ நிறுவனம்

சம்பத் வங்கி டிமோ நிறுவனத்தை இப்போட்டியில் 5 ஓட்டங்களால் டக்வெத் லூயிஸ் முறையில் தோற்கடித்தது.

முன்னதாக, கட்டுநாயக்க FTZ மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப் போட்டியின் ஓவர்கள் 45 ஆக குறைக்கப்பட்டிருந்தது.

இன்றைய ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டிமோ அணி முதலில் சம்பத் வங்கியினை துடுப்பாட பணித்தது. இதன்படி களமிறங்கிய அவ்வணியில் அவிஷ்க பெர்ணாந்து (65) மற்றும் ரொமேஷ் புத்திக்க (59) ஆகியோர் அரைச்சதம் கடந்தனர். இவர்களின் ஓட்ட உதவியுடன் 44.3 ஓவர்களில் சம்பத் வங்கி  சகல விக்கெட்டுக்களையும் இழந்து 237 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில் டிமோ நிறுவனம் சார்பாக திக்ஷில டி சில்வா 3 விக்கெட்டுக்களையும் ரமேஷ் மெண்டிஸ் 2 விக்கெட்டுக்களையும் பதம் பார்த்திருந்தனர்.

போட்டியில் மழை குறுக்கிட வெற்றி இலக்காக 32 ஓவர்களில் டிமோ அணிக்கு 192 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதனைப் பெறுவதற்கு ஆடிய டிமோ வீரர்கள் 31.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியினை தழுவிக்கொண்டனர்.

டிமோ அணி சார்பாக அதிகபட்சமாக லசித் அபேரத்ன 28 ஓட்டங்களினை பெற்றிருந்தார். சம்பத் வங்கியின் பந்து வீச்சில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித மற்றும் சுழல் வீரர் தரிந்து கெளசால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் வீழ்த்தி தமது அணியினை வெற்றியாளர்களாக மாற்றினர்.

போட்டியின் சுருக்கம்

சம்பத் வங்கி – 237 (44.3) அவிஷ்க பெர்ணாந்து 65, ரொமேஷ் புத்திக்க 59, திக்ஷில டி சில்வா 3/36, ரமேஷ் மெண்டிஸ் 2/22

டிமோ நிறுவனம் – 186 (31.3) லசித் அபேரத்ன 28, பிரபாத் ஜயசூரிய 4/32, கசுன் ராஜித 2/38, தரிந்து கெளசால் 2/33


ஹேலீஸ் நிறுவனம் (A) எதிர் டீஜேய் லங்கா நிறுவனம்

ஹேலீஸ் (A) நிறுவனத்திற்கும் டீஜேய் லங்கா நிறுவனத்திற்கும் இடையிலான இப்போட்டி சீரற்ற காலநிலை காரணமாக முடிவுகள் ஏதுமின்றி கைவிடப்பட்டது.

43  ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த இப்போட்டி. மொரட்டுவ டி சொய்ஸா மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹேலீஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து கொண்டது.

இதன்படி களமிறங்கிய அவ்வணி, 28 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 89 ஓட்டங்களினைப் பெற்றிருந்த வேளையில் போட்டியில் மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன் போது, ஹேலீஸ் அணி சார்பாக சஜித் திஸ்ஸநாயக்க 30 ஓட்டங்களினையும், என்டி சோலமன் 21 ஓட்டங்களினையும் பெற்றிருந்தனர். டீஜேய் லங்கா அணியின் தலைவர் சுரங்க லக்மால் இரண்டு விக்கெட்டுக்களை பதம்பார்த்திருந்தார்.

தொடர்ந்து மழை நீடித்த காரணத்தினால், ஹேலீஸ் அணியின் இன்னிங்ஸ் நிறைவடைந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். அதோடு குறிப்பிட்ட நேரமே போட்டியை முடிக்க காணப்பட்டிருந்ததால் டீஜேய் லங்கா அணிக்கு வெற்றி இலக்காக 20 ஓவர்களில் 82 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதனைப்பெறுவதற்கு ஆடிய டீஜேய் லங்கா அணியினர் 9.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 78 ஓட்டங்களினை குவித்திருந்த வேளையில் மழை மீண்டும் குறுக்கிட போட்டி கைவிடப்பட்டது. டீஜேய் லங்கா சார்பிலான துடுப்பாட்டத்தில் மினோத் பானுக்க 38 ஓட்டங்களினையும், சஜித்ர சேனநாயக்க 27 ஓட்டங்களினையும் குவித்திருந்தனர். ஹேலீஸ் அணிக்காக அலி கான் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ஹேய்லஸ் நிறுவனம் (A) – சஜித் திஸ்ஸநாயக்க 30, என்டி சோலமன் 21, சுரங்க லக்மால் 2/22

டிஜேய் லங்கா நிறுவனம்மினோத் பானுக்க 38, சஜித்ர சேனநாயக்க 27, அலி கான் 2/28


ஹட்டன் நஷனல் வங்கி (A) எதிர் கென்ரிச் பினான்ஸ் (A)

ஹட்டன் நஷனல் வங்கி (A) இப்போட்டியில் கென்ரிச் பினான்ஸ் (A) அணியினரை டக்வெத் லூயிஸ் முறையில் 37 ஓட்டங்களால் வீழ்த்தியது.

43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டி, கொல்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியிருந்தது. ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கென்ரிச் பினான்ஸ் அணி ஹட்டன் நஷனல் வங்கியினை முதலில் துடுப்பாட பணித்தது.

ஹட்டன் நஷனல் வங்கி சார்பாக தேஷன் டயஸ் மற்றும் மதவ்வ வர்ணபுர ஆகியோர் அரைச்சதம் விளாசி தலா 51 ஓட்டங்கள் வீதம் பெற்றிருந்தனர். இவர்களின் துடுப்பாட்டத்தினை தவிர அணியின் ஏனைய வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தினை கொண்டுவர 40.3 ஓவர்களில் ஹட்டன் நஷனல் வங்கி அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 151 ஓட்டங்களினை மாத்திரம் பெற்றது. கென்ரிச் பினான்ஸ் அணியின் பந்து வீச்சில் அகில தனன்ஞய மற்றும் அலங்கார அசங்க ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

கென்ரிச் பினான்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ஓட்டங்களினை பெற ஆடிய அவ்வணி 27.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 99 ஓட்டங்களினை பெற்றிருந்த வேளையில் சீரற்ற காலநிலையினால் போட்டி நிறுத்தப்பட்டு டக்வெத் லூயிஸ் முறையில் 37 ஓட்டங்களால் ஹட்டன் நஷனல் வங்கி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கென்ரிச் பினான்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக கசுன் விதுர 36 ஓட்டங்களை பெற்றதோடு, லஹிரு விமுக்தி 4 விக்கெட்டுக்களை ஹட்டன் நஷனல் வங்கிக்காக கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ஹட்டன் நஷனல் வங்கி (A) – 157 (40.3) தேசன் டயஸ் 51, மதவ வர்ணபுர 51, அகில தனன்ஞய 3/36, அலங்கார அசங்க 3/45

கென்ரிச் பினான்ஸ் (A) – 99/8 (27.2)  கசுன் விதுர 36, லஹிரு விமுக்தி 4/39


  • பிரிவு  B (டிவிஷன் B)

பெயர் என் லவ்லி மென் நிறுவனத்தின் அனுசரனையோடு பிரிவு B (டிவிஷன் B) வர்த்தக நிறுவனங்கள் இடையிலான கிரிக்கெட் தொடரும் இன்று ஆரம்பமாகி இருந்தது. இன்றைய நாளில் ஒரு போட்டி நிறைவடைந்திருந்தது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (B) எதிர் யுனிலிவர் லங்கா

MCA மைதானத்தில் நடைபெற்ற ஆரம்ப போட்டியில்  ஜோன் கீல்ஸ் அணி 174 ஓட்டங்களால் யுனிலிவர் லங்கா அணியினை வீழ்த்தி இலகு வெற்றியினை சுவீகரித்தது.

43 ஓவர்களாக அமைந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யுனிலிவர் லங்கா அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை ஜோன் கீல்ஸ் அணிக்கு வழங்கியது.

முதலில் துடுப்பாடி 42.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி, 253 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது. இதில் அதிகபட்சமாக கவீன் பண்டார  44 ஓட்டங்களினையும், ரவிந்து கொடித்துவக்கு 40 ஓட்டங்களினையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட கிஹான் டி சொய்ஸா 3 விக்கெட்டுக்களை பதம் பார்த்திருந்தார்.

வெற்றி இலக்காக 254 ஓட்டங்களினை பெற பதிலுக்கு ஆடிய யுனிலிவர் லங்கா அணியினர் தரிந்து ரத்னநாயக்கவின் அதிரடி பந்துவீச்சினால் 21.5 ஓவர்களில் 79 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வியடைந்தனர். தரிந்து ரத்னாயக்க வெறும் 14 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததோடு, அக்தப் காதர் உம் 3 விக்கெட்டுக்களை சாய்த்து தனது அணியின் வெற்றியிற்கு உதவியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் (B) – 253 (42.3) கவீன் பண்டார 44, ரவீந்து கொடித்துவக்கு 40, கிஹான் டி சொய்ஸா 3/31

யுனிலிவர் லங்கா – 79 (21.5) தரிந்து ரத்னாயக்க 5/14, அக்தப் காதர் 3/10