இலங்கை அணியின் முன்னாள் தலைவருக்கு புதிய பொறுப்பு

1660
Mathews

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் டெஸ்ட் போட்டிகளில் இனிமேல் நான்காம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக மட்டுமே (வேறு எதிலும் கவனம் செலுத்தாது) செயற்படுவார் என அறியக்கிடைக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவரான மெதிவ்ஸ், முன்னாள் ஜாம்பவான்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இலங்கை அணியில் விளையாடியிருந்த போது ஐந்தாம் இலக்க துடுப்பாட்ட வீரராக அணியின் மத்திய வரிசையினைப் பலப்படுத்தும் வீரர்களில் ஒருவராக காணப்பட்டிருந்தார். எனினும் சங்கா, மஹேல ஆகியோரின் ஓய்வுக்குப் பின்னர் இலங்கை அணியில் இருக்கும் சிறந்த துடுப்பாட்ட வீரரான மெதிவ்சுக்கு நான்காம் இலக்க வீரராக களம் நுழைந்து அணியினை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு உருவாகியிருக்கின்றது.

இந்தியாவுக்கெதிரான இலங்கை டெஸ்ட் குழாம் இதுதான்

இந்திய அணிக்கு எதிராக நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கொல்கத்தாவில் ஆரம்பமாகவிருக்கும்…

இந்திய அணியுடன் ஒகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணியானது ஒரு தடவை மாத்திரமே 300 ஓட்டங்களைத் தாண்டியிருந்தது.  இத்தொடரில் இலங்கை வீரர்களை எடுத்துப்பார்க்கும் போது குறிப்பிட்டுக் காட்டும் படியான ஆட்டத்தினை திமுத் கருணாரத்ன மாத்திரமே வெளிப்படுத்தியிருந்தார். அதோடு மெதிவ்சும் இத்தொடரில் 83, 2, 26, 36, 0 மற்றும் 35 போன்ற ஓட்டங்களினை பெற்று சாதாரணமாகவே செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் தோல்வியினை அடுத்து இலங்கை ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்திருந்தது. இத்தொடரில் மெதிவ்ஸ் காயம் காரணமாக பங்கேற்காது போயிருந்தார். இன்னும் சொல்லப்போனால் தொடர் உபாதைகள் காரணமாக 2016ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதம் முதல் இதுவரை 37 சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணியின் தலைசிறந்த சகலதுறை வீரர் விளையாடியிருக்கவில்லை. அதாவது 6 டெஸ்ட் போட்டிகள், 20 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 11 T-20 போட்டிகளை மெதிவ்ஸ் தவறவிட்டிருக்கின்றார்.

காயத்தின் பின்னர் அணிக்குத் திரும்பிய மெதிவ்ஸ் தான் விளையாடிய போட்டிகள் பலவற்றில் மேலதிக அபாயத்தினை கருத்திற் கொண்டு பந்துவீச்சாளராக செயற்படாதும் விட்டிருந்தார்.

தனது நிலைமைகள் தொடர்பாக கிரிக்பஸ் (Cricbuzz) செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவித்திருந்த மெதிவ்ஸ், எனக்கு இரண்டு வாரங்கள் மிகவும் கவலைக்குரியதாக அமைந்திருந்தது. ஏனெனில், எனது அணி வீரர்கள் விளையாடுவதை நான் வீட்டிலிருந்து (தொலைக்காட்சி) மூலம் பார்த்துக் கொண்டிருந்தேன். இருந்த போதிலும் நான் இதையும் சொல்லியே ஆக வேண்டும். 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை எனக்கு நல்லவிதமாக அமைந்திருந்தது. ஏனெனில் அப்போதைய காலப்பகுதியில் நடைபெற்ற எந்தவொரு போட்டியினையும் நான் தவறவிட்டதில்லை. இறுதியில் அவ்வாறு (ஓய்வின்றி) செயற்பட்டதற்காகத்தான் இப்போது என்னை ஓய்வு அனுபவிக்க வைக்கின்றது போலத்தெரிகின்றது.

இதற்காக நான் கொழும்பிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் உள்ள சில வைத்தியர்களிடம் பேசியிருந்தேன். தற்போது எனது பயிற்றுவிப்பாளர்கள் எனக்கான ஓர் விசேட நிகழ்ச்சித் திட்டத்தினை உருவாக்கித் தந்துள்ளனர். அதை சரியான முறையில் கடைப்பிடிப்பது மாத்திரமே எனது வேலை.

எனது வேலைச்சுமையினை குறைக்கும் படியும் தேர்வாளர்களிடம் பேசியிருந்தேன். அவர்கள் அதற்காக நல்ல முடிவினை தந்துள்ளனர். இதனடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மாத்திரம் பந்து வீச கவனம் செலுத்துகின்றேன். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசுவது எனக்கு ஆபத்தாக அமையும். “ என குறிப்பிட்டிருந்தார்.

துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் சமரவீர இன்றி இந்தியா சென்ற இலங்கை அணி

ஏழு வார கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியுடன், புதிய…

இலங்கை கிரிக்கெட் அணியானது இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் புதிய துடுப்பாட்ட வரிசையைப் பரிசோதனை செய்து பார்க்கவிருக்கின்றது. இளம் வீரரான சதீர சமரவிக்ரம ஆரம்ப வீரராக திமுத் கருணாரத்னவுடன் களமிறங்க எதிர்பார்க்கப்படுவதோடு மூன்றாம் இடத்தில் தனன்ஞய டி சில்வா அல்லது லஹிரு திரிமான்ன விளையாட முடியும். அதோடு நான்காம் ஐந்தாம் இடங்களில் முறையே மெதிவ்ஸ் மற்றும் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் விளையாடி அணியினை வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 16ஆம் திகதி இலங்கை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகின்றது. இந்திய அணியுடனான அனைத்துப் போட்டிகளையும் கடந்த ஒகஸ்ட்டில் 9-0 என்கிற தொடர் தோல்விகளுடன் பறிகொடுத்திருந்த இலங்கை அணியில் தற்போது மாற்றங்கள் பல ஏற்பட்டுள்ளன.

எனவே, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தமது அண்டை நாட்டுக்காரர்களுடன் இந்த தடவை இலங்கை போராட்டத்தினை வெளிப்படுத்தும் என நம்பப்படுகின்றது.