நியூசிலாந்து, ஆஸி தொடர்களிலிருந்து வெளியேறும் மெதிவ்ஸ்

1805
Photo - Getty Images

நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளாகிய அஞ்செலோ மெதிவ்ஸ் வைத்திய பரிசோதனைக்காக நேற்று (29) அனுப்பபட்டிருந்தார். இந்நிலையில், மெதிவ்ஸ் தொடர்பான வைத்திய பரிசோதனை முடிவுகள் இன்று (30) வெளியாகியுள்ளன.

மீண்டும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள மெதிவ்ஸ்

நியூசிலாந்தின் கிரிஸ்ட்ச்சேர்ச்சில்…

வெளியாகியுள்ள வைத்திய பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அஞ்செலோ மெதிவ்ஸின் இடது தொடைத்தசையில் உபாதை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த உபாதையினால் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு அடுத்து வரும் நான்கு வாரங்களுக்கும் கிரிக்கெட் போட்டிகள் எதிலும் விளையாடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாளில் இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாட வந்திருந்த மெதிவ்ஸ் குறித்த நாளின் தேநீர் இடைவேளையுடன் கால் தசையில் ஏற்பட்ட உபாதை காரணமாக மைதானத்தினை விட்டு வெளியேறியிருந்தார். இதனை அடுத்து போட்டியின் ஐந்தாம் நாளிலும் மெதிவ்ஸ் துடுப்பாட வந்திருக்கவில்லை.

“அஞ்செலோ மெதிவ்ஸ் நேற்று இரவு பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்ததோடு அவரின் இடதுதொடைத் தசையில் உபாதை இருப்பதும் கண்டறியப்பட்டிருக்கின்றது. (எங்களது) உடற்பயிற்சியாளர் சொன்னதன் அடிப்படையில் அடுத்த நான்கு வாரங்களுக்கு அவரினால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது.“ என மெதிவ்ஸின் உபாதை தொடர்பில் இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையை வீழ்த்தி சாதனை வெற்றியை பதிவுசெய்த நியூசிலாந்து

நியூசிலாந்து மற்றும் சுற்றுலா இலங்கை…

அஞ்செலோ மெதிவ்ஸிற்கு ஏற்பட்டுள்ள இந்த உபாதை காரணமாக அடுத்த நான்கு வாரங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என்பதால் அவருக்கு நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள், T20 தொடர்களிலும், அதனை அடுத்து ஜனவரி 24ஆம் திகதி தொடங்கும் அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க முடியாது போயிருக்கின்றது.

எனினும், அஞ்செலோ மெதிவ்ஸ் இந்த இரு தொடர்களினையும் அடுத்து பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி இடம்பெறவுள்ள தென்னாபிரிக்க அணியுடனான கிரிக்கெட் தொடர்களில் ஆட இலங்கை அணிக்கு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் பின்னர் போதிய உடற்தகுதி இல்லை என அண்மையில் இலங்கையின் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரில் அஞ்செலோ மெதிவ்ஸ் இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

ஸ்டீவ் ஸ்மித்தின் தடையை நீக்கிய பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள்…

எனினும், நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள், T20 தொடர்களின் இலங்கை குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்ததன் மூலம் இலங்கை அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் ஆடும் வாய்ப்பை மீண்டும் மெதிவ்ஸ் பெற்றிருந்த நிலையிலேயே உபாதை அவருக்கு அந்த வாய்ப்பினை இல்லாமல் செய்திருக்கின்றது.

இதேநேரம், அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டு வரும் அஞ்செலோ மெதிவ்ஸ் இல்லாதது ஜனவரி 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரில் இலங்கை அணிக்கும் பாரிய இழப்பாகும்.  

நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள், T20 தொடர்களில் மெதிவ்ஸிற்கு பதிலாக இலங்கை அணியில் விளையாடும் பதில் வீரரின் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<