ஊக்கமருந்து குற்றச்சாட்டில் சிக்கினார் மரியா ஷரபோவா

263
Maria Sharapova

ரஷ்யாவைச் சேர்ந்த உலகின் முன்னணி நட்சத்திர டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான  மரியா ஷரபோவா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டதாக இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் டென்னிஸில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருப்பவர் மரியா ஷரபோவா. இவர் டென்னிஸில் அதிக அளவு சாதிக்காவிட்டாலும் விளம்பரங்கள் மூலம் பணங்களை வாரிக்குவித்து வருகிறார். உலக அளவில் அதிக பணம் சம்பாதிக்கும் வீராங்கனை என்ற பெயரைக் கடந்த சில வருடங்களாகத் தக்க வைத்துக்கொண்டிருந்தார்.

இவர் இந்த வருட தொடக்கத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஊக்கமருந்து சோதனைக்கான மாதிரி எடுக்கப்பட்டது. அந்த மாதிரியில் தடை செய்யப்பட்ட மெல்டோனியம் என்ற மருந்தைப் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டது. இதுகுறித்து சர்வதேச டென்னிஸ் பெடரேஷன் ஊக்கமருந்து தடுப்புப்பிரிவு விசாரணை மேற்கொண்டது. அதன் இறுதியில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷியா அணி சார்பில் அவர் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வது கேள்விக்குறியாகியுள்ளது.

இதற்கிடையே நான் மெல்டோனியத்தைக் கடந்த 10 வருடமாகப் பயன்படுத்தி வருகிறேன் என்று கூறியிருந்த மரியா, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறேன் என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மரியா ஷரபோவா ஊக்கமருந்து பயன்படுத்தியதாக செய்தி வெளியான உடனேயே பெரும்பாலான அனுசரணையாளர்கள் அவரை விட்டு விலகினர். இதனால் அதிக சம்பளம் வாங்கும் வீராங்கனை என்ற பெருமையை இழந்தார். அதை செரீனா தக்கவைத்து கொண்டார் என்பது குறிப்படத்தக்க விடயமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்