டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தினை பின்தள்ளிய விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையினை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தினை பின்தள்ளி முதலிடம் பெற்றிருக்கின்றார். 

இலங்கை கிரிக்கெட் விருதுகளில் மாலிங்க, திசர, சமரிக்கு அதிக விருதுகள்!

இலங்கை கிரிக்கெட்டில் திறமைகளை……………

தற்போது துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்றிருக்கும் கோலி மொத்தமாக 928 தரநிலைப்புள்ளிகளைப் (Rating) எடுத்திருப்பதுடன், கோலியினால் இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருக்கும் ஸ்மித் 923 புள்ளிகளுடன் காணப்படுகின்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் 136 ஓட்டங்கள் பெற்றதே டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடம் பெற காரணமாக அமைகின்றது. அதேநேரம், ஸ்டீவ் ஸ்மித் பாகிஸ்தான் அணியுடன் தனது சொந்த மண்ணில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் ஜொலிக்க தவறிய காரணத்தினாலேயே கோலியிடம் முதலிடத்தினைப் பறிகொடுத்திருக்கின்றார். 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற முச்சதம் (335) காரணமாக 12 இடங்கள் முன்னேறி புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஐந்தாம் இடத்தில் காணப்பட, நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும், இந்திய கிரிக்கெட் அணியின் செட்டெஸ்வர் புஜாரா நான்காம் இடத்திலும் காணப்படுகின்றனர். 

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரான ஜோ ரூட்டும் புதிய டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் காண்பித்திருக்கின்றார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச்சதம் (226) பெற்ற ஜோ ரூட் நான்கு இடங்கள் முன்னேறி தற்போது 7ஆம் இடத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் அஜிங்கியா ரஹானே 6ஆம் இடத்தில் காணப்படுகின்றார்.

IPL தொடருக்காக பதிவுசெய்துள்ள இலங்கையின் 39 வீரர்கள்!

இந்தியாவில் அடுத்த வருடம்………….

இதேநேரம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான மார்னஸ் லபசக்னே 8ஆம் இடத்திற்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 110ஆவது இடத்தில் காணப்பட்ட மார்னஸ் லபசக்னே இதன் மூலம் பாரிய முன்னேற்றத்தைக் காட்டியிருக்கின்றார். 

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரரான ஹென்றி நிக்கோல்ஸ் புதிய துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 9ஆம் இடத்தினை எடுக்க இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 10ஆம் இடத்தில் காணப்படுகின்றார்.

திமுத் கருணாரத்ன தவிர இலங்கை கிரிக்கெட் அணியின் குசல் மெண்டிஸ் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 23ஆவது இடத்தினைப் பெற, அஞ்செலோ மெதிவ்ஸ் 24ஆவது இடத்தில் காணப்படுகின்றார். இவர்கள் தவிர இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான தினேஷ் சந்திமால் 31ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<