முதல் முறையாக டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ள ஜேசன் ரோய்

273
GettyImage

12ஆவது ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இன்று கிரிக்கெட் உலகின் சம்பியன்களாக வலம்வந்திருக்கும் இங்கிலாந்து அணி தனது அடுத்த கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணியை டெஸ்ட் போட்டியொன்றில் சொந்த மண்ணில் எதிர்த்தாடவுள்ளது. 

அயர்லாந்து அணி நிறைவு பெற்றிருந்த உலகக்கிண்ண தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்த நிலையில் நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடன் சொந்த மண்ணில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இருதரப்பு தொடரில் பங்கேற்றிருந்தது. 

இலங்கை வீரர்களின் சாதனையை முறியடித்த ஜேசன் ரோய் – பெயர்ஸ்டோ

தற்சமயம் நடைபெற்றுவரும் 12ஆவது ஐ.சி.சி உலகக் கிண்ண தொடரில் பல சாதனைகள்…

இறுதியாக ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரை வைட்-வொஷ் மூலமும், டி20 தொடரை சமநிலையிலும் நிறைவு செய்துள்ள அயர்லாந்து அணி ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை சந்திக்கவுள்ளது. சிறப்புமிக்க லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள குறித்த ஒரேயொரு டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அயர்லாந்து கிரிக்கெட் அணியானது கடந்த 2017 ஜூன் 22 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் டெஸ்ட் அந்தஸ்து பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் அயர்லாந்து அணி முதல் முறையாக இங்கிலாந்து அணியை டெஸ்ட் போட்டியொன்றில் சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் குறித்த டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் 13 பேர் கொண்ட குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் இன்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த உலகக்கிண்ண தொடரின் போது ஜொனி பெயர்ஸ்டோவுடன் இணைந்து உலகக்கிண்ண இணைப்பாட்ட சாதனை படைத்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் முதல் முறையாக டெஸ்ட் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார். 

1990ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் டேர்பனில் பிறந்த ஜேசன் ரோய் 2014 செப்டம்பரில் டி20 போட்டியினூடாக இங்கிலாந்து அணி மூலமாக சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானார். டி20 அறிமுகம் பெற்று ஒரு வருடத்தின் பின்னர் ஒருநாள் அறிமுகம் பெற்ற ஜேசன் ரோய் தற்போது அயர்லாந்து அணியுடன் அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டி மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் தடம்பதிக்கவுள்ளார். 

2019 உலகக்கிண்ண தொடரின் போது ஏழு இன்னிங்சுகளில் 443 ஓட்டங்களை குவித்த ஜேசன் ரோய் ஐ.சி.சி யினுடைய உலகக்கிண்ண அணியில் ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. 

உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் கதாநாயகனாக திகழ்ந்து இங்கிலாந்து அணியின் கனவை நனவாக்கிய சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இறுதிப்போட்டியில் பென் ஸ்டோக்ஸூடன் சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்துகொண்ட விக்கெட் காப்பாளர் ஜொஸ் பட்லர் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மஹேலவும் விண்ணப்பிப்பாரா?

இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தன, இந்திய அணியின் தலைமைப்….

இதேவேளை வேகப்பந்துவீச்சாளரான மார்க் வூட் உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் போது உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதன் காரணமாக உபாதையிலிருந்து மீளுவதற்கு நான்கு அல்லது ஆறு வாரங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவர் டெஸ்ட் குழாமிலிருந்து விலகியுள்ளார்.  

மேலும் இங்கிலாந்து அணிக்காக உலகக்கிண்ண தொடரில் பிரகாசித்த இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர், அவுஸ்திரேலிய அணியுடனான ஆஷஷ் டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பினால் அவருக்கு அயர்லாந்து டெஸ்டில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

கவுண்டி சம்பியன்ஷிப் போட்டியில் சமர்செட் அணிக்காக பந்துவீச்சு சகலதுறை வீரராக கலக்கிய 24 வயதுடைய லுவிஸ் க்ரேகெரி முதல் முறையாக சர்வதேச அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதுவரையில் 82 முதல்தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் துடுப்பாட்டத்தில் 2,389 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 253 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.   

கடந்த வருடம் இங்கிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது ஒருநாள் அறிமுகம் பெற்ற வேகப்பந்துவீச்சாளரான ஒலி ஸ்டோன் தற்போது அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் குழாமில் இடம்பெற்று கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறவுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய நடைமுறையிலுள்ள டெஸ்ட் அணிகளின் தரவரிசைப்படி இங்கிலாந்து அணி 105 தரவரிசை புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் காணப்படுகின்றது. ஆனால் அயர்லாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள காரணத்தினால் இன்னும் டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் உள்வாங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து குழாம் 

ஜோ ரூட் (அணித்தலைவர்), மொயின் அலி, ஜேம்ஸ் அண்டர்சன், ஜொனி பெயர்ஸ்டோ, ஸ்டுவர் ப்ரோட், ரோரி பேன்ஸ், சாம் கரன், ஜோ டென்லி, லுவிஸ் க்ரேகெரி, ஜெக் லீச், ஜேசன் ரோய், ஒலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<