முதலாவது ஜப்னா கிரிக்கெட் லீக் சம்பியனான சென்றலைட்ஸ் கழகம்

250

AB விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் ஜப்னா கிரிக்கெட் லீக் (Jaffna Cricket League) சுற்றுபோட்டித்தொடரின் இறுதிப்போட்டியில் கொக்குவில் அணியை 38 ஓட்டங்களினால் வெற்றி கொண்ட சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழகம் முதலாவது பருவக்காலத்திற்கான கிண்ணத்தை தமதாக்கினர்.

இன்றய தினம் (06) யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொக்குவில் வீரர்கள் சென்றலைட்ஸ் அணியினரை முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு அழைத்தனர்.

முதலாவது பந்திலேயே கௌதமனை, பிரதீஸ் ஓய்வறை அனுப்பினார். நிஷானுடன் இணைந்த ஜெனோஷன் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். நிஷான் 36 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் பிரதீஸ் அவரது விக்கெட்டையும் கைப்பற்றினார்.

கஜனின் சதத்தினால் அரையிறுதியில் யாழ் மத்திய கல்லூரி 

மத்தியின் மைந்தர்களது விக்கெட்டுக்கள் ஒரு முனையில் சாய்ந்து கொண்டிருந்தபோதும் மறுபக்கம் அதிரடியாக துடுப்பாடிய நிரோஜன் 23 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க சென்றலைட்ஸ் 20 ஓவர்களில் 177 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

கே.சி.சி.சி சார்பில் பிரதீஸ் மற்றும் துஸ்யந்தன் 3 விக்கெட்டுக்களையும் சாம்பவன் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

178 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய இளைய வீரர் பானுஜன் மற்றும் அனுபவ வீரர் ஜெயரூபன் ஜோடி சென்ட்ரலைட்ஸின் ஆரம்ப பந்துவீச்சாளர்களை அதிரடியால் அச்சுறுத்தினர். எனினும், முதலாவது விக்கெட்டாக ஜெயரூபனை 15 ஓட்டங்களுடன் டார்வின் வெளியேற்றினார். கொக்குவில் அணி 49 ஓட்டங்களை பெற்றிருந்தவேளையில் இரண்டாவது விக்கெட்டாக 27  ஓட்டங்களுடன் பானுஜன் ஆட்டமிழந்தார்.

Photos : Centralites S.C vs Kokuvil CCC S.C | Jaffna cricket league | Finals 2018

வெற்றி இலக்கினை நோக்கி கொக்குவில் வீரர்கள் விரைவாக நகர்ந்த போதும் தசோபன், மயூரன் ஜோடி பந்து வீசுவதற்கு அழைக்கப்பட்டதன் பின்னர் போட்டியை சென்றலைட்ஸ் அணியின் பக்கத்திற்கு திசை திருப்பினர்.

ஒரு பக்கத்தில் விக்கெட்டுக்கள் விரைவாக சரிந்து கொண்டிருந்தபோதும் 31 பந்துகளில் சத்தியன் அரைச்சதம் கடந்தார். மயூரனின் பந்தில் அவரும் போல்ட் செய்யப்பட போட்டியில் சென்றலைட்ஸ் இலகுவான வெற்றியைப் பெறுவது உறுதியாகியது.

19 ஆவது ஓவரில் கொக்குவில் அணியினர் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுக்க 38 ஓட்டங்களினால் இலகு வெற்றியைப் பெற்றுக்கொண்ட சென்றலைட்ஸ் விளையாட்டு கழகம் முதலாவது ஜப்னா கிரிக்கெட் லீக்கின் சம்பியன்களாக முடிசூடியது.

போட்டி சுருக்கம்

சென்றலைட்ஸ் விளையாட்டு கழகம் – 177/9 (20) – நிரோஜன் 41, ஜெனோஷன் 41, நிஷான் 36, பிரதீஸ் 3/17, துஸ்யந்தன் 3/58, சாம்பவன் 2/25

கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் – 139 (18.5) – சத்யன் 50, பானுஜன் 27, மயூரன் 3/24, தசோபன் 3/26, டார்வீன் 2/17

போட்டி முடிவு – 7 பந்துகள் மீதமிருக்க 38 ஓட்டங்களால் சென்றலைட்ஸ் கழகம் வெற்றி

  • போட்டியின் ஆட்ட நாயகன் – நிரோஜன் (சென்றலைட்ஸ் விளையாட்டு கழகம்)
  • தொடர் ஆட்ட நாயகன் – லவேந்திரா (ஜொனியன்ஸ் விளையாட்டு கழகம்)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<