பாடசாலைகள் கால்பந்துடன் கைகோர்க்கும் IDM Campus

Schools Football

253
Schools Football

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கம் என்பன இணைந்து நடத்தும் 16 வயதின்கீழ் பாடசாலை அணிகளுக்கு இடையிலான கால்பந்து சுற்றுப்போட்டிக்கு இலங்கையின் முன்னணி தனியார் பல்கலைக்கழங்களில் ஒன்றாகத் திகழும் IDM உயர்கல்வி நிறுவனம் (IDM Campus) பிரதான அனுசரணையாளராக இணைந்துள்ளது.

தேசிய மட்டத்தில் இடம்பெறும் பாடசாலை அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் பிரதான ஒரு தொடராக இடம்பெறும் 16 வயதின்கீழ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த தொடர் குறித்த ஊடக சந்திப்பொன்று கடந்த புதன்கிழமை (13) கொழும்பில் உள்ள IDM உயர்கல்வி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் IDM Campus நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கத்தின் அதிகாரிகள், மேல் மாகாண பாடசாலைகளின் 16 வயதின்கீழ் அணித் தலைவர்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

இம்முறை போட்டித் தொடரில் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெறும் 32 ஆண்கள் அணிகளும் 24 மகளிர் அணிகளும் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகும். தொடரின் இறுதிச் சுற்றான தேசிய மட்டப் போட்டிகள் ஒக்டோபர் மாதம் 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் கொழும்பில் நான்கு மைதானங்களில் இடம்பெறும்.

தேசிய மட்டத்தில் ஆண்கள் பிரிவுப் போட்டிகளின் முதல் சுற்றில் ஒரு குழுவுக்கு 4 அணிகள் எனும் விதத்தில் மொத்தம் 8 குழுக்களாகப் பிரிக்கப்படும். குறித்த குழுக்களில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும்.

அதேபோன்று, மகளிர் அணிகள் ஒரு குழுவுக்கு 3 அணிகள் எனும் விதத்தில் மொத்தம் 8 குழுக்களுக்கு பிரிக்கப்படும். குறித்த குழுக்களில் முதல் மற்று இரண்டாம் இடங்களைப் பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும்.

இந்நிலையில் நடைபெற்ற குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கத்தின் தலைவர் பன்டார லீலாரத்ன, ”நாட்டின் நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள ஆயிரத்திற்கு அதிகமான பாடசாலைகள் எமது சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு இந்த போட்டித் தொடரில் விளையாடி வருகிற்னர். எனவே, இதற்காக மிகப் பெரிய ஒரு தொகைப் பணம் எமக்கு தேவைப்படுகின்றது. இவ்வாறான ஒரு நிலையில் எம்மோடு இந்நிறுவனம் கைகோர்த்தமையானது பெருமைக்குறிய விடயம்.

எனவே, எமது மாணவர்களுக்காக கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கம் என்பவற்றுடன் இணைந்து இந்த போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்க முன்வந்தமைக்கு இலங்கையின் பலைமையான மற்றும் முன்னணியில் உள்ள IDM உயர்கல்வி நிறுவனத்திற்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்” என்றார்.

IDM உயர்கல்வி நிறுவனத்தின் பிரதான நிர்வாக இயக்குனர் அமந்தி குலசிங்க அங்கு கருத்து தெரிவிக்கையில், ”இலங்கையில் 50 வருடங்கள் பழமையான ஒரு கல்வி நிறுவனமாகிய நாம் பாடசாலை மாணவர்களின் வளர்ச்சிக்காக இந்த போட்டித் தொடரின் பங்காளர்களாக மாறுவதில் மகிழ்ச்சி மற்றும் பெருமையடைகின்றோம்.

சிறந்த ஒரு எதிர்கால சந்ததியினரை உறுவாக்கும் நோக்குடன் இலங்கையில் சுமார் 30 கிளைகளையும் பல நாடுகளிலும் கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள IDM உயர்கல்வி நிறுவனம் பாடசாலை மாணவர்களுக்கு என்று பல திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. அவற்றின் மூலம் மாணவர்கள் பயனடைய வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கின்றோம்” என தெரிவித்தார்.

>>மேலும் கால்பந்து செய்திகளுக்கு<<