இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்திய அவுஸ்திரேலியா

62
Image Courtesy - ICC

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று (13) நடைபெற்ற தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டியில் 35 ஓட்டங்களால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி 3-2 என்ற அடிப்படையில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.

டெல்லி பேரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த அவுஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா மற்றும் அணித் தலைவர் ஆரோன் பின்ஞ்ச் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆரம்ப விக்கெட்டுக்காக 76 ஓட்டங்களை பகிர்ந்திருந்த போது ஆரோன் பின்ஞ்ச் 27 ஓட்டங்களுடன் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் மேலும் இரண்டு வீரர்கள்

அயர்லாந்து அணிக்கெதிரான ஆப்கானிஸ்தான் டெஸ்ட் குழாமிற்கு ஏற்கனவே 14 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ள…

பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக உஸ்மான் கவாஜா மற்றும் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் ஆகியோர் தமது அணியை வலுவான நிலைக்கு இட்டுச்சென்றனர். இருவரும் இணைந்து 99 ஓட்டங்கள் பெற்றிருந்த போது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்த உஸ்மான் கவாஜா 100 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 175 ஆக இருந்த போது தமது இரண்டாவது விக்கெட்டை இழந்த அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து மேலும் இரு விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் துடுப்பாடக் களமிறங்கிய வீரர்களின் பலவீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திய இந்திய பந்து வீச்சாளர்கள் அவுஸ்திரேலிய அணியின் ஓட்ட வேகத்தை கட்டுப்படுத்தினார்கள் என்றால் அது மிகையாகாது.

இறுதியில் அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 272 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் மூன்று விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி, 15 ஓட்டங்கள் பெற்றிருந்த போது ஷிகர் தவான் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் களமிறங்கிய விராட் கோஹ்லி, ரோகித் ஷர்மாவுடன் இணைந்து அணியை கட்டியெழுப்பும் வகையில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில் விராட் கோஹ்லி 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரிஷாப் பாண்ட் (16) விஜய் சங்கர் (16) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்திய அணி சற்று தடுமாற்றம் கண்டது. பின்னர் ரோகித் ஷர்மா 56 ஓட்டங்களுடன் அடம் ஸம்பாவின் பந்து வீச்சில் ஸ்டம்ப் முறையில் ஆட்டமிழக்க தொடர்ந்து அதே ஓவரில் ரவீந்திர ஜடேஜா ஓட்டமெதுவும் பெறாமல் அதே பாணியில் தனது விக்கெட்டையும் பறிகொடுக்க இந்திய அணி 132 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து அணியின் வெற்றியை கேள்விக்குறியாக்கியது.

எனினும் 7 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த கேதர் ஜாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரின் துடுப்பாட்டம் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தும் வகையில் இருந்ததுடன் இந்திய அணிக்கு நம்பிக்கையையும் வழங்கியது. இருவரும் இணைந்து 91 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கை 223 ஆக இருந்த போது அடுத்தடுத்து இரு பந்துகளில் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்த அவுஸ்திரேலிய அணி வெற்றியை சுவைத்தது.

தமது இன்னிங்ஸின் இறுதிப் பந்தில் கடைசி விக்கெட்டையும் இழந்த இந்திய அணியால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 237 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 3-2 என கைப்பற்றியது. இத்தொடர் வெற்றியானது 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் அவுஸ்திரேலியா அணியால் இந்திய மண்ணில் பெறப்பட்ட முதலாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகிய ஹசிம் அம்லா

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான குழாத்திலிருந்து… 

இன்றைய போட்டியில் 56 ஓட்டங்களை பெற்ற இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோகித் ஷர்மா ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 8000 ஓட்டங்கள் என்ற மைல் கல்லை எட்டியிருந்தார். இன்றைய போட்டியில் சதம் விளாசிய அவுஸ்திரேலிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரைச்சதங்கள் உட்பட 383 ஓட்டங்களைக் குவித்த அவர் தொடர் நாயகன் விருதையும் தனதாக்கியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

 

அவுஸ்திரேலியா – 272/9 (50) உஸ்மான் கவாஜா 100, பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 52, ஜை ரிசர்ட்சன் 29, புவனேஷ்வர் குமார் 48/3, ரவீந்திர ஜடேஜா 45/2, மொஹமட் ஷமி 57/2

இந்தியா – 237 (50) – ரோகித் ஷர்மா 56, புவனேஷ்வர் குமார் 46, கேதர் ஜாதவ் 44, விராட் கோஹ்லி 20, அடம் ஸம்பா 46/3, ஸ்டொய்னிஸ் 31/2, பெட் கமின்ஸ் 38/2

முடிவு அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க