மெதிவ்சின் தலைமைப் பதவியின் நீடிப்பில் சந்தேகம்

3245
Angelo-Mathews - SLvZIM

இலங்கை அணியை கடந்த சில வருடங்களாக தலைமை தாங்கி வரும் அஞ்சலோ மெதிவ்ஸ், சனிக்கிழமை (8) நடைபெற்று முடிந்திருக்கும் ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் கிடைத்த ஏமாற்றமான தோல்வியின் காரணமாக, மீண்டும் விமர்சனங்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றார்.

சாதரண வீரராக இருந்த காலத்தில் ஒரு நாள் போட்டிகளில் பெற்றிருந்த 40.83 ஓட்டங்கள் என்னும் துடுப்பாட்ட சராசரியை விட அணித்தலைவராக மாறிய போது மெதிவ்ஸ் 45.70 ஓட்டங்கள் என்னும் சிறப்பான துடுப்பாட்ட சராசரியை வெளிக்காட்டியிருக்கின்றார். எனினும், இலங்கையின் மிகப் பிரபல்யமான விளையாட்டான கிரிக்கெட்டில் அவரது தலைமைத்துவ திறன்கள், தீர்மானம் எடுக்கும் விதம் என்பன வலுவாக இல்லை என சமூக வலைத்தளங்களிலும், கிரிக்கெட் வல்லுனர்கள் மூலமாகவும் தற்போது விமர்சனங்கள் எழுப்பபட்டு வருவதோடு, மெதிவ்ஸ் தனது தலைமைப் பதவியை துறக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

2012ஆம் ஆண்டிலிருந்து, இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டு வரும் மெதிவ்ஸ் அன்றிலிருந்து இலங்கை அணி விளையாடிய 97 போட்டிகளில் 47 போட்டிகளில் மாத்திரமே தனது அணியை வெற்றிகரமாக வழிநடாத்தியிருக்கின்றார். இலங்கை அணியானது மெதிவ்சின் பதவிக்காலத்தின் போது, 44 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. அதே போன்று, ஒரு நாள் தரவரிசைப்பட்டியலில் 11ஆம் இடத்தில் இருக்கும் ஜிம்பாப்வே அணியுடனான தொடரையும் இலங்கை அணி வைட் வொஷ் செய்து கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டும் அது 2-2 என தற்போது சமநிலை அடைந்திருப்பது, 2019ஆம் ஆண்டு உலக கிண்ணம் வரையிலும் இலங்கை அணியை தலைமை தாங்க மெதிவ்ஸ் பொருத்தமானவரா? எனும் கேள்வியினை அனைவர் மத்தியிலும் எழுப்புகின்றது.

புதிய உலக சாதனையை நிலைநாட்டிய திக்வெல்ல மற்றும் குணத்திலக்க

“நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளோம். மேலும், நான் அணித்தலைவராக பாரிய அழுத்தத்தினை எதிர் கொள்கின்றேன். நாங்கள் அதி சிறப்பாக துடுப்பாடிய போதும், எமது பந்து வீச்சு மிகவும் மோசமாக அமைந்த காரணத்தினால் (ஜிம்பாப்வே அணியுடனான) இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தோம். நாங்கள், தொடர்ந்து தோல்விகளை சந்திக்க எமது பந்து வீச்சே காரணமாக அமைகின்றது. இப்போது எங்களது களத்தடுப்பில் குறைபாடுகள் கிடையாது. 300 இற்கும் மேலான ஓட்ட இலக்கை, எதிரணி விரட்டுவதை எங்களால் தடுக்க முடியவில்லை எனில் குறைபாடு வேறு எதிலோ உள்ளது. அத்தோடு, அணியின் தலைவராக நான் 2019ஆம் ஆண்டு வரை செயற்படுவேனா என்பதும் எனக்கு உறுதியாகத் தெரியாது“ என தனது தலைமை பொறுப்பு பற்றியும், எதிர்காலத்தில் தான் தலைவராக நீடிப்பது பற்றியும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது மெதிவ்ஸ் கூறியிருந்தார்.

இதுவரை காலமும் மெதிவ்சின் கட்டுப்பாட்டில் காணப்பட்டிருந்த இலங்கை அணியானது எதிரணி இலக்கினை விரட்டிய 29 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. எனினும், அண்மைய ஆட்டங்களினை எடுத்து நோக்கும் போது, இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த போட்டிகளை விட இரண்டாவதாக துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த போட்டிகளிலேயே வெற்றிகளைப் பெற்றுள்ளது. இப்படியாக நிலைமை இருக்க, தீர்மானமிக்க போட்டியொன்றில் அதுவும் துடுப்பாட்டத்திற்கு சாதகமான மைதானமொன்றில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தது.

“எங்களுக்கு உண்மையாகவே, போட்டியில் மழை குறுக்கிடும் என்பது தெரியாது. மைதானம் காய்ந்த நிலையில் இருந்த காரணத்தினால் நாங்கள் பந்தின் திருப்பத்தினை வைத்து விக்கெட்டுக்களைப் பெறலாம் என எண்ணியிருந்தோம். ஏனெனில், இறுதிப்போட்டியில் (மூன்றாவது ஒரு நாள் போட்டியில்) 20 ஓவர்களின் பின்னர் பந்தானது மைதான தரையில் பட்டு அதிகம் திரும்பியிருந்ததை நாம் அவதானித்திருந்தோம்.“

“ஆனால், இம்முறை மீண்டும் எமது பந்து வீச்சு மிகவும் மோசமாக அமைந்து விட்டது. எத்தனை தடவைகள் 300 இற்கும் மேலாக ஓட்டங்கள் பெற்றும் நீங்கள் தோல்வி அடைவது? போதியளவான ஓட்டங்கள் பெற்றும் துரதிஷ்டவசமாக மழை வந்த காரணத்தினால் எமக்கு வெற்றி கைகூடியிருக்கவில்லை. எனினும், எதிரணியை வீழ்த்த எமக்கு இன்னும் ஒரு வாய்ப்பிருக்கின்றது.“

எனக்கூறி இலங்கையின் அணித்தலைவர் போட்டி பற்றிய சில விடயங்களைக் கலந்துரையாடியிருந்தார்.

கடந்த மூன்று வருடங்களாக, இலங்கை அணியானது 40 இற்கும் மேலான வீரர்களை அணியில் மாறிமாறி உள்வாங்கியும் ஒரு நாள் தரவரிசையில் எட்டாம் இடத்தில் காணப்படுகின்றது. இவ்வாறாக வீரர்களின் மாற்றங்கள் இடம்பெற உபாதைகள் ஒரு காரணமாக இருப்பினும், கடந்த மாதங்களில் இடம்பெற்ற சில வீரர்களின் தெரிவு எந்தவொரு சிறந்த அளவுகோலுமின்றி அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே அணியுடனான நான்காவது போட்டியில், இலங்கை அணியானது 35ஆவது ஓவரின் போது விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 208 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தது. தொடர்ந்து, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்த காரணத்தினால் 330 இற்கும் மேலாக ஓட்டங்கள் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட இலங்கை 300 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

“திக்வெல்ல, தனுஷ்கவுடன் சேர்ந்து மீண்டும் ஒரு சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டியிருந்தார். அவர்கள் இருவரும் எமக்கு சிறப்பான அடித்தளம் ஒன்றை அமைத்து தந்தனர். நாம் அதன் மூலம் 330 ஓட்டங்களையோ அல்லது 340 ஓட்டங்களையோ பெற்றிருக்க வேண்டும். எனினும் இறுதி பத்து ஓவர்களிலும் நாங்கள் பந்தினை சரியான நேரத்தில் எதிர்கொள்ள தவறியனாதல் எங்களுக்கு ஓட்டங்களை சேர்க்க சிரமமாக இருந்தது“

என மெதிவ்ஸ் தனது அணியின் மத்திய வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமை பற்றி கருத்து வெளியிட்டிருந்தார்.

இலங்கை அணியின் தோல்விகளுக்கு முழுக்காரணமாக, அஞ்சலோ மெதிவ்சினை சுட்டிக்காட்ட முடியாது. ஏனெனில், முன்னைய அணியில் இருந்த சங்கா, மஹேல மற்றும் தில்ஷான் போன்றோர் இக்கட்டான நிலைமகளின் போது, மெதிவ்சுடன் கலந்துரையாடி ஆலோசனை வழங்கியிருந்தனர். அவ்வாறான வீரர்கள் யாரும் அணியில் தற்போது இல்லை. அனைத்து வீரர்களும் இப்போதைய போட்டிகளில், தங்களது களத்தடுப்பிலேயே மிகவும் கவனம் காட்டுகின்றனர்.

“இலங்கையானது சுற்றுத்தொடர் ஒன்று மேற்கொள்வதற்கு மிகவும் கடினமான இடமாகும். இன்னும் இலங்கை அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவதும் கடினம். இதனால், இப்போட்டி முடிவுகள் எமக்கு நம்பமுடியாதவையாக உள்ளது. இறுதி ஒரு நாள் போட்டியில் கட்டாயம் இலங்கை அணி எம்மை வீழ்த்த வேண்டும் என்கிற இலக்கோடு இருப்பதால் எமக்கு அதிக அழுத்தம் காணப்படும் என நினைக்கின்றேன்”  என ஜிம்பாப்வே அணியின் தலைவர் கிரேம் கீரிமர் நான்காவது ஒரு நாள் போட்டியின் பின்னர் தனது கருத்தினை பகிர்ந்திருந்தார்.

எல்லாவற்றையும் எடுத்து நோக்கும் போது, ஜிம்பாப்வே அணியானது, ஜூலை 10ஆம் திகதி அம்பாந்தோட்டையில் இடம்பெறப்போகும் ஐந்தாவது ஒரு நாள் போட்டியை தொடரை தீர்மானிக்கும் போட்டியாக மாற்றும் என யாரும் நினைத்திருக்கவில்லை. ஜிம்பாப்வே அணிக்கெதிரான இத்தொடரும் இதனை அடுத்து இந்தியாவுடன் நடைபெறவுள்ள தொடருமே, இலங்கை அணித்தலைவர் மெதிவ்ஸ் தனது தலைமைப் பொறுப்பிற்கு தொடர்ந்து தகுதியானவரா என்பதை தீர்மானிக்கப் போகின்றது.

எமது வாசகர்களாகிய நீங்களும், மெதிவ்ஸ் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பிற்கு தொடர்ந்து தகுதியானவரா என்பது தொடர்பான உங்களது கருத்துக்களையும் கீழே பதிவிடுங்கள்.