நான் சஹீட் அப்ரிடி போன்று பந்துவீச விரும்புகின்றேன் – ஸ்டீவ் ஸ்மித்

780
Getty Images

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வருடம் விளையாட தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், தற்போது மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் (CPL) T20 தொடரில் தற்போது விளையாடி வருகின்றார்.

கரீபியன் பிரீமியர் லீக்கில் (CPL) ஸ்டீவ் ஸ்மித்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் …

இந்த T-20 தொடரின் போட்டியொன்றில் ஸ்டீவ் ஸ்மித் விளையாடும் அணியான பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், அவருடைய சிறப்பாட்டத்தினால் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணிக்கெதிராக 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி ஒன்றை பதிவு செய்தது.

ஜமெய்க்கா தல்லாவாஸ் அணிக்கெதிராக சகலதுறைகளிலும் சிறப்பாட்டத்தினை வெளிப்படுத்திய ஸ்மித் துடுப்பாட்டத்தில், 44 பந்துகளுக்கு 63 ஓட்டங்களை குவித்ததோடு பந்துவீச்சில் 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

குறித்த போட்டியின் பவர் பிளேயில், ஸ்மித்தின் அணி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தாலும் சிறிது நேரத்தில் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்தை காட்டியது. இந் நிலையில் சிறந்த முறையில் ஆடிய ஸ்மித் போட்டியின் இறுதி ஓவர் வரை களத்தில் இருந்தார். ஸ்மித்தின் சிறந்த துடுப்பாட்டத்தினால் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை குவித்தது.  

ஸ்மித் குறித்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரரான சாய் ஹோப்புடன் இணைந்து ஐந்தாம் விக்கெட்டுக்காக 103 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததோடு தனது துடுப்பாட்டத்தில் 5 பெளண்டரிகளையும் 3 சிக்ஸர்களையும் விளாசியிருந்தார். பின்னர், ஸ்டீவ் ஸ்மித் அன்ட்ரூ ரசலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை பெற பதிலுக்கு துடுப்பாடிய ஜமெய்க்கா அணிக்கு ஆரம்ப வீரர்களான கிளென் பிலிப்ஸ் மற்றும் ஜோன்சன் சார்ளஸ் ஆகியோர் முதல் 9 ஓவர்களுக்கும், 80 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று சிறந்த களம் அமைத்தனர். எனினும், 10 ஆவது ஓவரை வீசிய ஸ்மித் அபாயகரமாக காணப்பட்ட இந்த இரண்டு துடுப்பாட்ட வீரர்களையும் ஓய்வறை அனுப்பினார்.

ஸ்மித் இந்த இரண்டு வீரர்களினதும் விக்கெட்டுக்களை கைப்பற்றியது ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியதுடன், இந்த திருப்புமுனை அவரது தரப்பிற்கு வெற்றியினையும் பெற்றுத் தந்தது.

தற்போது உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக காணப்படும் ஸ்டீவ் ஸ்மித், ஒரு மணிக்கட்டு சுழல் வீரராகவே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்திருந்தார்.  

குறித்த போட்டியில் தனது தரப்பு வெற்றி பெற்றதன் பின்னர் பேசிய ஸ்டீவ் ஸ்மித், “ நான் சிலவகை விடயங்களை (எனது பந்துவீச்சுப் பாணியில்) மாற்றியிருக்கின்றேன். நான் எனது பந்துவீச்சுப் பாணியினை சஹீட் அப்ரிடி போன்று மாற்ற முயற்சிக்கின்றேன். எந்த தடைகளுமின்றி விக்கெட்டை நோக்கி பந்தினை வேகமாக வீச முயற்சிக்கின்றேன். இன்றிரவு அது எனக்கு வெற்றிகரமாக அமைந்துவிட்டது. “ எனக் குறிப்பிட்டிருந்தார்.

“ அவர் (அப்ரிடி) ஒரு தலைசிறந்த மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர். எனக்கு வயதாகின்றதால் (வழமையான பந்துவீச்சு பாணியில்) விருத்தியான (Develop) எதனையும் அவதானிக்க முடியவில்லை. இருந்தபோதிலும், நான் அதிகம் பந்துவீசத் தேவை இல்லை எனவும் நினைக்கின்றேன். “  என்றார்.

ThePapare.com: பிரீமியர் லீக் இரண்டாவது வாரத்தின் சிறந்த வீரர்

அதற்காக இரண்டாவது வாரத்தில்…

அன்ட்ரூ ரசல் தலைமையிலான ஜமெய்க்கா அணி போட்டியினை வெற்றிகொள்ளும் வியூகங்களில் சிலதை தவறவிட்டிருந்தனர். இதனாலேயே, சிறந்த T20 துடுப்பாட்ட வீரர்களான ரோஸ் டெய்லர், டேவிட் மில்லர் ஆகியோர் களத்தில் நின்றும் அவர்களுக்கு வெற்றியினை சுவைக்க முடியவில்லை. ஆட்டத்தின் இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் ஜமெய்க்க அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட போதிலும், அவர்கள் 3 விக்கெட்டுக்களை இழந்து மொத்தமாக 154 ஓட்டங்களைப்  பெற்று துரதிஷ்ட தோல்வியொன்றினை தழுவினர்.

“ நாங்களும் ஒரு தொகை பிடியெடுப்புக்களை தவற விட்டுவிட்டோம். பொதுவாக, நீங்கள் அதை (பிடியெடுப்புக்களை தவறவிடுவது) செய்தால் உங்களால் வெற்றி பெற முடியாது. எனினும் அவர்கள் (ஜமெய்க்கா தல்லாவாஸ்) அவர்களது வியூகங்களை தவற விட பிரதான காரணம் – ரசல் துடுப்பாட வராமையாகும். “ என ஸ்மித் பேசினார்.

இதேநேரம், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியினை தழுவிய ஜமெய்க்க அணியின் தலைவர் அன்ட்ரூ ரசல் பேசும் போது, துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே தோல்விக்கு காரணம் என குறிப்பிட்டிருந்தார்.  

ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி ஸ்மித்தின் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்த காரணத்தினால், கரீபியன் லீக் தொடருக்கான அணிகளின் புள்ளிகள் அட்டவணையில் மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருக்கின்றது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க