FA கிண்ணத் தொடரில் கம்பளை கிறிஸ்டல் பெலஸ் மற்றும் வென்னப்புவ நிங் யங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அடை மழைக்கு மத்தியில் இரண்டாம் பாதியைத் தொடர முடியாமல் இருந்தமையினால் 1-1 என சமநிலையில் இருந்த வேளையில் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

ஏற்கனவே இடம்பெற்ற இதற்கு முன்னைய சுற்றில் கிறிஸ்டல் பெலஸ் வீரர்கள் 3-1 என்ற கோல்கள் கணக்கில் நவகம்புற விளையாட்டு அணியை வெற்றி கொண்டிருந்த அதேவேளை, நிவ் யங்ஸ் அணியினர் மொரட்டுவை பல்கழைக்கழக அணியை 7-0 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக வெற்றி கொண்டிருந்தனர். இதன்படி இவ்விரு அணிகளும் தொடரின் 32 அணிகள் பங்கு கொள்ளும் இந்த சுற்றுப் போட்டியில் விளையாடின.

சென். மேரிஸின் கோல் மழையில் நனைந்தது துரையப்பா அரங்கு

நாவலபிடிய ஜயதிலக விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியின் ஆரம்ப முயற்சியாக கிறிஸ்டல் பெலஸ் அணியின் சைடிற்கு கிடைத்த வாய்ப்பை அவர் கோல்களை நோக்கி உதையும்பொழுது நிவ் யங்ஸ் அணியின் பின்கள வீரர்கள் அதனைத் தடுத்து கோணர் உதைக்கான வாய்ப்பாக மாற்றினர்.

கம்பளைத் தரப்பினருக்கு கிடைத்த மிகவும் சிறந்த வாய்ப்பாக, எதிரணியின் கோல் கம்பங்களுக்கு அருகில் வைத்து ஸைட் பெற்ற பந்தை, அவர் சிபானுக்கு வழங்க, அவர் அதனை வேகமாக கோலுக்கு அடித்தார். எனினும் கோல் காப்பாளர் கவீஷ் சிறந்த முறையில் பாய்ந்து அதனைப் பிடித்தார்.

போட்டியின் ஆரம்ப கட்டங்களில் கிறிஸ்டல் பெலஸ் தொர்ச்சியாக கோல் வாய்ப்புகள் பலவற்றைப் பெற்று வந்த நிலையில், அவ்வணி வீரர்கள் எவரும் அவற்றை சிறந்த முறையில் நிறைவு செய்யவில்லை.

இந்நிலையில, நிவ் யங்ஸ் அணி வீரர்களுக்கு எதிரணியின் கோல் பரப்பின் இறுதிப் பகுதியில் ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. எனினும் அவர்களால் செலுத்தப்பட்ட பந்து, தடுப்பில் இருந்த வீரர்களின் உடலில் பட்டு திசை திரும்பியது.

ஒரு சில வாய்ப்புக்களையே பெற்ற நிவ் யங்ஸ் அணியின் முன்கள வீரர்களின் முயற்சிகள் யாவும் கிறிஸ்டல் பெலசின் பின்கள வீரர்களால் முறியடிக்கப்பட்டன. குறிப்பாக, பௌசானுக்கு கிடைத்த பந்தை அவர் தனியே எடுத்துச் சென்று பல வீரர்களை ஏமாற்றி, இறுதியாக பந்தை உதையும்பொழுது எதிரணி வீரர்களால் அது தடுக்கப்பட்டது.

33ஆவது நிமிடத்தில் நிவ் யங்ஸ் வீரர்கள் எதிரணியின் கோல் திசைக்கு உயர்த்தி உதைந்த பந்தைத் தடுக்க, கிறிஸ்டெல் பெலசின் 3 வீரர்கள் வந்த நிலையில் கோல் காப்பாளரும் முன்னே ஓடி வந்தார். இந்நிலையில் ஹசித பிரியன்கர பந்தை தலையால் முட்டி, நிவ் யங்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

பின்னர் கிறிஸ்டல் பெலஸ் வீரர் இபாம் மிகவும் வேகமாக கோலை நோக்கி உதைந்த பந்து கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானத்திற்கு வந்தது.  

23 வயதுக்கு உட்பட்ட இலங்கை கால்பந்து குழாமிற்கு வீரர்கள் தெரிவு ஆரம்பம்

முதல் பாதி நிறைவிற்கான நேரம் நெருங்கிய நிலையில் 45ஆவது நிமிடத்தில், தமது தரப்பினரின் பந்துப் பரிமாற்றங்கள் மற்றும் ஒரு கோல் முயற்சியின் பின்னர் தன்னிடம் வந்த பந்தை அணித் தலைவர் ஷரித்த ரத்னாயக்க கோலாக்கி போட்டியை சமப்படுத்தினார். இதன்போது பின்கள வீரரான ஷரித்த எதிரணியின் பெனால்டி எல்லையில் இருந்து குறித்த கோலைப் பெற்றார்.

முதல் பாதி: கிறிஸ்டல் பெலஸ் கால்பந்துக் கழகம் 1 – 1 நிவ் யங்ஸ் கால்பந்துக் கழகம்

வெற்றி கோலைத் தீர்மானிக்கும் இரண்டாவது பாதி ஆரம்பமாகி சில நிமிடங்களிலேயே மழை பெய்தமையினால் ஆட்டம் இன்னும் விறுவிறுப்பானது.

இரண்டாவது பாதியில் நிவ் யங்ஸ் அணிக்கு கிடைத்த இரண்டு சிறந்த வாய்ப்புக்களாக எதிரணியின் கோல் திசையில் கிடைத்த இரண்டு ப்ரீ கிக் வாய்ப்புகள் இருந்தன. எனினும், முறையே அந்த உதைகளைப் பெற்ற சுசில் பிரதீப் மற்றும் முஷிகான் ஆகியோரின் இலக்கு சிறந்த முறையில் இருக்கவில்லை.

மைதானத்தில் இருந்த நீர் மற்றும் அடை மழை என்பவற்றுக்கு மத்தியில் இரு தரப்பினரும் விழுந்து விழுந்து அணிக்கான அடுத்த கோல் முயற்சியை மேற்கொண்டனர்.

எனினும் ஆட்டத்தின் 65 நிமிடங்கள் கடந்த நிலையில் தொடர்ந்து அடை மழை பெய்தமையினால் போட்டியைத் நடத்த முடியாது எனத் தெரிவித்த நடுவர் பிரஷான்த் ராஜ்கிரிஷ்ன வீரர்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றினார்.

போட்டியில் மேலும் 25 நிமிடங்கள் எஞ்சியுள்ளது. எனினும், இதன் அடுத்த கட்டம் குறித்து இலங்கை கால்பந்து சம்மேளனம் இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

65 நிமிடங்களின் பின்: கிறிஸ்டல் பெலஸ் கால்பந்துக் கழகம் 1 – 1 நிவ் யங்ஸ் கால்பந்துக் கழகம்

ஆட்டம் இடைநிறுத்தப்பட்டதன் பின்னர் நிவ் யங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் ரோஹித பெர்ணான்டோ ThePapare.com இடம் பிரத்யேகமாகக் கருத்துத் தெரிவிக்கும்பொழுது, ”முதல் பாதி ஆட்டத்தில் எமது வீரர்கள் சிறந்த நிறைவுகளை மேற்கொள்ளத் தவறினர். அது எமக்கு பின்னடைவாக இருந்தது. எனினும் இன்றைய நிலையை சரி செய்வதற்கு எனக்கு ஒரு நாள் போதும். அடுத்த கட்டத்திற்கான தயார் படுத்தலை இலகுவாக செய்து விடுவேன்” என்றார்.

போட்டியில் எஞ்சியுள்ள அடுத்த 25 நிமிடங்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், ”3.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட இருந்த இன்றைய போட்டி 4 மணிக்கே ஆரம்பமாகியது. எனினும் நாம் 2 மணிக்கே மைதானத்தில் இருந்தோம். இது எமது தவறல்ல. எனவே, நாம் மீண்டும் இங்கு வர மாட்டோம்” என்றார்.

கோல் பெற்றவர்கள்

நிவ் யங்ஸ் கால்பந்துக் கழகம் – ஹசித பிரியன்கர 33’

கிறிஸ்டல் பெலஸ் கால்பந்துக் கழகம் – ஷரித ரத்னாயக 45’

மஞ்சள் அட்டை

கிறிஸ்டல் பெலஸ் கால்பந்துக் கழகம் –  மொஹமட் சிபான் 54’