இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தோல்விகளுக்கு முடிவுகட்டிய தென்னாபிரிக்கா

75

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 107 ஓட்டங்களால் வெற்றியீட்டிய தென்னாபிரிக்க அணி தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் தோல்விகளுக்குப் பின் முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது.

இதன்மூலம் உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரில் தென்னாபிரிக்க அணி முதல் புள்ளியை பெற்றுக் கொண்டது

சென்சூரியன் சுப்பர்பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சாதனை இலக்கான 376 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி கடந்த சனிக்கிழமை மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவின்போது 121 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வலுவான நிலையிலேயே இருந்தது

எனினும் ஞாயிற்றுக்கிழமை (29) நான்காவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 268 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.  

இங்கிலாந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரொரி பேர்ன்ஸ் மாத்திரம் அரைச்சதம் ஒன்றை பெற்றார்.

இதில் முதலில் துடுப்பெத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சுக்காக 284 ஓட்டங்களை பெற்ற நிலையில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 181 ஓட்டங்களுக்கே சுருண்டது. எனினும் தென்னாபிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 272 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இங்கிலாந்துக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க முடியந்தது

இரு அணிகளுக்கும் இடையிலான நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நியூலாண்டில் வரும் வெள்ளிக்கிழமை (03) ஆரம்பமாகவுள்ளது

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்கா (முதல் இன்னிங்ஸ்) – 284 (84.3) – குவன்டன் டி கொக் 95, சுபைர் ஹம்சா 39, ஸ்டுவட் பிரோட் 58/4, சாம் கர்ரன் 58/4

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 181 (53.2) – ஜோ டென்லி 50, பென் ஸ்டொக்ஸ் 35, வெர்னொன் பிளென்டர் 4/16, ககிசோ ரபாடா 3/68

தென்னாபிரிக்கா (இரண்டாவது இன்னிங்ஸ்) – 272 (61.4) – வென்டர் டுசன் 51, வெர்னொன் பிளென்டர் 46, ஜெப்ரா ஆர்ச்சர் 5/105, பென் ஸ்டொக்ஸ் 2/22

இங்கிலாந்து ( இரண்டாவது இன்னிங்ஸ்) – 268 (93) – ரோரி பேர்ன்ஸ் 84, ஜோ ரூட்ஸ் 48, ககிசோ ரபாடா 4/103, அன்ரிச் நோர்ட்ஜே 3/56

முடிவு தென்னாபிரிக்கா 107 ஓட்டங்களால் வெற்றி