20 ஆண்டுகால சாதனையை மீண்டும் புதுப்பித்த திமுத் கருணாரத்ன

1776
Dimuth Karunaratne

நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோதிய உலகக் கிண்ண லீக் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அரிய சாதனை ஒன்றை செய்துள்ளார்.

2019 உலகக் கிண்ணத் தொடரின் 3 ஆவது லீக் சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து – இலகை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இலங்கை அணி மிக மோசமாக துடுப்பெடுத்தாடி 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

சகலதுறை மிரட்டலால் இலங்கையை இலகுவாக வீழ்த்திய நியூசிலாந்து

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டியில் இன்று (01) இலங்கை..

எனினும், இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன மட்டுமே தனி ஆளாக போராடினார். கடைசி வரை ஆடுகளத்தில் நின்று அரைச் சதம் கடந்து 52 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தடிய நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி தோற்றாலும் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றது உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் முக்கிய சாதனையாக மாறி உள்ளது. அதாவது போட்டி முடிவடையும் வரை ஆடுகளத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த உலகின் இரண்டாவது ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்

இதற்குமுன் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் காப்பாளர் ரைட்லி ஜேக்கப்ஸ், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 49 ஓட்டங்களை குவித்தார். எனவே 20 வருடங்கள் கழித்து அதே சாதனையை திமுத் கருணாரத்ன மீண்டும் நிகழ்த்தியுள்ளார்.

அத்துடன், உலகளவில், ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இதே சாதனையை செய்யும் 12 ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுக் கொண்டார்

14 ஆவது டக்அவுட்

நியூசிலாந்துடனான போட்டியில் இலங்கை அணியின் அனுபவமிக்க வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஒருநாள் அரங்கில் 14 ஆவது தடவையாக டக்அவுட் ஆனார். இதில் 6 தடவைகள் நியூசிலாந்து அணிக்கு எதிராக டக்அவுட் ஆனமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

3 ஆவது தடவை

உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி பெற்றுக் கொண்ட 3 ஆவது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இதில் 1975 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 86 ஓட்டங்களையும், 2015 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 133 ஓட்டங்களையும் இலங்கை அணி குவித்தது.

தவறான துடுப்பாட்ட பிரயோகங்களே தோல்விக்கு காரணம் – திமுத் கருணாரத்ன

கார்டிப் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், எமது வீரர்கள்…

10 விக்கெட்டுகள் வெற்றி

உலகக் கிண்ண வரலாற்றில் 12 ஆவது தடவையாக அணியொன்று 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் 3 தடவைகள் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக அந்த அணி 2011 இல் கென்யா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

அத்துடன், ஒட்டுமொத்த உலகக் கிண்ணத் தொடரில் அதிக பந்துகள் (203) மீதமுள்ள நிலையில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணகளில் 3 ஆவது அதிசிறந்த வெற்றியாக இது பதிவாகியது.

இதேவேளை, உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் இலங்கை அணி முதல் தடவையாக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<