இதுதான் எனது இறுதிப் போட்டி; ஓய்வு முடிவை அறிவித்த வோர்னர்

162
David Warner announces end date on Test career

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வுபெற போவதாக அறிவித்துள்ளார். இதன்படி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சுற்றுப் பயணத்தின்போது மோசமான போர்மில் விளையாடிய டேவிட் வோர்னர், மூன்று இன்னிங்ஸ்களில் வெறும் 26 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.

அதன்பிறகு, இந்தியாவில் நடைபெற்ற IPL தொடரில் பங்கேற்றார். இந்த ஆண்டு IPL சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 516 ஓட்டங்கள் குவித்தார்.

இதனிடையே, IPL தொடருக்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார். இந்தப் போட்டிக்குப் பிறகு, டேவிர் வோர்ன்ர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரிலும் விளையாட உள்ளார்.

இதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பதற்கான முடிவை டேவிட் வார்னர் எடுத்திருக்கிறார்.

அதன்படி, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டி தொடருடன் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருக்கிறார். மேலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்க மாட்டேன் எனவும் வோர்னர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தனது ஓய்வு குறித்து பேசிய டேவிட் வோர்னர், 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் T20 உலகக் கிண்ணத் தொடர் தான் நான் விளையாடப்போகும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன். எனது திட்டமும் அது தான்.

டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் எனது சொந்த ஊரான சிட்னியில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்;ட் போட்டியுடன் விடைபெற விரும்புகிறேன். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடர் ஆகிய டெஸ்ட் தொடர்களில் சாதிக்கும் பட்சத்தில், அடுத்து வரும் பாகிஸ்தான் அணியுடனான தொடருடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன்.

இங்கு தொடர்ச்சியாக ஓட்டங்களைக் குவித்து, அதன் பிறகு அவுஸ்திரேலியாவிலும் தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் கூட பாகிஸ்தான் தொடருக்கு அடுத்ததாக நடைபெற உள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் நிச்சயம் விளையாடமாட்டேன். அதன் பிறகு ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவேன்.

ஒவ்வொரு போட்டியில் ஆடும் போதும், இது தான் எனது கடைசி போட்டி என்ற நினைப்பில் விளையாடுவேன். இது தான் எனது கிரிக்கெட் ஸ்டைல். இந்த அணியினருடன் அங்கம் வகிப்பதை மிகவும் விரும்புகிறேன். அவர்களுடன் உற்சாகமாக விளையாடுகிறேன். தொடர்ந்து கடினமாக உழைக்கிறேன். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப், ஆஷஸ், ஒருநாள் உலகக் கிண்ணம் என்று அடுத்தடுத்து முக்கியமான தொடர்கள் வருகின்றன. அதற்கு என்னை தயார்படுத்தி வருகிறேன் என்றார்.

2011ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அறிமுகமான டேவிட் வோர்னர் இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8158 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இவரது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 335 ஆகும். இது பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்றுக் கொள்ளப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 34 அரைச் சதங்களும், 25 சதங்களும் எடுத்துள்ளார். இவரது சராசரி 45.57 ஆகும் .

தனது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப காலகட்டங்களில் வெள்ளைப் பந்து போட்டிக்கு ஸ்பெஷலிஸ்ட் ஆக பார்க்கப்பட்ட டேவிட் வோர்னர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<