டயலொக் அனுசரணையில் 83ஆவது புனிதர்களின் சமர்

173
83rd Battle of Saints Press Briefing 2017

எதிர் வரும் மார்ச் மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் P. சரவணமுத்து கிரிக்கெட் மைதானத்தில் புனித ஜோசப் மற்றும் புனித பேதுரு கல்லூரிகளுக்கிடையிலான 83ஆவது புனிதர்களின் சமர் நடைபெறவுள்ளதாக நேற்று மாலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியளர்களுடனான உத்தியோகபூர்வ சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

பிரசித்தி பெற்ற இவ்விரு பாடசாலைகளுக்கு இடையே நடைபெற்ற கடந்த 82 சமர்களில் புனித ஜோசப் கல்லூரி, 12 தடவைகளும் அதேநேரம் புனித பேதுரு கல்லூரி 10 தடவைகளும் கிண்ணத்தை சுவீகரித்திருந்தனர். அருட் தந்தை மொரிஸ் லு கொக் ஞாபகர்த்த கிண்ணம் கடந்த 2016ஆம் ஆண்டு வினு மொஹொட்டியின் தலைமயில் வெற்றியீட்டிய புனித பேதுரு கல்லூரி கரங்களில் உள்ளது. அதேநேரம் புனித ஜோசப் கல்லூரி, அணித் தலைவர் ருவந்த பெர்னாண்டோபுள்ளேயின் தலைமையில் 2008ஆம் ஆண்டு கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.

எதிர் வரும் சமரில் வெற்றிகொள்ளும் நோக்கில் இம்முறை புனித ஜோசப் கல்லூரி, இடதுகை சுழல்பந்து வீச்சாளர் ஹரின் குரேயின் தலைமையில் களமிறங்கவுள்ள அதேநேரம் அதிரடி துடுப்பாட்ட வீரர் லக்க்ஷின ரொட்ரிகோ புனித பேதுரு கல்லூரியை வழிநடத்தவுள்ளார்.

குறித்த இரண்டு பாடசாலைகளும் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய கிரிக்கட் வீரர்களை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்சேலோ மெதிவ்ஸ், சமிந்த வாஸ், திசர பெரேரா, திமுத் கருணாரத்ன, ஆஷ்லி டி சில்வா மற்றும் மைக்கல் வெண்டோர்ட் ஆகியோர் புனித ஜோசப் கல்லூரியை சேர்ந்தவர்களாவர். அதேநேரம் ரோய் டயஸ், ரொமேஷ் ரத்னாயக்க, தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர் ரசல் ஆர்னல்ட், வினோதன் ஜோன், அமல் சில்வா, கௌஷல் லொக்குஆராச்சி, மிலிந்த வர்னப்புற மற்றும் அஞ்சலோ பெரேரா ஆகியோர் புனித பேதுரு கல்லூரியில் இருந்து தேசிய அணிக்கு வந்தவர்களாவர்.      

வழமையான 60 ஓவர்களுக்கு முதல் இன்னிங்ஸ் மட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேநேரம் தேநீர் இடைவேளையை 15 நிமிடங்களுக்கு போட்டி இணைக்குழு குறைத்துள்ளது. அத்துடன் இவ்வருடம், இப்போட்டிக்காக முதல் தடவையாக போட்டி நடுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் பிரசித்தி பெற்ற நல்லையா தேவராஜன் போட்டி நடுவராக இவ்வருடம் கடமையாற்ற உள்ளார்.

புகைபடங்கள் : 83வது புனிதர்களின் சமருக்கான ஊடகவிலாளர் சந்திப்பு

மேலும், போட்டி ஏற்பாட்டாளர்கள் இம்முறை போட்டிக்கான பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளனர். இவ்விரு பாடசாலைகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் அதேநேரம் இம்முறையும் மாணவர்களுக்கிடையிலான புரிந்துணர்வுகளை மேம்படுத்த ஏற்பாட்டாளர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய புனித பேதுரு கல்லூரி அதிபர் அருட் தந்தை ட்ரெவர் மார்ட்டின், “நாங்கள் இந்த கிரிக்கெட் போட்டியை பற்றிப் பேசுகையில், மிகவும் உயர்தரத்தை பேணி வருகின்றோம். இரு கல்லூரிகளுக்குமிடையே சிறந்த நட்புறவை பேணி வருகின்றோம். கிரிக்கெட் போட்டிகளின் போது இவ்விரு பாடசாலைகளும் ஒன்றாக இருப்பதை நீங்கள் தெளிவாக பார்க்க முடியும்’’

புனித ஜோசப் கல்லூரியின் உபஅதிபர் அருட் தந்தை அன்டன் ரஞ்சித் கூறுகையில், ‘’மாணவர்கள் வெறும் பொழுதுபோக்குக்காக மாத்திரம் பார்க்காமல், கிறிஸ்த்தவ நல்லொழுக்கங்களையும் பின்பற்ற வேண்டும். அதனால் பாரம்பரிய மரபுகளை நிலைநிறுத்துவது எமது கடமையாகும்’’ என்று தெரிவித்தார்.

இவ்விரு பாடசாலைகளுக்கும் இடையிலான மட்டுப்படுதப்பட்ட ஓவர் போட்டிகள் மிக நீண்ட காலமாக நடைபெற்று வருகின்ற அதேநேரம் அருட் தந்தை பீட்டர் A. பிள்ளை கிண்ணத்துக்கான போட்டி மார்ச் 25ஆம் திகதி SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது. 1994ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக SSC மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த விறுவிறுப்பான போட்டியை கண்டு களிப்பதற்கு பெரும் திரளான ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை முதல்தர தொலைதொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டா பி.எல்.சி. தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் புனித பேதுரு மற்றும் புனித ஜோசப் கல்லூரிகளுக்கு இடையிலான புனிதர்களின் சமருக்கு அனுசரணை வழங்கவுள்ளது. டயலொக் நிறுவனம் மற்றும் டயலொக் ஆசியாட்டா பி.எல்.சி. குழு பிரதம அதிகாரி திரு. ஜெரமி ஹக்ஸ்டபிள், அனுசரணைக்கான காசோலையை இரண்டு பாடசாலைகளின் அருட் தந்தையருக்கும் வழங்கினார். டயலொக் தவிர்ந்த ஏனைய அனுசரணையாளர்களாக எலிபன்ட் ஹவுஸ், கீல்ஸ் க்ரெஸ்ட், நெஸ்லே மற்றும் ஜெட்விங் ஹோட்டல்ஸ் 83ஆவது புனிதர்களின் சமருக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.

இரண்டு நாட்களை கொண்ட இந்தப் போட்டி மற்றும் ஒரு நாள் போட்டி நேரலையாக டயலொக் தொலைகாட்சி மற்றும் முதல் தர விளையாட்டு இணையத்தளமான www.ThePapare.com வழியாகவும் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.