ரட்னமை வீழ்த்த இறுதி நிமிடத்தில் கோல் பெற்ற ரினௌன் வீரர் திலிப்

295

இலங்கையின் பழைமை வாய்ந்த இரு கால்பந்து கழகங்களான ரினௌன் மற்றும் ரட்னம் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் 12ஆவது வார மோதலில் இறுதி நேரத்தில் திலிப் பீரிஸ் பெற்ற கோலினால் ரினௌன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டம் ஆரம்பமாகி 5 நிமிடங்களில் ரட்னம் வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை, பெரியசாமி சித்திரகுமார் கோலுக்குள் ஹெடர் செய்தார். இதன்போது ரினௌன் கோல் காப்பாளர் ராசிக் ரிஷாட் பந்தை தடுக்க முயற்சித்த போதும், பந்து மிகவும் வேகமாக மேல் கம்பத்தில் பட்டு கோலுக்குள் சென்றது.  

சம்பியனாகப் போராடும் புளு ஸ்டாரை சமன் செய்தது ரட்னம்

சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு….

எனினும், முதல் கோலுக்கு பதில் கொடுக்கும் வகையில், அடுத்த சில நிமிடங்களில் ரினௌன் வீரர் டிலான் மதுசங்க மூலம் மத்திய களத்தில் இருந்து எதிரணியின் இரண்டு வீரர்களுக்கு இடையால் உள்ளனுப்பப்பட்ட பந்தை எதிரணியின் கோல் திசையில் இருந்து பெற்ற திலிப் பீரிஸ் ரட்னம் கோல் எல்லைவரை அதனை எடுத்துச் சென்று கோல் காப்பாளரின் தடைக்கு மத்தியில் பந்தை கோலுக்குள் செலுத்தினார்.  

ரட்னம் வீரர் அமான் பைசருக்கு வழங்கப்பட்ட பந்தை மத்திய களத்தில் இருந்து அவர் கோல் நோக்கி உதைய ரினௌன் கோல் காப்பாளர் ராசிக் ரிஷாட் பாய்ந்து வெளியே தட்டினார்.

இதனால் கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தையும் ரிஷாட் பாய்ந்து கம்பங்களுக்கு மேலால் வெளியே தட்டினார்.

தொடர்ந்து 28ஆவது நிமிடத்தில் ரிளெனன் அணித் தலைவர் ப்ரன்சிஸ் விட்ட தவறின்போது பந்தை எதிரணியின் கோல் எல்லையில் இருந்து பெற்ற ரட்னம் வீரர் சசன்க டில்ஹார கோல் நோக்கி உதைந்த பந்தை ராசிக் ரிஷாட் தடுத்தார். மீண்டும் அங்கு ரட்னம் வீரர்கள் மேற்கொண்ட கோல் முயற்சியையும் ரிஷாட் தடுத்தார்.

அடுத்த 3 நிமிடங்களில் மீண்டும் ரட்னம் வீரர்களுக்கு அடுத்தடுத்து தொடர்ச்சியாகக் கிடைத்த பல வாய்ப்புக்களையும் அவர்கள் சிறப்பாக நிறைவு செய்யத் தவறினர்.

போட்டியின் 40 நிமிடங்கள் கடந்த நிலையில் எதிரணியின் கோல் எல்லையில் தனிமையில் பந்தைப் பெற்ற ரினௌன் வீரர் அர்ஷாட் அதனை ரட்னம் கோல் எல்லைவரை தனிமையாக எடுத்துச் சென்று கோலுக்கு உதைகையில் ரட்னம் கோல் காப்பாளர் பஸ்ரீன் அதனைத் தடுத்தார்.

Photo Album :  Renown SC v Ratnam SC | Week 12 | Dialog Champions League 2018

இதன்போது மீண்டும் அர்ஷாட் உள்ளனுப்பிய பந்தை கோலுக்கு அண்மையில் இருந்து முர்ஷிட் உதைகையில் பந்து கம்பங்களை விட உயர்ந்து வெளியே சென்றது. இது போட்டியில் ரினௌன் அணிக்கு கிடைத்த மிகவும் சிறந்த கோல் வாய்ப்பாக அமைந்தது.

முதல் பாதி: ரினௌன் வி.க 1 – 1 ரட்னம் வி.க  

இரண்டாம் பாதியின் முதல் 5 நிமிடங்கள் கடந்த நிலையில் மைதானத்தில் ஒரு திசையில் இருந்து அகீல் உள்ளனுப்பிய பந்தை சித்திரகுமார் பாய்ந்து கோலுக்குள் செலுத்த, பந்து உயர்ந்து வெளியே சென்றது.  

தொடர்ந்து ரட்னம் அணிக்கு மத்திய களத்தில் கிடைத்த ப்ரீ கிக்கின்போது உள்ளனுப்பிய பந்தை ராசிக் ரிஷாட் பாய்ந்து குத்தி எதிர் திசைக்கு செலுத்தினார்.

அதன் பின்னரும் எதிரணி வீரர்களால் உள்ளனுப்பப்பட்ட பந்தையும் ராசிக் பாய்ந்து தடுத்தார்.

60 நிமிடங்கள் கடந்த நிலையில் எதிரணியின் கோல் எல்லையில் பந்தைப் பெற்ற சிதிரகுமார் பின்கள வீரர் பிரன்ஸிஸைத் தாண்டி கோல் நோக்கி உதைந்த பந்து ஒரு பக்க கம்பத்தை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

இரண்டாம் பாதியில் ரினௌன் வீரர்கள் மேற்கொண்ட முதல் முயற்சியாக டிலான் மதுசங்க ஒரு பக்கத்தில் இருந்து கோல் எல்லைக்குள் செலுத்திய பந்தை கோலுக்கு நிறைவு செய்வதற்குள் நுஸ்கான் தடுத்தார்.

அதன் பின்னர் ரினௌன் வீரர்கள் தமக்கான கோல் வாய்ப்புக்களை அதிகரித்தனர்.

சோண்டர்ஸை வீழ்த்தி தரப்படுத்தலில் முன்னிலை பெற்றது கொழும்பு

சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற டயலொக் சம்பியன்ஸ்…

68ஆவது நிமிடத்தில் ரினௌன் அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பிய பந்தை திமுது ப்ரியதர்ஷன கோலுக்குள் செலுத்த, இடது பக்க கம்பத்தை அணிமித்த வகையில் பந்து வெளியே சென்றது.

70 நிமிடங்கள் கடந்த நிலையில் மைதானத்தின் ஒரு திசையில் இருந்து முஜீப் உள்ளனுப்பிய பந்தைப் பெற்ற டிலான் மத்திய களத்தில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்து கம்பங்களை விட்டு வெளியே சென்றது.

போட்டி 80 நிமிடங்களை அண்மித்த நிலையில், டிலான் முன்னோக்கி வேகமாக எடுத்துச் சென்று கோல் திசைக்குள் செலுத்திய பந்தை அவ்வணி வீரர்கள் கோலுக்குள் செலுத்துவதற்குள் கோல் காப்பாளர் பந்தைத் தடுத்தார்.

அதனைத் தொடர்ந்து ரினௌன் வீரர்கள் போட்டியின் இறுதிப் பகுதியில் சற்று அதிக ஆதிக்கம் செலுத்தினர். அதன் பலனாக 90 ஆவது நிமிடத்தில் அவ்வணிக்கு வெற்றி கோல் கிடைத்தது.

ரினௌன் அணியின் தரப்பில் இருந்து வழங்கப்பட்ட பந்தை எதிரணியின் தரப்பில் இருந்து பெற்ற ரினௌன் வீரர் முஜீப், அதனை ஒரு வீரரைத் தாண்டி எடுத்துச் சென்று உள்ளனுப்ப, கோலுக்கு எதிரில் இருந்து திலிப் பந்தைப் பெற்றார். தடுப்பில் இருந்த 3 வீரர்களைக் கடந்து பந்தை முன்னோக்கி நகர்த்திய அவர் கோலின் இடது பக்கத்தினால் வலைக்குள் பந்தை செலுத்தினார்.

இந்த கோலுடன் ரினௌன் அணி மேலதிக ஒரு கோலினால் வெற்றியை சுவைத்தது.

முழு நேரம்:  ரினௌன் வி.க 2 – 1 ரட்னம் வி.க

ThePapare.com இன் ஆட்ட நாயகன்: திலிப் பீரிஸ் (ரினௌன் வி.க)

கோல் பெற்றவர்கள்

ரினௌன் வி.க – திலிப் பீரிஸ் 11’ & 90’

ரட்னம் வி.க –  பெரியசாமி சித்திரகுமார் 06’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

ரினௌன் வி.க – மொஹமட் ரியால் 20’, ஹகீம் காமில் 43’, டிலான் மதுசங்க

ரட்னம் வி.க – ஹசீம் அப்துல்லா 58’  

 >>இந்தப் போட்டியை மீண்டும் பார்வையிட <<